மாவளத்தன். (பி-ம்.) 2. ‘பொலந்தேர்’.
(ப-ரை.) மாண் இழை - மாட்சிமைப்பட்ட ஆபரணங்களை அணிந்தோய், நமர் - நம் தலைவர், தாமே செல்பஆயின் - நம்மைவிட்டுத் தாம் மட்டும் பிரிந்து செல்வாராயின்,கானத்து - காட்டினிடத்து, புலம் தேர் யானை கோட்டிடைஒழிந்த - மேய்புலத்தைத் தேடி செல்லும் யானையினதுகொம்பினிடத்தே முறிந்து தங்கிய, சிறு வீ முல்லைகொம்பின் - சிறிய பூக்களையுடைய முல்லைக் கொடியின்கொம்பைப்போல, இதழ் அழிந்து ஊறும் கண் பனி - இமையைக் கடந்து ஊறுகின்ற கண்ணீர்த்துளி, தாஅய் - பரவி, மதர் எழில் - மதர்த்த அழகையுடைய, பூண் அகம்வனம் முலை - அணிகலன்களைத் தன்னிடத்தே உடையஅழகையுடைய நின் நகில்களை, நனைத்தலும் காணார்கொல் - நனைத்தலையும் காணாரோ!
(முடிபு) மாணிழை, நமர் தாமே செல்பவாயின், காணார் கொல்லோ!
(கருத்து) தலைவர் நின் வருத்தத்தை யறிந்து போதலை யொழிவர்.
(வி-ரை.) தாமே செல்பவாயினென்றது, சென்றால் நின்னொடுசெல்வாரென்ற நினைவிற்று; தாமே: ஏ பிரிநிலை. புலம் - மேய்புலம்(குறுந். 344:3; மதுரைக். 303.) யானை கவளமாகக் கொண்ட பொழுதுமுல்லைக் கொடி ஒழிந்தது. யானைக்கோட்டிடைக் கொண்ட முல்லைஎந்தக் கணத்தில் அதன் வாயுட் புகுமோவென அறியாநிலையிலிருத்தலைப் போல இவள் எப்பொழுது உயிர் நீப்பாளோவென்ற நிலையில் இருப்பா ளென்று உவமையை விரித்துக் கொள்க. யானைக் கொம்பினிடத்தே உதிர்ந்து வீழும் சிறிய பூக்களையுடைய முல்லைக் கொம்பைப் போலவென்று பொருள் செய்து, யானைக்கொம்பை நகிலுக்கும் முல்லை மலரைக் கண்ணீர்த் துளிக்கும் உவமையாக்குதலும் ஒன்று.
இதழ் - இமை (குறிஞ்சிப். 247).
காணார் கொல்லோ வென்றது காண்பாராதலின் செல்லாரென்றநினைவிற்று; கொல்லோ: இரங்கற் பொருளில் வந்தது.
ஒப்புமைப் பகுதி 3. சிறுவீ முல்லை: சிறுபாண். 89: நற். 248:1.
4. கண்பனி: குறுந். 86:1, 365:2-6; நற். 197:3; கலி. 3:3, 10:13.
4-5. கண்ணீர் நகிலை நனைத்தல்: குறுந். 325:6; கலி. 77:4; புறநா. 143:13-5; சீவக. 2049.
(348)