சாத்தன். (பி-ம்.) 1. ‘அரும்பவி’, ‘சிதையமீன்’ 6. ‘தரவெனச்’, ‘தாவெனக் கூறலின்’, ‘சொல்லலும்’, ‘சொல்லினும்’ 7. ‘மின்னுயிரிழவே’.
(ப-ரை.) தோழி--, அடும்பு அவிழ் அணி மலர் - அடும்பின் கொடியினிடத்தே மலர்ந்த அழகிய மலரை,சிதைஇ - சிதைத்து, மீன் அருந்தும் தட தாள் நாரை - மீனை உண்ணுகின்ற வளைந்த காலையுடைய நாரை,இருக்கும் எக்கர் - தங்கியிருக்கின்ற மணல் மேட்டையுடைய,தண்ணந்துறைவன் தொடுத்து - தண்ணிய துறையையுடையதலைவனை வளைத்து, நம் நலம் கொள்வாம் என்றி - நாம் இழந்த பெண்மை நலத்தைப் பெறுவேமென்று கூறுகின்றாய், கொள்வாம் - அங்ஙனமே கொள்வேம், ஆயினும்இடுக்கண் அஞ்சி - தாம் உற்ற வறுமைத் துன்பத்துக்குஅஞ்சி, இரந்தோர் வேண்டிய - யாசிப்பவர் விரும்பி இரந்தவற்றை, கொடுத்து அவை தா என் சொல்லினும் - கொடுத்துப்பிறகு அங்ஙனம் கொடுத்த அவற்றைத் தருக என்று சொல்லுதலைக் காட்டிலும், நம் இன் உயிர் இழப்பு - நமது இனியஉயிரை இழத்தல், இன்னாதோ - இன்னாமையையுடையதோ? அன்று; ஆதலின் அது கருதிலேன்.
(முடிபு) தோழி, துறைவற்றொடுத்து நலம் கொள்வா மென்றி;கொள்வாம்; கொடுத்தவை தாவென் சொல்லினும் நம் இன்னுயிரிழப்புஇன்னாதோ?
(கருத்து) தலைவனை நலந்தாவெனக் கேட்டல் தக்கதன்று.
(வி-ரை.) மலர்மீது நின்று மீனை அருந்தலின் அம்மலர் சிதைந்தது. தண்ணந்துறைவன்: அம் சாரியை. ‘நம் நலம் தா' என்று தோழி கேட்டல்மரபு; "மாணலந் தாவென வகுத்தற் கண்ணும்" (தொல். கற்பு. 9) என்பதனாலும் இந்நூல் 236-ஆம் செய்யுளாலும் இது விளங்கும்.
இடுக்கண் அஞ்சித் தாவென் சொல்லினுமெனக் கூட்டிப் பொருள்கொண்டு, நமக்கு இடுக்கண் ஒன்று வருவதாயினும் அதற்கு அஞ்சிக்கொடுத்ததை மீட்டும் பெறல் இன்னாதென்ற கருத்தைக் கொள்க.
தலைவன் விரும்ப நாம் உடம்பட்டுக் கொடுத்த நலத்தை மீட்டும்கேட்டலினும், உயிரிழத்தல் நன்றென்றமையின் தலைவனைக் கடியற்கவென்பதை உணர்த்தினாள்.
(மேற்கோளாட்சி) மு. தோழி தலைவனைக் காய்தற்கண் தலைவி கூறியது;‘இது பிரித்தல்பற்றி வந்தது' (தொல். கற்பு. 6, இளம்.).
ஒப்புமைப் பகுதி 2. எக்கரில் நாரை இருத்தல்: "இனநாரை....எக்கர்மே லிறைகொள்ளு மிலங்குநீர்த் தண்சேர்ப்ப" (கலி. 126:3-5.)
1-2. மணல்மேட்டில் அடும்பங்கொடி படர்தல்: குறுந். 248:4-5.
2-3. எக்கர்த்துறை: குறுந். 53:5.
3-4. நலத்தைத் தாவென்றல்: குறுந். 236:2-6, ஒப்பு.
7. இன்னுயிர்: குறுந். 216:7, 334:5.
5-7. கொடுத்ததைத் திரும்பப் பெறாமை: "அலைகடல் கடையக் கண்டே னயனைந்து சிரமுங் கண்டேன், மலையிரு சிறகு கண்டேன் வாரிதி நன்னீர் கண்டேன், சிலைமதன் வடிவு கண்டேன், சிவன் சுத்தக்கழுத்துக் கண்டேன், குலவரி யிருகண் கண்டேன் கொடுத்ததை வாங்கக்காணேன்" (பழம் பாடல்.)
(349)