(தலைமகன்தமர் தலைவியை மணம்பேசுதற் பொருட்டு வந்தாராக,"அவருக்கு நமர் உடம்படுவார்கொல்லோ?" என்று ஐயுற்ற தலைவியைநோக்கி, "நமர் உடம்பட்டனர்" என்று தோழி கூறியது.)
 351.   
வளையோ யுவந்திசின் விரைவுறு கொடுந்தாள்  
    
அளைவா ழலவன் கூருகிர் வரித்த 
    
ஈர்மணன் மலிர்நெறி சிதைய விழுமென 
    
உருமிசைப் புணரி யுடைதருந் துறைவர்க் 
    
குரிமை செப்பினர் நமரே விரியலர்ப் 
5
புன்னை யோங்கிய புலாலஞ் சேரி 
    
இன்னகை யாயத் தாரோ 
    
டின்னுமற் றோவிவ் வழுங்க லூரே. 

என்பது தலைமகன்தமர் வரைவொடு வந்தவழி, "நமர் அவர்க்கு வரைவுநேரார் கொல்லா?" என்று அஞ்சிய தலைமகட்குத் தோழி வரைவு மலிந்தது.

அம்மூவன்.

     (பி-ம்.) 1. ‘வளையோய் வந்திசின்’, ‘விரவுங் கொடுந்தாள்’ 3. ‘ஈர்மண லீர்நெறி’ 4-5. ‘துறைவற்குரிய’ 6-7. ‘சேரியினகை யாய்த்தாயத்தாரே’.

    (ப-ரை.) வளையோய் - வளையை அணிந்தோய்,நமர் - நம் சுற்றத்தார், விரைவு உறு கொடு தாள் அளைவாழ் அலவன் - விரைதலையுடைய வளைந்த காலையுடைய வளையின்கண் வாழும் நண்டு, கூர்உகிர் வரித்த - தன் கூரிய நகத்தினால் கீறிய, ஈர் மணல் மலிர்நெறி சிதைய - ஈரமுள்ள மணலையுடைய நீருள்ள வழி சிதையும்படி,இழுமென - இழுமென்னும் ஓசையுண்டாக, உரும் இசைபுணரி உடைதரும் துறைவர்க்கு - இடியினது முழக்கத்தையுடைய அலைகள் உடையும் துறையையுடைய தலைவருக்கு, உரிமை செப்பினர் - நீ உரியாயென்றமையை உடம் பட்டுக் கூறினர்; உவந்திசின் - அதனையறிந்து நான் மகிழ்ந்தேன்; விரி அலர் புன்னை - விரிந்த மலர்களையுடைய புன்னை மரங்கள், ஓங்கிய - உயர்ந்து வளர்ந்த, புலால்சேரி - புலால் நாற்றத்தை யுடைய சேரியிடத்துள்ள, இன் நகைஆயத்தாரோடு - இனிய நகையையுடைய மகளிர் கூட்டத் தினரோடு, இ அழுங்கல் ஊர் - இந்த ஆரவாரத்தையுடையஊர், இன்னும் அற்றோ - இனியும் அலர்கூறும் அத்தன்மையையுடையதோ?

     (முடிபு) வளையோய், நமர் துறைவர்க்கு உரிமை செப்பினர்;உவந்திசின்; இவ்வூர் இன்னும் அற்றோ?

     (கருத்து) தலைவரது வரைவுக்கு நம் தமர் உடம்பட்டனர்.

     (வி-ரை.) தலைவியின் ஐயத்தைப் போக்க எண்ணியவள் அவள்உவப்பையடையும் பொருட்டு முதலில், “யான் உவந்தேன்” என்று கூறினாள்; அதனால் ‘இவள் கூறப்புகுவது நற்செய்தி” என்று தலைவி துணிவாள்.

     அலவன் வரித்த சிறுநெறி சிதைய அலை வீசுமென்பது, ஊரினர்கூறும் அலரெல்லாம் ஒழியத் தலைவன் மணந்து கொள்வானென்றகுறிப்பினது.

     வரித்தல் - கோலஞ்செய்தல்; இங்கே கோடு கோடாகக் கீறுதலென்று கொள்க. உடைதரும் - கரையின்மேல் மோதி உடையும். துறைவர்க்கு உரிமையென்றது அவருக்கே தலைவி உரியளென்றபடி; ஓர் ஆடவனுக்கு உரிய பொருள்கள் யாவற்றினும் சிறந்தமை பற்றி மனைவிக்கு ‘உரிமை’ என்னும் பெயர் அமைந்தமை இங்கே கருதற்குரியது (பெருங். 1.38:263-7).

     புலாலஞ்சேரி: அம் சாரியை. புன்னை மலரின் மணமும் புலாலின்நாற்றமும் ஒருங்கு வீசும் சேரியென்றது தலைவன் வரைவுக்கு உடம்படும்தமரும், வறிதே அலர்கூறும் ஆயமும் உடையதென்ற நினைவிற்று.

    ஒப்புமைப் பகுதி 1. கொடுந்தாளலவன்: ஐந். ஐம். 42.

    2-3. அலவன் வரித்த நெறி: “தண்சேறு கள்வன் வரிக்கும்” (ஐங். 28:2.)

    4. உருமிசைப் புணரி உடைதருதல்: அகநா. 310:16.

    3-4. இழுமென ஒலித்தல்: குறுந். 345:6, ஒப்பு.

    6. புன்னையோங்கிய சேரி: குறுந். 320:7, ஒப்பு.

    புலாலஞ் சேரி: குறுந். 320:1-4; நற். 101:1-5, 338:8; அகநா. 270:2.

    7. இன்னகையாயம்: பொருந. 85; சிறுபாண். 220; ஐங் . 397:5;பெருங். 1. 36:306, 48:70; பு. வெ. 75.

(351)