(ப-ரை.) பகல் - பகற் காலத்தில், கோடு உயர் நெடு வரை கவான் - கொடுமுடிகள் உயர்ந்த நீண்ட மலையினதுதாழ்வரையினிடத்தே, பாடு இன் அருவி - ஓசை இனிதாகியஅருவியில், ஆர் கலி வெற்பன் மார்பு புணை ஆக - நிறைந்தமுழக்கத்தையுடைய மலையையுடைய தலைவனது மார்புதெப்பமாக, ஆடுதல் இனிது - நீர்விளையாடல் இனிய,இரவில் - இராக்காலத்தில், பஞ்சி வெள் திரி செ சுடர் நல்இல் - பஞ்சாலாகிய வெள்ளிய திரியையுடைய செவ்வியவிளக்கையுடைய நல்ல வீட்டின் கண்ணே, அன்னை - நம் தாய், பின்னு வீழ் சிறு புறம் தழீஇ - பின்னல் தாழ்கின்ற பிடரியைத் தழுவி, முயங்க - அணைப்ப, நிரை
இதழ் பொருந்தா கண்ணோடு - வரிசையாகிய இமைகள் ஒன்றோடு ஒன்று பொருந்தாத விழிகளோடு, துயில் - நாம் துயிலுதல், இன்னாது - இன்னாமையையுடையது.
(முடிபு) பகலில் அருவியாடுதல் இனிது; இரவில் அன்னை முயங்கத்துயில் இன்னாது.
(கருத்து) காப்பு மிகுதியால் இரவுக்குறி பெறற்கு அரிது.
(வி-ரை.) ஆர்கலி - நிறைந்த ஆரவாரங்கள்; மலையிலுள்ளஆரவாரங்களைப் பற்றிய செய்திகளை ‘மலைபடுகடாம்’ என்னும் நூலிற்காணலாம். பகலே, இனிதே: ஏ அசை நிலை.
| “பெருவரை மிசையது நெடுவெள் ளருவி |
| முதுவாய்க் கோடியர் முழவிற் தும்பி” (குறுந். 78:1-2) |
என்று அருவியின் ஒலி சிறப்பிக்கப்படுதலின் அஃது இனியதாயிற்று.
அன்னை முயங்கவென்றது அவளது காவன்மிகுதியை உணர்த்திய படி; இதழ் பொருந்தாது துயிலுதலென்றது துயிலின்மையைக் குறித்தவாறு.
இதனால் இரவுக்குறி மறுத்தாளாயிற்று.
(மேற்கோளாட்சி) மு. இரவுக்குறி நயந்த தலைவன் சிறைப்புறமாக, பகற்குறிநேர்வாள்போல் தோழி இரவுக் காப்புமிகுதி கூறியது; ‘பாடின் னருவியாடலென்றாள் அதன்கண் உதவினானென்பது பற்றி; அல்லது களவிற்குஉடனாடுதல் இன்று’ (தொல். களவு. 23, ந.)
ஒப்புமைப் பகுதி 1. ஆர்கலி வெற்பன் மார்பு: நற். 104:7.
2. வரைக் கவான்: குறுந். 262:6, ஒப்பு.
3. பாடின்னருவி: “முழவின்னிசை மூரி முழங்கருவி” (சீவக. 1193).(கு-பு.) முழவினைப் போன்ற இனிய ஒலியையுடையவெனப் பொருள் கொள்க.
1-3. தலைவன் மார்பு புணையாக நீராடுதல்: “வவ்வுவல்லார்புணை யாகிய மார்பினை” (பரி. 6:80); “கூடியார் புனலாடப் புணையாய மார்பினில்” (கலி. 72:15); “ஒங்குவரை யிழிதரும் வீங்குபெய னீத்தம் ....பெருமலை நாடன் மார்புபுணை யாக, ஆடுகம் வம்மோ” (அகநா. 312:4-8).
தலைவி தலைவனோடு நீராடுதல்: “பெருங்க னாடனொடு .... பெருவரை யடுக்கத் தருவி யாடி”, “அங்க ணறைய வகல்வாய்ப் பைஞ்சுனை ... சார னாடனொ டாடிய நாளே”, “நாடனொடு, சூருடைச் சிலம்பி னருவியாடி” (நற். 259:3-5, 357:7-10, 373:4-5).
5. சுடர்: குறுந். 398:5.
6. பின்னுவீழ் புறம்: குறுந். 246:6, ஒப்பு.
7. அன்னையின் முயக்கத்தைத் தலைவி வெறுத்தல்: குறுந். 84:2.
6-7. சிறுபுறம் முயங்குதல்: அகநா. 19:19, 49:5-7.
(353)