கபிலர். (பி-ம். பரணர்.) (பி-ம்.) 1. ‘பெயல்கான், விசும்புகா ணலரே’ 2. ‘னிலங்காணலரே’6. ‘கமழுஞ்சிறுகுடி’
(ப-ரை.) ஓங்கல் வெற்ப - உயர்ச்சியையுடைய மலை யையுடைய தலைவனே, பெயல்கண் மறைத்தலின் - மழை இடத்தை மறைப்பதனால், விசும்பு காணலை - வானத்தைக்காண்பாயல்லை; நீர் பரந்து ஒழுகலின் - அம்மழையின் நீர் எங்கும் பரந்து ஓடுதலினால், நிலம் காணலை - நிலத்தைக்காண்பாயல்லை, எல்லை சேறலின் - சூரியன் போனமையால், இருள் பெரிது பட்டன்று - இருள் மிக உண்டாயிற்று;இந்நிலையில், பல்லோர் துஞ்சும் - பலரும் துயில்கின்ற, பால் நாள் கங்குல் - நள்ளிரவில், யாங்கு வந்தனை -எங்ஙனம் வந்தாய்? வேங்கை கமழும் - வேங்கைமரத்தின் மலர் மணம் வீசுகின்ற, எம் சிறு குடி - எமது சிற்றூரை, யாங்கு அறிந்தனை - எங்ஙனம் அறிந்தாய்? யான் நோகு - யான் வருந்துவேன்.
(முடிபு) வெற்ப, விசும்பு காணலை; நிலங்காணலை; இருள் பட்டன்று; யாமத்து யாங்கு வந்தனை? எம் சிறு குடி யாங்கு அறிந்தனை? யான் நோகு.
(கருத்து) நீ இவ்விரவில் வருதல் குறித்து அஞ்சுகின்றேன்.
(வி-ரை.) விசும்பு காணாமையின் விண்மீனொளியும் இலதாயிற்று. நிலம் காணாமையின் வழி காணற்கு அரிதாயிற்று. தானும் தலைவியும்துஞ்சாமையின், யாவரும் துஞ்சும் கங்குலென்னாது பல்லோர் துஞ்சும்கங்குலென்றாள். விசும்பு காணாமையின் திசையறிதலும், நீர் பரந்தொழு கலின் நிலமறிதலும், எல்லை சேறலின் நெறியறிதலும், ஊரின் ஒலியின்றித்துஞ்சுதலின் ஊரிடமறிதலும் அரியவாயின. ‘வேங்கை கமழும் எம் சிறுகுடி’ என்றது, ‘அவ்வேங்கை மலரின் மணத்தைக் கொண்டு எம் ஊரை அறிந்தனை போலும்!’ என்ற கருத்தைக் குறித்து நின்றது.
வந்தனையோ, அறிந்தனையோ: ஓ அசை நிலை. நோகோ: ஓ இரங்கற் குறிப்பு. ஏகாரங்கள்: அசை நிலை.
இதனால் இரவுக்குறி வருதல் அஞ்சுதற்கு உரியதென்று கூறிவரைவுகடா வினாள்.
(மேற்கோளாட்சி)மு. தலைவி இடையீடின்றித் தலைவனை எதிர்ப்படப் பெற்றஞான்று புதுவது மலிந்தமையின் அவள் கூறியது (தொல். களவு. 21, இளம்.); இரவுக்குறி வந்த தலைவனை நோக்கித் தலைவி கூறியது தொல். களவு. 20, ந.); தலைவி ஆற்றினது அருமை நினைந்து இரங்கியது (நம்பி. 158; இ.வி. 517.)
ஒப்புமைப் பகுதி 1. மழையால் விசும்பு மறைக்கப்படுதல்: (குறுந். 380:1-3); “தாழ்நீர் நனந்தலை யழுந்துபடப் பாஅய், மலையிமைப் பதுபோன்மின்னிச், சிலைவ லேற்றொடு செறிந்தவிம் மழைக்கே”, “முழங்கு கடன்முகந்த கமஞ்சூன் மாமழை, மாதிர நனந்தலை புதையப் பாஅய்” (நற். 112:7-9, 347:1-2).
2. மழைநீரால் நிலம் மறைதல்: “தூஉ யன்ன துவலை துவற்றலின், தேஎந் தேறாக் கடும்பரிக் கடும்பொடு” (மலைபடு. 363-4); “மாநிலந்தோன்றாமை மலிபெய றலைஇ” (பரி. திரட்டு. 2:1).
4. பல்லோர் துஞ்சும் கங்குல்: குறுந். 6:1-3, ஒப்பு. 244:1, ஒப்பு.
பானாள்: குறுந். 94:3, ஒப்பு.
5. ஓங்கல் வெற்ப: அகநா. 18:8.
5. மு.யா.வி. 95, மேற். “துணியிரும் பௌவம்”
6. வேங்கைமலர் கமழ்தல்: குறுந். 84:4; அகநா. 118;2, 218:21,268:3-4, 365:13-4, 378:2-4, 388:6-7; புறநா. 265:2.
சிறுகுடி: குறுந். 184:2, ஒப்பு.
வேங்கைமரம் வீட்டினருகில் இருத்தல்: குறுந். 266:3.
(355)