கபிலர். (பி-ம்.) 5. ‘சிறுதினைக் காக்குஞ்’ 7. ‘மின்படு’.
(ப-ரை.) பணை எழில் ஞெகிழ் தோள் - மூங்கிலினதுஅழகு நெகிழ்ந்த நின் தோள்கள், முனி படர் உழந்த - வெறுக்கத்தக்க துன்பத்தால் வருந்திய, பாடு இல் உண் கண் பனி - துயிலுதலில்லாத மையுண்ட கண்களில் உண்டாகும் துளி, கால் போழ்ந்து - குறுக்கே சென்று, மெல்லிய ஆகலின் -இப்பொழுது மெலிவையுடையவாதலினால், ஏனல் அம் சிறு தினை காக்கும் - தினைச் சாதியுள் அழகிய சிறிய தினையைக் காக்கின்ற, சேணோன் - பரணின் மேலுள்ள குறவனது, ஞெகிழியின் - கொள்ளிக் கட்டையினால், பெயர்ந்த -அஞ்சிப்போன, நெடு நல் யானை - உயர்ந்த நல்ல யானை யானது, மீன் படு சுடர் ஒளி - விண்மீன் வீழ்வதனால் உண் டாகிய மிக்க ஒளியை, வெரூஉம் - அஞ்சுகின்ற, வான் தோய் வெற்பன் - வானத்தை அளாவிய மலையையுடைய தலைவன், மணவா ஊங்கு - பொருந்துதற்கு முன்பு, மேவரத் திரண்டு - விரும்பும்படி பருத்து, நல்ல என்னும் சொல்லை மன்னிய - இவை நல்லன என்று கூறப்படும் சொற்களை அடைந்தன.
(முடிபு) தோள், வெற்பன் மணவாவூங்கு நல்லவென்னும் சொல்லைமன்னிய.
(கருத்து) தலைவன் வரையாது வந்தொழுகுதலின் நினக்குத் துன்புஉண்டாகின்றது.
(வி-ரை.) தலைவியின் வருத்தத்தையும் துயிலாது அழும் இயல்பையும் மெலிவையும் இதன் வாயிலாகத் தோழி தலைவனுக்கு அறிவித்தாள்.
‘இத்தோள்கள் எப்பொழுதும் நல்லன’ என்னும் சொல்லைப் பெறாமல், ‘முன்பு நல்லனவாக இருந்தன’ என்னும் சொல்லைப் பெற்றன;அதற்குக் காரணம் தலைவி துயருழந்து அழுதலால் மெலிந்து போனமையேயென்றாள்.
முன்பு நல்லவென்னும் சொல்லை மன்னிய வென்றதனால் அங்ஙனம் கூறுவார் சிலருளரென்பதும் தலைவியின் மெலிவு புறத்தார்க்குப் புலனாயிற்றென்பதும் போதரும். அதுகேட்ட தலைவன் அம்மெலிவின் காரணத்தை ஆராயப் புகுந்து வரைந்து கோடல் இதன் பயன்.
யானை தீயைக் கண்டு அஞ்சுமாதலின் ஏனல் காக்கும் சேணோன்தினையையுண்ண வாராதபடி ஞெகிழியை மூட்டினான். சேணோன்:குறுந். 150, வி-ரை.
ஒருமுறை ஒருபொருளால் அச்சமுற்ற ஒருவர் அப்பொருளைப் போன்ற வேறொன்றைக் கண்டாலும் அஞ்சுதல் இயல்பு; ‘கொள்ளிக் கட்டையால் அடிபட்ட பூனை மின்மினிப் பூச்சிக்குப் பயந்தது போல’என்பது ஒரு பழமொழி.
சேணோனது ஞெகிழிக்குப் பயந்த யானை, வீழும் விண்மீனைக்கண்டு அஞ்சும் இச்செய்தி,
| “பெருவிற் பகழிக் குறவர்கைச் செந்தீ |
| வெருவிப் புனந்துறந்த வேழம் - இருவிசும்பில் |
| மீன்வீழக் கண்டஞ்சும் வேங்கடமே மேலசுரர் |
| கோன்வீழக் கண்டுகந்தான் குன்று” (திவ். முதற்றிரு. 40) |
என்பதிலும் காணப்படுகிறது.
ஒப்புமைப் பகுதி 1. தலைவி துயிலாமை: குறுந். 6:4, ஒப்பு; நற். 327:2.
கண்பாடின்மை: குறுந். 5:5, ஒப்பு.
2. பணையெழில் ஞெகிழ்தோள்: “வேய்மருள் பணைத்தோணெ கிழ” (அகநா. 1:8) 1-2. தலைவன் பிரிவால் தலைவி அழுதல்: குறுந். 82:2, ஒப்பு. தலைவி துஞ்சாமையும் அழுதலும்; குறுந். 11:2, ஒப்பு. கண்ணும் தோளும் அழகழிதல்: குறுந். 377:1-2, 381:1-3. 6. நெடுநல்யானை: குறுந். 77:4, புறநா. 57:11, 72:4. ஞெகிழியால் யானையை அச்சுறுத்தல்: கலித். 52: 13-4.
5-6. சேணோன் ஞெகிழி: குறுந். 150:1, ஒப்பு.
யானை தினையை மேய்தல்: குறுந். 394:1-6; அகநா. 73:14-5.
6-7. ஞெகிழிக்கு விண்மீன்: குறுந். 150:1-2; நற். 393:4-7.
5-7. ஒரு பொருளால் உண்டாகிய அச்சம் அப்பொருளைப் போன்ற வேறு பொருளாலும் உண்டாதல்: பெரும்பாண். 284-8; நற். 189:7-10, 211:4-8; பெருங். 1, 37: 252-4.
8: நற். 299:9
மு. குறுந்.226.
(357)