கொற்றன். (பி-ம்.) 1. ‘விம்ம’ 2. ‘பேதுறல் யாங்கோடிட்டு’, ‘பேதுறவாய்’3. ‘வாயபற்று’, ‘வாஅயபற்று’ 6. ‘கோவலர்க்’ 7. ‘சொல்லுவ’, ‘சொல்லு’.
(ப-ரை.) வீங்கு இழை நெகிழ - செறிந்திருந்த அணி கலன்கள் நெகிழும்படி, விம்மி -அழுது, ஈங்கு - இவ்வாறு, எறிகண் பேதுறல் - நீர்த்துளிகளை வெளிவிடும் கண்ணோடு மயங்கற்க. ஆய் கோடு இட்டு - ஆராய்கின்ற கோடுகளைக் கிழித்து, சுவர்வாய் பற்றும் - சுவரினிடத்தைப் பற்றி நிற்கும், நின் படர் - நினது துன்பம், சேண் நீங்க வருவேம் - நெடுந் தூரம் போகும்படி மீண்டு வருவேம், என்ற - என்று தலைவர் கூறிய, பருவம் உதுக்காண் - பருவமானது இது பார், முல்லை மெல் முகை - முல்லையினது மெல்லிய அரும்புகள், தனியோர் இரங்கும் பனிகூர்மாலை - தலைவரைப் பிரிந்ததனிமையையுடையோர் வருந்துதற்குக் காரணமாகிய குளிர்ச்சி மிக்க மாலைக்காலத்தில், பல் ஆன் கோவலர் - பல பசுக்களை யுடைய இடையர்களது, கண்ணி - மாலையிடத்தே இருந்து,சொல்லுபஅன்ன - இப்பருவத்தைச் சொல்லுவனவற்றைப் போன்றன.
(முடிபு) பேதுறல்; நின் படர் நீங்க வருவேமென்ற பருவம் உதுக் காண்; முல்லைமென்முகை சொல்லுபவன்ன.
(கருத்து) தலைவர் கூறிச் சென்ற கார்ப்பருவம் வந்ததாதலின்அவர் விரைவில் வருவர்.
(வி-ரை.) பேதுற ஆய் கோடிட்டென்னும் பாடத்திற்குக் கண் மயங்கும்படி ஆராயும் கோடுகளை இட்டெனப் பொருள் கொள்க. தலைவர் வரும்நாளைச் சுவரிற் கோடிட்டுப் கணக்குப் பார்த்தல் மகளிர் இயல்பு;
| “வாளற்றுப் புற்கென்ற கண்ணு மவர்சென்ற |
| நாளொற்றித் தேய்ந்த விரல்” (குறள். 1261) |
மாலையில் கோவலர் தம் வீட்டிற்குத் திரும்பி வருகையில் முல்லையைக்கண்ணியாகக் கட்டி அணிந்து வந்தனர் (குறுந். 221:4-5)
ஒப்புமைப் பகுதி 1. இழைநெகிழ்தல்: குறுந். 188:3, ஒப்பு.
2-3. மகளிர் சுவரிற் கோடிட்டு நாட்கணக்குப் பார்த்தல்: “நாளிழை நெடுஞ்சுவர் நோக்கி நோயுழந், தாழல் வாழி தோழி”, “சேணுறை புலம்பி னாண்முறை யிழைத்த, திண்சுவர் நோக்கி நினைந்து” (அகநா. 61:4-5, 289:9-10); “மெல்விரலின், நாள்வைத்து நங்குற்ற மெண்ணுங் கொல்” (நாலடி. 394)
4. உதுக்காண்: குறுந். 81:4, ஒப்பு. 191:1, ஒப்பு.
6. பல்லான் கோவலர்: “முல்லைக் கண்ணிப் பல்லான் கோவலர்” (பதிற். 21:20).
6-7. முல்லை மலர்ந்து கார்காலத்தைத் தெரிவித்தல்: குறுந். 126:3-5. ஒப்பு.
(358)