(தலைவன் வரைபொருளின் பொருட்டுப் பிரிந்த காலத்தில் அப்பிரிவைத் தலைவி ஆற்றாளெனக் கவலையுற்ற தோழியை நோக்கித் தலைவி, “தலைவர் முன்பு பிரியேன் என்று சூளுறவு செய்து இப்பொழுது பிரிந்துறைய, அதனால் உண்டான வருத்தத்தைப் பொறுத்துக் கொண்டு யான் இருப்பவும் நீ வருந்துதல் முறையன்று” என்று உணர்த்தியது.)
 36.    
துறுக லயலது மாணை மாக்கொடி  
    
துஞ்சுகளி றிவருங் குன்ற நாடன்  
    
நெஞ்சுகள னாக நீயலென் யானென  
    
நற்றோண் மணந்த ஞான்றை மற்றவன்  
5
தாவா வஞ்சின முரைத்தது 
    
நோயோ தோழி நின்வயி னானே. 

என்பது வரைவிடை வைத்துப் பிரிய, ஆற்றாளெனக் கவன்று வேறுபட்ட தோழியைத் தலைமகள் ஆற்றுவித்தது.

    (பிரிய - தலைவன் பிரிய.)

பரணர்.

    (பி-ம்) 1. ‘மாண’ 3. ‘நீயலேன்’ ‘நீயலன்’ 5. ‘தவாஅ’.

    (ப-ரை.) தோழி -, துறுகல் அயலது - உருண்டைக் கல்லின் அயலில் உள்ளதாகிய, மாணை மா கொடி - மாணை என்னும் பெரிய கொடியானது, துஞ்சு களிறு இவரும் குன்றம் நாடன் - தூங்குகின்ற களிற்றின்மேல் படரும் குன்றங்களை உடைய நாட்டிற்குத் தலைவன், யான் ----, நெஞ்சு களனாக - நின் நெஞ்சு இடமாக இருந்து, நீயெலன் என - பிரியே என்று, நல் தோள் மணந்த ஞான்றை - எனது நல்ல தோளை அணைந்த பொழுது, அவன் - அத்தலைவன், தாவா வஞ்சினம் உரைத்தது - கெடாத உறுதிமொழியைக் கூறியது, நின்வயினான் - நின் திறத்தில், நோயோ - வருத்தத்திற்குக் காரணமாகுமோ? ஆகாதன்றே.

    (முடிபு) தோழி, நாடன் மணந்த ஞான்றை அவன் வஞ்சினம் உரைத்தது நின்வயின் நோயோ?

    (கருத்து) தோழி, தலைவன் வஞ்சினத்தை உரைத்து மறந்திருத்தல் எனக்குத் துன்பம் தருவது; அதனை நானே பொறுத்து ஆற்றியிருப்ப உனக்கு வருத்தம் உண்டாதற்குக் காரணமில்லை.

    (வி-ரை.) களிறு துறுகல்லைப் போன்று தோற்றுதலின் அக் கல்லில் ஏறும் மாணைக் கொடி களிற்றின்மேலும் படர்ந்தது. துறுகல் யானையைப் போலத் தோன்று மென்பதை இந்நூல் 13 - ஆம் செய்யுளாலும், அதன்மேற் கொடிகள் படரும் என்பதை, ‘‘முல்லை யூர்ந்தகல்’’ (குறுந் .275:1) என்பதனாலும் உணர்க. நெஞ்சுகளனாக என்பது நீயலெனென்பதன் முதனிலையோடு முடிந்தது. நெஞ்சிடமாக இருந்து புறத்தே உடனிராமற் பிரிதலைச் செய்யேனென்றபடி. தோள் மணத்தல்: அவையல் கிளவி. நற்றோளென்றது பழைய நிலையை உணர்த்தியபடி; இப்பொழுது மெலிந்ததென்னும் நினைவிற்று; பட்டாங்கு கிளந்ததுமாம். ஞான்றை: ஐ சாரியை. தாவா வஞ்சினம் என்றது அது கூறிய காலத்துத் தலைவியின் நினைவு; இப்பொழுது அது தவறியது என்பது குறிப்பு. நின்வயின் நோயோ என்றது, என் திறத்தன்றோ நோயாகும் நினக்கு நோயாதற்குக் காரணமில்லை என்றபடி; ஓகாரம் எதிர்மறைப் பொருளது.

    மாணைமாக்கொடி, துஞ்சுகின்ற அளவும் துறுகல் என்று தோற்றும் யானையின்மேற் படர்ந்து, துயில் நீங்கி அது சென்ற இடத்துப் பற்றுக்கோடின்றி இருத்தலைப் போல, தலைவன் தோள் மணந்து உடன் இருந்த அளவும் கெடாததாக இருந்த வஞ்சினத்தை மெய்யாகக் கருதி, மகிழ்ந்த யான், அவன் பிரிய வருந்துவேனாயினேன் என்பது குறிப்பு.

    நெஞ்சுகளனாக வஞ்சின முரைத்ததென்று கூட்டி, நெஞ்சம் இடமாகப் பிறந்த சூளுறவை உரைத்ததென்று பொருள் கூறலும் ஆம்.

    (மேற்கோளாட்சி) மு. தோழியைத் தலைவி ஆற்றுவித்தது (தொல். களவு.22, ந.)

    ஒப்புமைப் பகுதி 1. மாணைக்கொடி ‘‘வாங்கு வேய்ங்கழை துணித்தனன் மாணையின் கொடியால், ஓங்கு தெப்பமொன் றமைத்து’’ (கம்ப. வனம்புகு.36.)

    3. தலைவன் தலைவியின் நெஞ்சில் இருத்தல்: குறுந். 228:6, 340:7, குறள், 1128, 1130, 1204, 1205, 1218. 4. தோள் மணத்தல்: குறுந்.101:6

    5. தலைவன் வஞ்சினம் உரைத்தல் (குறுந். 53:6-7); ‘‘ஏமுறு வஞ்சினம் வாய்மையிற் றேற்றி’’ (குறிஞ்சிப். 210); ‘‘எஞ்சா வஞ்சின நெஞ்சுணக் கூறி’’ (நற்.214:6); ‘‘நெஞ்சுண, அரிய வஞ்சினஞ் சொல்லியும்’’ (அகநா. 175:6-7). 4-5. தலைவன் தலைவியின் தோளை மணந்த காலத்து வஞ்சின முரைத்தல் ‘‘பணையெழின் மென்றோ ளணைஇய வந்நாட், பிழையா வஞ்சினஞ் செய்த, கள்வன்’’ (குறுந். 318:6-8); ‘‘தோள்புதி துண்ட ஞான்றைச், சூள்’’ (அகநா. 320:13-4). 3-5. நீங்கேனென்று தலைவன் வஞ்சினமுரைத்தது; ‘‘நல்ல சொல்லி மணந்தினி, நீயே னென்ற தெவன்கொ லன்னாய்’’ (ஐங்.22:3-4); ‘‘நீங்கா வஞ்சினஞ் செய்துநத் துறந்தோர்’’ (அகநா. 378:18).

    மு. தலைவி ஆற்றாளென்று தோழி வருந்துதல் ‘‘நெஞ்சு நெகிழ் தகுந கூறி யன்புகலந், தறாஅ வஞ்சினஞ் செய்தோர் வினைபுரிந்து, திறம் வேறாக லெற்றென் றொற்றி, இனைத லான்றிசி னீயே’’ (அகநா. 267:1-4)

(36)