(தாய் வெறியெடுக்கவெண்ணியதைக் கூறி அஞ்சிய தோழிக்கு, “தலைவன் இங்கே வாராதொழியின் நன்றாம்; அதனால் துன்பம் உண்டாயினும் பின் இனிதாக முடியும்” என்று தலைவி கூறியது.)
  360.    
வெறியென வுணர்ந்த வேல னோய்மருந்  
    
தறியா னாகுத லன்னை காணிய  
    
அரும்பட ரெவ்வ மின்றுநா முழப்பினும்  
    
வாரற்க தில்ல தோழி சாரற்  
5
பிடிக்கை யன்ன பெருங்குர லேனல்  
    
உண்கிளி கடியுங் கொடிச்சிகைக் குளிரே  
    
சிலம்பிற் சிலம்புஞ் சோலை  
    
இலங்குமலை நாட னிரவி னானே. 

என்பது தலைமகன் சிறைப்புறத்தானாக வெறியஞ்சிய தோழிக்குச்சொல்லுவாளாய்த் தலைவி சொல்லியது.

மதுரை ஈழத்துப் பூதன் தேவன்.

     (பி-ம்.) 2. ‘காணி’ 6. ‘ஒண்கிளி’.

     (ப-ரை.) தோழி--, அரு படர் எவ்வம் - பொறுத்தற்கரியநினைவாலுண்டாகும் துன்பத்தை, இன்று நாம் உழப்பினும் - இன்று நாம் அடைந்தாலும், வெறி என உணர்ந்த வேலன் - எனது நோயைத் தீர்க்கும் வழி வெறியாடுதலென்று தெளிந்த வேலன், நோய் மருந்து அறியான் ஆகுதல் - அந்நோயைத் தீர்ப்பதற்கு உரிய பரிகாரத்தை அறியாதவன் ஆதலை, அன்னை காணிய - நம் தாய் காணும்பொருட்டு, சாரல் - மலைச்சாரலின் கண், பிடி கை அன்ன - பெண்யானையின்கையையொத்த, பெருகுரல் ஏனல் - பெரிய கதிர்க் கொத்தி லுள்ள தினையை, உண் கிளி கடியும் - உண்ணுகின்ற கிளி களை ஓட்டும், கொடிச்சி கை குளிர் - குறமகளின் கையிலுள்ளகுளிரென்னும் கருவி, சிலம்பின் சிலம்பும் - சிலம்பைப் போல ஒலிக்கின்ற, சோலை இலங்குமலை நாடன் - சோலை கள் விளங்கும் மலைநாடனாகிய தலைவன், இரவினான் - இராக்காலத்தே, வாரற்க - இங்கே வாராதொழிக; தில் - இஃது எனது விருப்பம்.

     (முடிபு) தோழி, நாடன் இரவினான் வாரற்க.

     (கருத்து) தலைவன் ஈண்டு வாராதொழிக.

     (வி-ரை.) தலைவன் இரவுக்குறி வந்தொழுகாநின்ற காலத்து, ஆற்றின் ஏதமும் காவன்மிகுதியும் அஞ்சித் தலைவி வேறுபட்டாள்; அவ்வேறுபாடு எற்றினான் ஆயிற்றென்பதைத்தாய் ஆராயப் புகுந்து வெறியாட்டெடுக்க எண்ணியதையறிந்து தலைவி கூறியது இது. தலைவன் சிறைப்புறத்தானாதலின் தலைவியின் கருத்தை உணர்வான்.

     “தலைவன் வாராமையால் என் நோய் மிகும்; வெறியாட்டெடுத்தவழியும், அந்நோய் மிகுதலை எண்ணித் தாய் வெறியாட்டு இதற்குமருந்தன்றென்று அறிவாள்; அங்ஙனம் அவள் அறிதற்கு ஏதுவாதலின்

தலைவன் வாராமை நமக்குத் துன்பத்தை இன்று தருவதாயினும், பின்நலம்பயக்கும்” என்று தலைவி கூறினாள்.

     தில்ல: விழைவின்கண் வந்த தில்லென்னும் இடைச்சொல் ஈறு திரிந்தது.

     சிலம்பிற்சிலம்பும் - மலைப்பக்கங்களில் எதிரொலியுண்டாக்குமெனினும் அமையும்.

     மேற்கோளாட்சி 1. ‘மங்குல்ஞாயிறு - இருளைக் கெடுக்கும் ஞாயிறு; இதனை, நோய்மருந்தென்றாற் போலக் கொள்க’ (பரி. 13:1, பரிமேல்).

     ஒப்புமைப் பகுதி 1-2. வேலன் நோய் மருந்து அறியாமை: “தோற்றமல்லதுநோய்க்குமருந் தாகா, வேற்றுப்பெருந் தெய்வம் பலவுடன் வாழ்த்தி” (குறுந். 263:3-4); “அறியா வேலற் றரீஇ யன்னை, வெறியயர் வியன்களம்பொலிய வேத்தி” (அகநா. 242:10-11).

     3. அரும்படர்: அகநா. 72:21.

     4. வாரற்க தில்ல: குறுந். 198:8. ஒப்பு.

     3-4. தலைவி வருந்தினாலும் தலைவன் வாராமை நன்று: “ஆய்மலர் மழைக்கண் டெண்பனி யுறைப்பவும் வேய்மருள் பணைத்தோள் விறலிழை நெகிழவும், அம்பன் மூதூ ரரவ மாயினும் .... வாரற்க தில்ல தோழி .... ஓங்குமலை நாடனின் னசையி னானே”, “மென்றோணெகிழ்ந்துநாம் வருந்தினு மின்றவர், வாரா ராயினோ நன்றுமற் றில்லை” (நற். 85:1-11, 255:6-7).

     5. தினைக்கதிர்க்குப் பிடியின் கை: குறுந். 198:3-4, ஒப்பு.

     5-6. தினையைக் கிளி உண்ணுதல்: குறுந். 133: 1-2.

     தினையிற் கிளி கடிதல்: குறுந். 198: 4-5, ஒப்பு.

     தலைவி குளிராற் கிளி கடிதல்: குறுந். 291:1-2, ஒப்பு.

(360)