(வரைவுக்குரிய முயற்சிகள் நிகழாநிற்ப, “இதுகாறும் நீ தலைவன் பிரிவை நன்கு ஆற்றினை” என்று கூறிப் பாராட்டிய தோழியை நோக்கி,“அவர் மலையிலிருந்து வந்த காந்தளை வளர்த்து ஆற்றினேன்” என்று தலைவி கூறியது.)
 361.   
அம்ம வாழி தோழி யன்னைக் 
    
குயர்நிலை யுலகமுஞ் சிறிதா லவர்மலை  
    
மாலைப் பெய்த மணங்கம ழுந்தியொடு  
    
காலை வந்த காந்தண் முழுமுதல்  
5
மெல்லிலை குழைய முயங்கலும்  
    
இல்லுய்த்து நடுதலுங் கடியா தோளே.  

என்பது வரைவுமலிந்தவழித் தோழி “நன்காற்றினாய்” என்றாட்குக்கிழத்தி சொல்லியது.

கபிலர்.

     (பி-ம்.) 2. ‘லவர்நாட்டு’ 3. ‘ழுத்தியொடு’ 4. ‘முழுமுதற்காந்தள்’ 3-4. ‘ழுந்தியேர் குலை நிவந்த’ 5. ‘மெல்விரல்’ 6. ‘விடுதலுங்’, ‘கடியா தோட்கே’.

     (ப-ரை.) தோழி--, அம்ம - ஒன்று கூறுவன் கேட்பா யாக: அவர் மலை - தலைவருடைய மலையிலே, மாலை பெய்த - மாலைக் காலத்திலே பெய்த மழையினால் உண் டாகிய, மணம் கமழ் உந்தியொடு - நறுமணம் கமழும் ஆற்றோடு, காலை வந்த காந்தள் முழுமுதல் - காலையிலே இங்கே வந்த காந்தளினது, மெல் இலை குழைய முயங்கலும் - மெல்லிய இலையானது குழையும்படி தழுவுதலையும், இல் உய்த்து நடுதலும் - வீட்டிற் கொணர்ந்து அதன் கிழங்கை நான் நடுதலையும், கடியாதோள் - விலக்காதவளாகிய, அன்னைக்கு - தாய்க்கு, உயர் நிலை உலகமும் - உயர்ந்த நிலையாகிய தேவருலகும், சிறிது - கைம்மாறாகக் கருது மிடத்துச் சிறிதாகும்.

     (முடிபு) தோழி, உந்தியொடு வந்த காந்தண் முழுமுதலை முயங்கலும் நடுதலும் கடியாதோளாகிய அன்னைக்கு உயர்நிலை யுலகமும் சிறிது.

     (கருத்து) தலைவன் மலையிலிருந்து வந்த காந்தளைக் கொண்டு ஆற்றியிருந்தேன்.

     (வி-ரை.) உயர்நிலை யுலகம் - உயர்ந்த நிலைமையையுடைய தேவருலகம் (மதுரைக். 471, ந.) சிறிதால்: ஆல் அசை. அவர்: நெஞ்சறி சுட்டு.

     மாலையிலே பெய்த மழையினால் உண்டாகிய அருவியை மாலைப்பெய்த உந்தியென்றாள்; பெய்த உந்தியென்பது “குண்டுசுனை பூத்த .... கண்ணி” (முருகு. 199) என்பது போலச் செயப்படு பொருண்மேல் நின்றது.

     காந்தள் முதலியவற்றின் மலர்களை மேற்கொண்டு வருதலின் மணங்கமழ் உந்தியாயிற்று. மலையில் மாலையிற்பெய்த மழையினால் உண்டாகிய அருவியால் பெயர்க்கப்பட்ட காந்தள் மறுநாட் காலையில்தலைவியின் ஊரருகே வந்தது. தம் தலைவரோடு தொடர்புடைய பொருள்களைத் தழுவுதலும் பாராட்டிப் போற்றுதலும் மகளிர் இயல்பு;அநுமான் இராமபிரானது ஆழியைக் கொடுத்தவுடன் சீதையின்பால்நிகழ்ந்தவற்றை,

  
“மோக்குமுலை வைத்துற முயங்குமொளிர் நன்னீர்  
  
 நீக்கிநிறை கண்ணிணை ததும்பநெடு நீள  
  
 நோக்குநுவ லக்கருது மொன்றுநுவல் கில்லாள்  
  
 மேக்குநிமிர் விம்மலள் விழுங்கலுறு கின்றாள்”    (உருக்காட்டு. 67) 

என்று கம்பர் கூறும் செய்யுளும், தலைவன் அளித்த கையுறையைத்தலைவி யேற்றமையைப் புலப்படுத்தும்,

  
“போயா னளித்தலுங் கைகுவித் தேற்றபின் போற்றியன்பாற்  
  
 சாயாத கொங்கையின் மேலணைத் தாடஞ்சை வாணன்வெற்பா  
  
 காயா மலரன்ன மேனிமெய் யாகநின் கையுறையை  
  
 நீயாக வல்லது மாந்தழை யாக நினைந்திலளே”     (தஞ்சை.129) 

என்னும் செய்யுளும் இங்கே அறிதற்குரியன.

     பலகால் முயங்கினமையின் இலை குழைந்தது.

     “தலைவனது மலையிலிருந்து ஆற்றினால் அடித்துக் கொணரப்பட்டகாந்தட் கிழங்கை நட்டு வளர்த்துப் போற்றி அதைக் காணும் போதெல்லாம் தலைவனைக் காண்பதாக நினைந்து ஆற்றினேன். அச்செயலை என்தாய் தடுத்திலள்” என்று தலைவி கூறினாள்.

     மேற்கோளாட்சி 2-6. அவன் தமர் உவத்தலென்னும் மெய்ப்பாடு வந்தது (தொல். மெய்ப். 22, பேர.்)

     மு. தலைவனைப் பெற்றவழி மகிழ்ந்து தலைவி தோழிக்கு உரைத்தது (தொல். களவு. 20, ந.).

     ஒப்புமைப் பகுதி 1. அம்மவாழி தோழி: குறுந். 77:1, ஒப்பு.

     1-2. தேவருலகத்தைப் பெறும்படி வாழ்த்துதல்: குறுந். 83:1-2, ஒப்பு.

     4. முழுமுதல்: குறுந். 214:5, 255:5; முருகு. 307.

     மு. ஒருவாறு ஒப்பு: குறுந். 83.

(361)