(வரைவுக்குரிய முயற்சிகள் மிகுதியாக நிகழ்தலைத் தோழியால் உணர்ந்த தலைவி, “இதுகாறும் மாமையை இழந்து துன்புற்றேன்; இனிஇடையீடின்றித் தலைவனோடு இன்புறுவேன்” என்று கூறியது.)
 368.    
மெல்லிய லோயே மெல்லிய லோயே 
    
நன்னா ணீத்த பழதீர் மாமை  
    
வன்பி னாற்றுத லல்லது செப்பிற் 
    
சொல்ல கிற்றா மெல்லிய லோயே 
5
சிறியரும் பெரியரும் வாழு மூர்க்கே 
    
நாளிடைப் படாஅ நளிநீர் நீத்தத் 
    
திண்கரைப் பெருமரம் போலத் 
    
தீதி னிலைமை முயங்குகம் பலவே. 

என்பது வரைவுமலிந்த தோழிக்குக் கிழத்தி கூறியது.

நக்கீரர்.

     (பி-ம்.) 3. 'வனப்பி னாற்றுதல்'; 7. 'திகல்கரைப்'.

    (ப-ரை.) (ப-ரை.) மெல் இயலோயே - மெல்லிய இயல்பை யுடையாய், மெல் இயலோயே--, நல் நாள் நீத்த பழி தீர் மாமை - நல்ல நாளிலே நம்மை நீங்கிய குற்றமற்ற மாமையின் இயல்பை, வன்பின் ஆற்றுதல் அல்லது - நம் வலிய இயல்பினாற் பொறுத்திருத்தலையன்றி, செப்பின் - அங்ஙனம் நீங்குதற்கு ஏதுவாகிய துன்பத்தைச் சொற்களால், சொல்ல கிற்றாம்- சொல்லுதற்கு ஆற்றல் இல்லேம், சிறியரும் பெரியரும் வாழும் ஊர்க்கு -சிறியோரும் பெரியோரும் வாழ்கின்ற ஊரில், நாள் இடை படா நளி நீர் நீத்தம் - ஒரு நாளேனும் இடையீடு படாத செறிந்த நீரையுடைய வெள்ளத்தினது, திண் கரை பெருமரம் போல - திண்ணிய கரையிலேயுள்ள பெரிய மரத்தைப் போல, தீது இல் நிலைமை - தீங்கில்லாத நிலையிலிருந்து, பல முயங்குகம் - பலமுறை தலைவரைத் தழுவுவேமாக.

     (முடிபு) மெல்லியலோயே, மாமை சொல்லகிற்றாம்; ஊர்க்கு முயங்குகம்.

     (கருத்து) இனி யாதொரு தீங்குமின்றித் தலைவரோடு கூடி யிருப்பேன்.

     (வி-ரை.) நல் நாளென்றது, தலைவனைக் கண்டு அளவளாவிய நாளை. மீண்டும் நம்பால் வந்தடையும் தன்மையதென்பது கருதிப் பழிதீர் மாமை யென்றாள். மாமை: ஆகுபெயர்; மாமையின் இயல்புக் காயிற்று. வன்பு - உள்ளத்தின் திண்மை.

    வெள்ளத்தின் கரையிலுள்ள மரம் நீராற் குறைவின்றி வளம் பெறுவது போல, தலைவனோடு இடையீடின்றி வாழும் வாழ்க்கையால் யான் இழந்த மாமையைப் பெற்று விளங்குவேனென்று உவமையை விரித்துக் கொள்க.

    தீதில் நிலைமை - அலர், மாமையை இழத்தல், ஆற்றூறஞ்சுதல் முதலிய தீங்குகள் இல்லாத நிலைமை.

     ஒப்புமைப் பகுதி 2. தலைவன் பிரிவினால் மாமை அழிதல்: குறுந். 27: 4-5. ஒப்பு. 6-7. குறுந். 388:1-2

(368)