(இரவுக்குறி வந்து ஒழுகாநின்ற தலைவன் சிறைப்புறத்தானாக,தலைவிக்குக் கூறுவாளாய், “இவ்வூரில் அலர் பெருகியது” என்றுதோழி வரைவின் இன்றியமையாமையைப் புலப்படுத்தியது.)
 372.    
பனைத்தலைக், கருக்குடை நெடுமடல் குருத்தொடு மாயக் 
    
கடுவளி தொகுத்த நெடுவெண் குப்பைக் 
    
கணங்கொள் சிமைய வணங்குங் கானல் 
    
ஆழிதலை வீசிய வயிர்ச்சேற் றருவிக் 
5
கூழைபெ யெக்கர்க் குழீஇய பதுக்கை 
    
புலர்பதங் கொள்ளா வளவை 
    
அலரெழுந் தன்றிவ் வழுங்க லூரே. 

என்பது இரவுக்குறி வந்து ஒழுகாநின்ற தலைமகன் கேட்பத் தோழிதலைமகட்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது.

விற்றூற்று மூதெயினனார் (பி-ம். வீற்றுளுத் தெயினார், வீற்றுறுத் தெயினான், வீற்றினாத் தேயினான்.)

     (பி-ம்.) 1. ‘குருந்தொடு’; 2. ‘நெடுவெளிக்’; 3. ‘வுணங்குங்’; 6. ‘விரவை’ ‘யுலர்பதங்கொள்ளா யிரவை’.

    (ப-ரை.) பனை தலை - பனையின் உச்சியிலுள்ள,கருக்கு உடை நெடு மடல் குருத்தொடு மாய - கருக்கையுடையநெடிய மடலானது குருத்தோடு மறைய, கடு வளி தொகுத்த -விரைவையுடைய காற்றுக் கூட்டிய, நெடு வெள் குப்பை - உயர்ந்த வெள்ளிய மணற்குவியலாகிய, கணம் கொள்சிமையம் - தொகுதியைக் கொண்ட சிகரத்தையுடைய,அணங்கும் கானல் - வருத்துகின்ற கடற்கரையில், ஆழிதலை வீசிய அயிர் சேறு அருவி - கடல் வீசிய கருமணற்சேற்றையுடைய அருவியால், கூழை பெய் எக்கர் குழீஇய பதுக்கை - கூந்தலினிடத்தே பெய்யப்படுகின்ற எக்கராகக் குவிக்கப்பட்ட குவியல், புலர்பதம் கொள்ளா அளவை - உலரும் செவ்வியை அடையாததற்குள், இ அழுங்கல் ஊர் - இந்த ஆரவாரத்தையுடைய ஊரில், அலர் எழுந்தன்று - பழிமொழி எழுந்தது.

     (முடிபு) பதுக்கை புலர்பதங் கொள்ளாவளவை இவ்வூரில் அலர் எழுந்தன்று.

     (கருத்து) இங்கே அலர் மிக்கது.

     (வி-ரை.) கடுவளி - மிக்க காற்றுமாம். குப்பையாகிய சிமையம். தனித்தவரை முனிவு செய்யும் பொழிலுடையதாதலின் (புறநா. 33:19,உரை) அணங்குங் கானலென்றாள். சேறுடைய அருவியாதலின்தலைமயிரிற் பெய்தற்குரிய மண்ணையுடையதாயிற்று (குறுந். 113:5,வி-ரை.) பதுக்கை புலர் பதங்கொள்ளா அளவை யென்றது தலைவன் வந்து சென்ற சுவடு மறைவதற்குள் என்ற குறிப்பையுடையது.

    பனைத்தலை: சீர், பாவின் முதலிற் கூனாய் நின்றது.

    ஏ: அசை நிலை.

     ஒப்புமைப் பகுதி 1. கருக்குடைய பனைமடல்: குறுந். 281:1.

     2. காற்றால் மணற்குவியல் உண்டாதல்: குறுந். 248:4-5, ஒப்பு.

     கடுவளி: குறுந். 39:1, ஒப்பு.

     1-2. மணற்சிமையம்: நற். 260:4;ஐங். 100:2; அகநா. 190:5-7.

     1-3. பனைமடல் மணலால் மூடப்படுதல்: (குறுந். 248:4-5, 281: 1-2); “தூங்க லோலை யோங்குமடற் பெண்ணை, மாவரை புதைத்த மணன்மலி முன்றில்”, “ஓங்குமண லுடுத்த நெடுமாப் பெண்ணை”(நற். 135:1-2, 199:1.)

(372)