(தலைவன் வரைவொடு புக்க காலத்துத் தமர் அவனை ஏற்றுக் கொண்டாராக, “யான் அறத்தொடு நிற்றலின் இது நிகழ்ந்தது” என்று தோழி தலைவிக்குக் கூறியது).
 374.    
எந்தையும் யாயு முணரக் காட்டி  
    
ஒளித்த செய்தி வெளிப்படக் கிளந்தபின் 
    
மலைகெழு வெற்பன் றலைவந் திரப்ப 
    
நன்றுபுரி கொள்கையி னொன்றா கின்றே 
5
முடங்க லிறைய தூங்கணங் குரீஇ 
    
நீடிரும் பெண்ணைத் தொடுத்த 
    
கூடினு மயங்கிய மைய லூரே. 

என்பது அறத்தொடு நின்றமை தோழி கிழத்திக்கு உரைத்தது.

உறையூர்ப் பல்காயனார் (பி-ம். பலாகாயனார், பலார்காயனார்,பராயனார்).

     (பி-ம்.) 4. ‘னொன்றோ வின்றே’, ‘னொன்றாயின்றே’; 7. ‘கூட்டினு’.

    (ப-ரை.) எந்தையும் யாயும் - நம் தந்தையும் தாயும், உணர காட்டி - உணரும்படி அறிவித்து, ஒளித்த செய்தி - நாம் இதுகாறும் மறைத்திருந்த களவொழுக்கத்தை, வெளிப்படகிளந்தபின் - வெளிப்படும்படி யான் சொன்ன பிறகு, மலைகெழு வெற்பன் - மலைகள் பொருந்திய தலைவன், தலைவந்து இரப்ப - தம்மிடத்தே வந்து வரைவினை இரப்ப,நன்று புரி கொள்கையின் - நமர் நன்மையைச் செய்யும் கொள்கையினால், முடங்கல் இறைய - வளைவையுடைய சிறகையுடையனவாகிய, தூங்கணங்குரீஇ - தூக்கணங் குருவி,நீடு இரு பெண்ணை தொடுத்த - உயர்ந்த பெரிய பனையினிடத்தே அமைத்த, கூடினும் - கூட்டைக் காட்டிலும்,மயங்கிய - பலவகையாக மயக்கத்தை அடைந்திருந்த, இமையல் ஊர் - இம் மயக்த்தையுடைய ஊரானது, ஒன்றுஆகின்ற - நம்மோடு ஒன்றுபட்டது.

     (முடிபு) உணரக்காட்டிக் கிளந்தபின் வெற்பன் இரப்ப நன்றுபுரி கொள்கையின் ஊர் ஒன்றாகின்று.

     (கருத்து) யான் அறத்தொடு நின்றமையின் நமர் தலைவனது வரைவுக்கு உடம்பட்டனர்.

     (வி-ரை.) வரைவு மலிந்தவிடத்து உள்ளமகிழ்ச்சியை யடையத் தலைவிக்குத் தோழி கூறியது இது. யாய் - எம் தாய்.

    “உட்கரந் துறையு முய்யா வரும்படர்” (குறிஞ்சிப். 32) என்றலின் ‘ஒளித்த செய்தி’ என்றாள்.

    வெற்பன்: தலைவனென்னும் துணையாய் நின்றது. நன்று புரிதல் - வரைதலாகிய நன்மையைச் செய்தல். ‘நமர் ஏற்றுக் கொண்டமையின்இதுகாறும் பலவாறு அலர் கூறிவந்த இவ்வூரினர் இப்பொழுது நம்மோடுஒன்றிய கருத்துடையராயினர்’ என்றாள். கூட்டினும் என்பது எதுகைநோக்கிக் கூடினுமென நின்றது. மையல் ஊரென்றது இத்தன்மைத்து இதுவென்னும் துணையாயும், மயங்கிய வென்றது அதன் மிகுதியைப் புலப்படுத்தியும் நின்றன (திருச்சிற். 102, பேர்.) ஏகாரங்கள் அசை நிலை.

     (மேற்கோளாட்சி) மு. நின்றமை தோழி தலைவிக்கு உரைத்தது. (தொல்.களவு.23, ந.).

     ஒப்புமைப் பகுதி 2. ஒளித்த செய்தியை வெளிப்படுத்துதல்: குறுந். 333:6.

     3. தலைவன் தலைவியின் தந்தையை இரத்தல்: அகநா. 280:4-14.

     5-7. தூக்கணங்குருவியின் கூடு: புறநா. 225:11.

     4-7. ஊரின் இயல்பு: புறநா. 83:5-6.

(374)