கபிலர். (பி-ம்.) 1. ‘பழமருந்தினக்கலை’, ‘பழந்தினினக்கலை’, 2. ‘சிலையிற்’;7.‘தாமிவ்’, ‘இப்பழங்கேளூரே’.
(ப-ரை.) பலவில் சேர்ந்த பழம் ஆர் இனம் கலை -பலாமரத்திற் பொருந்திய பழத்தை உண்ட திரளையுடைய ஆண் குரங்குகள், சிலைவில் கானவன் செதொடை வெரீஇ - சிலைமரத்தாற் செய்த வில்லையுடைய வேட்டுவனதுகுறிபிழையாச் செம்மையையுடைய அம்புத் தொடைக்குஅஞ்சி, செரு உறு குதிரையின் பொங்கி - போர்க்களத்தேஅடைந்த குதிரையைப் போல மேலெழுந்து, சாரல் இரு வெதிர் நீடு அமை தயங்க - சாரலிலுள்ள பெரிய மூங்கிலினதுநீண்ட கோல் அசைய, பாயும் - பாய்கின்ற, பெருவரைஅடுக்கத்து கிழவன் - பெரிய மலைப்பக்கத்தையுடைய தலைவன், என்றும் அன்றை அன்ன நட்பினன் - எப்பொழுதும்அன்றிருந்ததைப் போன்று மாறுபாடின்றி இருக்கும்நட்பையுடையான், அங்ஙனம் இருப்பவும், இ அழுங்கல்ஊர் - இந்த ஆரவாரத்தையுடைய ஊரானது, புதுவோர்த்து - என் மணங்குறித்து வந்த புதியவர்களையுடையது.
(முடிபு) கிழவன் என்றும் அன்றையன்ன நட்பினன்; இவ்வூர்புதுவோர்த்து.
(கருத்து) நொதுமலர் வரையப்புகுந்தனர்.
(வி-ரை.) சிலை - ஒருமரம் (கலி. 15:1, ந.); சிலைவில் - முழங்கும் வில்லெனலும் ஆம். கானவன் - பலாப்பழத்தைக் காக்கும் வேடன். செந்தொடை: செம்மை - நேர்மை; குறி பிழையாமையைக் கருதியது.போர்க்களத்துள்ள குதிரை மேலெழுதலை,
| “விட்ட குதிரை விசைப்பி னன்ன |
| விசும்புதோய் பசுங்கழைக் குன்ற நாடன்” (குறுந். 74:1-2) |
| “வெடிவேய் கொள்வது போல வோடித் |
| தாவு புகளு மாவே” (புறநா. 302:1-2) |
என்று கூறியவற்றாலும் அறிக. குதிரையிற் பொங்கி அமை தயங்கும்படி கலைபாயுமென்று கூட்டிப் பொருள்செய்தலும் பொருந்தும்.
அன்றையென்ற சுட்டு இயற்கைப் புணர்ச்சி நிகழ்ந்த நாளைக்குறித்தது. புதுவோர் - வரைவின்பொருட்டு வந்த புதியோர். பல நாட்பழகி நட்பு வலிபெற்ற தலைவன் ஒருவன் இருப்பவும் புதியராகிவந்தாரை இவ்வூர் இன்று உடையதாயிருத்தல் நகைத்தற்கிடமாயிற்றென்னுங் குறிப்பினால் அம்மவென்றாள்.
தோழிகேட்ப இங்ஙனங் கூறினமையின், வேற்றுவரைவினை மாற்ற வேண்டுமென்ற உள்ளக் கிடக்கையைத் தலைவி குறிப்பித்தாளாயிற்று.
மேற்கோளாட்சி மு. இறந்துபாடு பயக்குமாற்றால் தன்திறத்து நொதுமலர் வரையக் கருதிய ஞான்று அதனை மாற்றுதற்கண் தலைவி கூறியது (தொல். களவு. 20, ந.).
ஒப்புமைப் பகுதி 1. பலாப்பழத்தைக் குரங்கு உண்ணுதல்: குறுந். 342:1.
2. சிலைவில்: ஐங். 363:1; அகநா. 69:15; பெருங். 3.20:8.
செந்தொடை: புறநா. 3:20.
போர்க்குதிரை பொங்குதல்: “தாங்கன்மின் றாங்கன்மின்றானைவிறன்மறவிர், ஓங்கன் மதிலு ளொருதனிமா - ஞாங்கர், மயிரணியப் பொங்கி மழைபோன்று மாற்றார், உயிருணிய வோடி வரும்” (பு. வெ. 90)
6. அன்றையன்ன நட்பு: குறுந். 199:6; குறிஞ்சிப். 238 நற். 332:8; அகநா. 332:15; பெருங். 1.35:34.
7. அழுங்கலூர்: குறுந். 12:6, 140:5, ஒப்பு. 276:8, 289:8.
(385)