(தலைவன் பிரிந்த காலத்தில், “நீ ஆற்றல் வேண்டும்” என்றுவற்புறுத்திய தோழிக்கு, “மாலைக்காலமும் யாமமும் எனக்குத் துன்பத்தைத் தருவனவாயின” என்று தலைவி கூறியது)
 387.    
எல்லை கழிய முல்லை மலரக்  
    
கதிர்சினந் தணிந்த கையறு மாலையும்  
    
இரவரம் பாக நீந்தின மாயிவன்  
    
எவன்கொல் வாழி தோழி  
5
கங்குல் வெள்ளங் கடலினும் பெரிதே. 

என்பது பிரிவிடை வற்புறுத்துந் தோழிக்குக் கிழத்தி வன்புறை எதிரழிந்து கூறியது.

கங்குல் வெள்ளத்தார்.

     (பி-ம்) 2. ‘மாலை’; 3. ‘நிறைவரம்பாக’, ‘உயிரை வரம்பாக’; 5. ‘வெள்ளக்’.

    (ப-ரை.) தோழி--, எல்லை கழிய - பகல் நீங்க, முல்லை மலர - முல்லைக் கொடிகள் மலர, கதிர் சினம்தணிந்த - சூரியனது வெப்பம் குறைந்த, கை அறு மாலையும் -செயலறுதற்குரிய மாலைக் காலத்தையும், இர வரம்பு ஆக -இராப்பொழுது எல்லையாக எண்ணி அது வருமட்டும்,நீந்தினம் ஆயின் - கடந்தோமாயின், கங்குல் வெள்ளம் -அதன்மேல் வரும் அவ்விரவின் மிகுதி, கடலினும் பெரிது - கடலைக் காட்டிலும் பெரியது;, எவன் - நாம் மாலையைநீந்துவதால் வரும் பயன் யாது?

     (முடிபு) தோழி, மாலையும் நீந்தினமாயின் கங்குல் வெள்ளம் பெரிது; எவன்கொல்?

     (கருத்து) மாலையும் யாமமும் தலைவரது பிரிவை நினைவுறுத்தித் துன்பம் செய்வனவாம்.

     (வி-ரை.) முல்லை மாலையில் மலர்ந்தது. மாலையும்: உம்மை உயர்வுசிறப்பு. ‘‘செயலறுதற்குரிய மாலைக்காலத்தை நீந்தலே அரிது; அதனை நீந்தினும் பின்வரும் கங்குல் அதனினும் துன்பஞ் செய்வதிற் பெரிதாயிற்று” என்றாள். சிறுபுன் மாலையாதலின் நீந்தினேமாயினும் மேல்வருவது பெருங்கடலைப் போன்ற கங்குலென்று வருந்தினாள்.

    தலைவி இங்ஙனம் இவ்விரண்டு பொழுதிற்கும் வருந்துதல்,

  
“வந்தன்று வாழியோ மாலை 
  
 ஒருதா னன்றே கங்குலு முடைத்தே”    (குறுந். 122:3-4) 

என்று முன்னும் வந்தது.

    மாலையைக் கடலாகவும் அதன் பின்னர்த்தாகிய இராவை அதன் வரம்பாகவும் வைத்துக் கூறினாள்; ஒரு சிறுபொழுதை அடுத்து வரும்மற்றொரு சிறு பொழுதைக் கரையாகக் கூறும் இச் செய்யுளை நினைந்து பரிமேலழகர், ‘கூடிய ஞான்று பிரிவரென்று அஞ்சப் பண்ணிய காலை,அஃது ஒழிந்து இஞ்ஞான்று கங்குல் வெள்ளத்திற்குக் கரையாய் வாராநின்றது’ (குறள். 1225) என்று உரை எழுதினர்;

  
“முழங்குகடற் பட்டோ ருழந்துபின் கண்ட 
  
 கரையெனக் காலை தோன்றலின்”    (பெருங். 33:209) 

    இராவென்பது செய்யுளில் இரவென நின்றது (தொல். உயிர்மயங்கு. 32.) இரவரம்பென்றமையின் மாலையும் கடலாயிற்று; இஃதுஏகதேச வுருவகம்.

    எவன்கொல் - யாம் இனிச் செய்வது என் என்று பொருளுரைத்தலும் பொருந்தும்; கொல், வாழி, ஏ: அசை நிலைகள்; ஏ தேற்றமுமாம்.

    ஒப்புமைப் பகுதி 2. கதிர் சினந்தணிந்த மாலை: குறுந். 195:1-2.

    கதிரின் சினம்: குறுந். 195:1, ஒப்பு.

    கையறுமாலை: குறுந். 32:1, ஒப்பு.

    1-2. மாலையில் முல்லை மலர்தல்: குறுந். 108:4-5, ஒப்பு.

    4. வாழி தோழி: குறுந். 260:4, ஒப்பு.

    5. இரவுக்குக் கடல்: (குறுந். 240:6-7); “நிறைபுணையா, யாம நெடுங்கட னீந்துவேன்”, “இருண்மாலை வெள்ளத்துள்” (பு. வெ. 298, 328); “அல்லாழிக் கரைகண்டான்... துயராழி நெடுங்கடலுட்டுயில்கின் றானே” (கம்ப. மிதிலைக். 154); “கங்குற் கடற்கெல்லை” (இராசராச. 199)

(387)