(பாலைநிலவழியே சேர்ந்துபோகும் தலைவனையும் தலைவியையும் கண்டோர், “பொழுது போயிற்று; ஆறலை கள்வரால் ஏதம் நிகழும்”என்று அறிவுறுத்தி மேற்செல்லுதலைத் தடுத்தது.)
 390.    
எல்லு மெல்லின்று பாடுங் கேளாய் 
    
செல்லா தீமோ சிறுபிடி துணையே 
    
வேற்றுமுனை வெம்மையிற் சாத்துவந் திறுத்தென 
    
வளையணி நெடுவே லேந்தி 
5
மிளைவந்து பெயருந் தண்ணுமைக் குரலே. 

என்பது புணர்ந்துடன் போயினாரை இடைச்சுரத்துக் கண்டார் பொழுது (பி-ம். இப்பொழுது) செலவும் பகையுங் காட்டிச் செலவு விலக்கியது.

உறையூர் முதுகொற்றன்.

     (பி-ம்) 2. ‘சொல்லாதீமோ’; 5. ‘இளைவந்து’.

    (ப-ரை.) சிறுபிடி துணையே - சிறிய பிடிபோன்ற வளுக்குத் துணையாகியவனே, எல்லும் எல்லின்று -சூரியனும் விளக்கம் இலனானான், சாத்து வந்து இறுத்தென -வணிகர்கூட்டம் வந்து அடைந்ததாக, வேற்று முனை வெம் மையின் - பகைப்புலத்தே கொள்ளும் பகைமையைப் போல, வளை அணி நெடு வேல் ஏந்தி - வளையை யணிந்த நெடிய வேலை ஏந்தி, மிளை வந்து - காவற்காட்டினிடத்தே வந்து,பெயரும் தண்ணுமை குரல் - பெயரும் ஆறலைப்போரதுதண்ணுமையென்னும் வாத்தியத்தினுடைய முழக்கத்தினது, பாடும் கேளாய் - ஒலியையும் கேள் ஆதலின், செல்லாதீம் - நீவிரிருவரும் போதலை ஒழிமின்.

     (முடிபு) சிறுபிடி துணையே, எல்லும் எல்லின்று; குரலின் பாடும் கேளாய்; செல்லாதீம்.

     (கருத்து) மேலே இந்நிலத்திற் செல்லுதலைத் தவிர்மின்.

     (வி-ரை.) பாடும்; உம்மை இறந்தது தழீஇயது. ஓ; அசை நிலை. தலைவன் வலியனாயினும் உடன்வருவாள் பொருட்டேனும் செலவுதவிர்தல் வேண்டுமென்பது கண்டோர் கருத்தாதலின் ‘சிறுபிடி துணையே’ என்றார்.

    பாலைநிலத்திற் செல்லும் வணிகர்கூட்டத்தை எதிர்த்து அவரது பொருளைக் கைக்கொள்ளல் ஆறலைகள்வர்க்கு இயல்பு. ஆறலைகள்வர் தண்ணுமை யொலியைக் கேளாயென்றது, அவரால் நுமக்கு ஏதம் வருமென்பதை அறிவுறுத்தியபடி. குரலே; ஏ அசை நிலை. குரலினது பாடும் கேளாயென இயைக்க.

    (மேற்கோளாட்சி) மு. இடைச்சுரத்துக் கண்டோர் பொழுதும் ஆறும் உட்குவரத் தோன்றி வழுவினாகிய குற்றம் காட்டியது (தொல். அகத். 40, ந.)

    ஒப்புமைப் பகுதி 1. எல்லும் எல்லின்று: குறுந். 161:1, 179:2, ஒப்பு.

    2. செல்லாதீம்: குறுந். 350:2, ஒப்பு.

    3. வேற்றுமுனை: அகநா. 67:11, 131:12.

    5. ஆறலை கள்வரின் தண்ணுமை: “வேட்டக் கள்வர் விசியுறு கடுங்கட், சேக்கோ ளறையுந் தண்ணுமை, கேட்குநள் கொல்லெனக் கலுழுமென் னெஞ்சே” (அகநா. 63:17-9).

    3-5. ஆறலை கள்வர் சாத்தெறிதல்: அகநா. 167:7-9, 245:6, 291:13-5; பெருங். 1.52:26, 5:47-9.

(390)