(வரைவு நீட்டித்த காலத்துத் தலைவி தோழியை நோக்கி, “தலைவர் உடனுறையின் நீங்கியும் பிரியின் ஒன்றியும் நிற்கின்றது பசலை” என்றுகூறியது.)
 399.    
ஊருண் கேணி யுண்டுறைத் தொக்க 
    
பாசி யற்றே பசலை காதலர் 
    
தொடுவுழித் தொடுவுழி நீங்கி 
    
விடுவுழி விடுவுழிப் பரத்த லானே. 

என்பது வரைவு நீட்டித்தவிடத்துத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது.

பரணர்.

     (பி-ம்.) 1. ‘யுண்டுறை தொக்க’; 4. ‘வி்டுவுழி பரத்தலானே’.

    (ப-ரை.) தோழி, பசலை - பசலையானது, காதலர் - தலைவர், தொடுவுழி தொடுவுழி - நம்மைத் தீண்டுந்தோறும், நீங்கி - நம் உடலை விட்டு அகன்று, விடுவுழி விடுவுழி - பிரியுந்தோறும், பரத்தலான் - பரவுதலால், ஊர் உண் கேணிஉண்துறை தொக்க - ஊரினரால் உண்ணப்படும் நீரையுடையகிணற்றின் உண்ணுந் துறையினிடத்தே கூடிய, பாசி அற்று - பாசியைப் போன்றது.

     (முடிபு) பசலை, நீங்கிப் பரத்தலான் பாசியற்று.

     (கருத்து) பசலைநோய் மிக்கமையால் யான் வருந்துவேனாயினேன்.

     (வி-ரை.) ஊரால் உண்ணப்படும் நீரையுடைய கேணி; கேணி:ஆகுபெயர், நீருக்காதலின். பாசி மக்கள் நீர் கொள்ளுங்கால் விலகியும்பின் கூடியும் நிற்றல் போலப் பசலை தலைவன் முயங்குங்கால் நீங்கியும் பிரியுங்கால் பரந்தும் நின்றதென்றாள். எப்பொழுதும் தலைவனோடுறையப் பெறுவேனேல், பசலை நோய் முற்றுமொழியுமென்பதும் இவ்வுவமையாற் போந்தது.

     தொடுதல்: இடக்கரடக்கு. விடுவுழி விடுவுழியென்று பன்மை கூறியது வரையாது ஒழுகும் களவொழுக்கத்தில் அடுத்தடுத்துப் பிரிவு நேர்வதுகுறித்து.

    ஏகாரங்கள் அசை நிலை.

    (மேற்கோளாட்சி) மு. “பட்டரை ஒரு தமிழன், ‘கேட்டிரங்கி யென்னாதே,கண்டிரங்கி யென்னப்பெறுமோ?’ என்ன, ‘அணைத்தகை நெகிழ்த்தவளவிலே வெளுத்தபடி கண்டால் பிரியத்தகாதென்றிருக்க வேண்டாவோ?இப்படிக் கூடுமோ என்னில்: - புல்லி: இத்யாதி, காதலர் தொடுவுழி:இத்யாதி, உனக்கு இத்தமிழ் போதாதோ?’ என்றார்” (திருவாய்மொழி,1, 4:4, ஈடு.)

    ஒப்புமைப் பகுதி 2-4. பசலை தலைவன் தொடுவுழி நீங்குதலும் விடுவுழிப் பரத்தலும்: “விடுவழி விடுவழிச் சென்றாங்கவர், தொடுவழி நீங்கின்றாற் பசப்பே” (கலி. 130: 20-21.)

    பசலை தலைவன் விடுவுழிப் பரத்தல்: “முயங்காக்காற் பாயும் பசலை” (நாலடி. 391); “விளக்கற்றம் பார்க்கு மிருளேபோற் கொண்கன், முயக்கற்றம் பார்க்கும் பசப்பு”, “புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தே னவ்வளவில், அள்ளிக்கொள் வற்றே பசப்பு” (குறள், 1186, 1187.)

(399)