(பிரிவாற்றாமல் வருந்துகின்றாள் என்று கவலையுற்ற தோழிக்கு,'தலைவன் முன்பு எனக்குச் செய்த தண்ணளியை நினைந்து ஆற்றினேன்'என்பது புலப்படக் கூறியது.)
 4.    
நோமென் னெஞ்சே நோமென் னெஞ்சே  
    
இமைதீய்ப் பன்ன கண்ணீர் தாங்கி 
    
அமைதற் கமைந்தநங் காதலர் 
    
அமைவில ராகுத னாமென் னெஞ்சே. 

என்பது பிரிவிடை ஆற்றாளெனக் கவன்ற தோ.ழிக்குக் கிழத்திஉரைத்தது.

காமஞ்சேர் குளத்தார் (பி-ம். காமஞ்சொகினத்தார்).

     (பி-ம்) 1. ‘நோமே நெஞ்சே’

     (ப-ரை.) என் நெஞ்சு நோம் என் நெஞ்சு நோம்- எனது நெஞ்சம் வருந்தா நிற்கும், எனது நெஞ்சம் வருந்தா நிற்கும்; இமை தீய்ப்பு அன்ன-இமைகளைத் தீயச் செய்யும் கருவியைப் போன்ற வெம்மையைஉடைய, கண்ணீர் தாங்கி-எனது கண்ணீரைத் தாம் துடைத்து, 1. அமைதற்குஅமைந்த நம் காதலர் - அளவளாவுவதற்கு அமைந்த நம் தலைவர், அமைவு இலர் ஆகுதல்- இப்பொழுது மனம் பொருந்தாரய்ப் பிரிந்திருத்தலால், என் நெஞ்சு நோம்- எனது நெஞ்சம் வருந்தா நிற்கும்.

     (முடிபு) காதலர் அமைவிலராகுதலால் நெஞ்சு நோவா நிற்கும்.

     (கருத்து) தலைவர் இப்பொழுது உடனிராமையால் என் நெஞ்சு வருந்தும்.

     (வி-ரை.) நோம்- நோகும். நெஞ்சே:ஏ, அசை நிலை. கண்ணீர் தாங்கி- கண்ணீரைத் தடுத்து;என்றது துடைத்தலை; "அழாஅ லென்றுநம்மழுதகண் டுடைப்பார்’’ (குறுந்.82:2); கண்ணர் தாங்கியவராதலின் மீண்டும்அருள்வார் என்று நினைந்து ஆற்றுவேன் என்பது குறிப்பு. தாங்கி நோமெனஇயைத்துப் பொருள் கொள்ளுதலும் ஒன்று. அமைதற்கு-நாம் ஆற்றியிருத்தற்கெனலுமாம். பிரிவாற்றாமையால் வரும் கண்ணீராதலின் வெம்மையைஉடையதாயிற்று. ஆகுதலால் என் நெஞ்சு நோமென இயைக்க. மூன்றுமுறை அடுக்கியது ஆற்றாமை மிகுதி பற்றி.

     (மேற்கோளாட்சி) மு. முனிவுமெய்ந் நிறுத்தலென்னும் மெய்ப்பாட்டிற்குச்செய்யுள்' (தொல். களவு. 20,இளம்.) முனிவுமெய்ந் நிறுத்தல் -கள வொழுக்கத்தான் வந்த துன்பத்தைப் பிறர்க்குப் புலனாகாமைமெய்யின்கண்ணே நிறுத்தல் என்பர் இளம்பூரணர்; பேராசிரியர் வேறு கூறுவர்.

     ஒப்புமைப் பகுதி 1. என் நெஞ்சு; குறுந் 11:4, 306:4, நோம் என் நெஞ்சு:(குறுந். 202:1,5); "நொதும லாட்டிக்கு நோமென் னெஞ்சே’’ (நற்.118:11,312:1);"இவட்குமருந் தன்மை நோமென் னெஞ்சே’’ (ஐங். 59:4)

     2. பிரிவாற்றாமையால் வரும் கண்ணீர் வெப்பமுடையதாதல்: "நறவின்,சேயித ழனைய வாகிக் குவளை, மாயிதழ் புரையு மலர்கொ ளீரிமை, உள்ளகங் கனல வுள்ளுதொ றுலறிப், பழங்கண் கொண்ட கலிழ்ந்துவீழவிரறல், வெய்ய வுகுதர’’ (அகநா.19:9-14); ‘‘இமை தீர் வெம்பனி’’(பெருங்.1.40:192, குறிப்புரை.)‘‘கண்கள் வெம்பனி யுகுத்தவன்றே’’(சீவக.2508); "கண்ணுகும் வெய்யநீர் வெள்ளத்து’’ (கம்ப.தைலமாட்டு.2.)

     3. அமைதற்கமைந்த: "அமைந்தாங் கமைக’’ (குறுந். 175:7);"நம்மறந் தமைகுவ னாயி னாமறந், துள்ளா தமைதலு மமைகுவ மன்னே’ (ஐங்.36:2-3.)

(4)
 1.  
அமைதற்கு அமைந்த - தெய்வத்தால் நம்
இறைவராதற்குப் பொருந்திய குறள். 1155 பரிமேல்.