(தெய்வத்தாலாகிய கூட்டத்தின்பின்பு தலைவி, தலைவன் பிரிவா னோவென ஐயுற்றவிடத்து அதனைக் குறிப்பாலறிந்த தலைவன் ‘ஒரு தொடர்பு மில்லாத நாம் ஊழின் வன்மையால் ஒன்றுபட்டோ மாதலின் இனி நம்மிடையே பிரிவு உண்டாகாது’ என்று உணர்த்தியது.)
 40.    
யாயு ஞாயும் யாரா கியரோ  
    
எந்தையு நுந்தையு மெம்முறைக் கேளிர் 
    
யானு நீயு மெவ்வழி யறிதும் 
    
செம்புலப் பெயனீர் போல 
5
அன்புடை நெஞ்சந் தாங்கலந் தனவே. 

என்பது இயற்கைப் புணர்ச்சி புணர்ந்தபின்னர், பிரிவரெனக் கருதி அஞ்சிய தலைமகள் குறிப்பு வேறுபாடு கண்டு தலைமகன் கூறியது (பி-ம். கூறுகின்றது)

    (குறிப்பு வேறுபாடு - எண்ணத்தின் வேறுபாடு; என்றது இவர் பிரிவர்போலுமென்று கருதிக் கவலையுறுதல்.)

செம்புலப் பெயனீரார் (பி-ம். செம்புலப் பெய்ந்நீரார்.)

    (பி-ம்) 1. ‘யாயுமாராகியரோ’ 3. ‘நானு நீயும்’ 4. ‘பெய்ந்நீர்’

    (ப-ரை.) யாயும் - என்னுடைய தாயும், ஞாயும் - நின் தாயும், யார் ஆகியர் - ஒருவருக்கொருவர் எத்தகைய உறவின் முறையினராவர்? எந்தையும் - என் தந்தையும், நுந்தையும் -நின் தந்தையும், எ முறைகேளிர் - எந்த முறையில் உறவினர்? யானும் நீயும் - இப்பொழுது பிரிவின்றியிருக்கும் யானும் நீயும், எ வழி அறிதும் - ஒருவரையொருவர், எவ்வாறு முன்பு அறிந்தோம்? இம்மூன்றும் இல்லையாகவும், செபுலம் பெயல் நீர் போல - செம்மண் நிலத்தின்கண்ணே பெய்த மழைநீர் அம்மண்ணோடு கலந்து அதன் தன்மையை யடைதல் போல, அன்பு உடை நெஞ்சம் - அன்புடைய நம் நெஞ்சம், தாம் கலந்தன - தாமாகவே ஒன்றுபட்டன.

    (முடிபு) யாயும் ஞாயும் யாராகியர்? எந்தையும் நுந்தையும் எம்முறைக்கேளிர்? யானும் நீயும் எவ்வழி அறிதும்? நெஞ்சம் கலந்தன.

    (கருத்து) இனிப் பிரிவரிது.

    (வி-ரை.) யாய் - என்தாய்; இச்சொல் தன்மையோடு தொடர்புடைய தென்பது, ‘யாயென்பது தன்மையோடு ஒட்டுதலின் முறைப்பெயரெனினும் உயர்திணையாம்’ (தொல். பெயர், 26) என நச்சினார்க்கினியரும், ‘யாயென்பதோவெனின் தன்மையோடடுத்தமையின் முறைப்பெயரேனும் உயர்திணையெனப்படும்’எனக் கல்லாடரும் எழுதிய உரைப்பகுதிகளால் தெளிவாகும். யாய், ஞாய், தாய் என்னும் மூன்றும் முறையே என் தாய், நின்தாய், அவர் தாயென மூவிடத்தோடும் ஒட்டி வருவன; ‘இம் மூன்றிடத்தும் ஒட்டுப்பட்ட பெயர்கள் ஆறாம் வேற்றுமை முறையைக் குறித்து மேற்சொல்லியவாற்றான் தந்தை, நுந்தை, எந்தை எனவும்; தாய், ஞாய், யாய், எனவும்; தம்முன், நும்முன், எம்முன் எனவும்; தம்பி, நும்பி, எம்பி எனவும் முதல்வனையும், ஈன்றாளையும், முன்பிறந் தானையும், பின் பிறந்தானையும் உணர்த்தும் பன்மைச் சொற்கள்’ (தொல். எச்ச. 14) என்று தெய்வச் சிலையார் எழுதியுள்ள அரிய உரைப்பகுதியால் இது புலப்படும்.

    அறிதுமென்றது எதிர்காலம் இறந்தகாலப் பொருளில் வந்தது.

    செம்மண்ணிலத்துப் பெய்த நீரானது அம்மண்ணோடு கலந்து அதன் நிறத்தையும் சுவையையும் பெற்று ஒன்றுபடுவது போல நம் நெஞ்சம் ஒன்றோடொன்று கலந்து தன்மைகள் ஒன்றுபட்டனவென்று உவமையை விரித்துக் கொள்க. நெஞ்சுகலந்தமைக்குச் செம்புலப் பெயனீரை உவமை கூறிய சிறப்பால் இச்செய்யுளின் ஆசிரியர் 'செம்புலப் பெயனீரார்' என்னும் சிறப்புப் பெயர்பெற்றார். நெஞ்சங் கலந்தனவென்பது உள்ளப் புணர்ச்சியைக் குறித்தபடி; ‘உள்ளப் புணர்ச்சியு மெய்யுறு புணர்ச்சியும், கள்ளப் புணர்ச்சியுட் காதலர்க் குரிய (நம்பி.34).

    ‘நம்மைப் பெற்றோரிடையேனும் நம்மிடையேனும் இதற்கு முன் ஒரு தொடர்பும் இல்லை; அங்ஙனம் இருப்பவும் நம் ஊழ்வினையின் வன்மையினால் இப்பொழுது ஒன்றுபட்டோம்; ஆதலின் இனிப் பிரிவு நேராது’ என்று தலைவன் புலப்படுத்தித் தலைவியின் அச்சத்தை நீக்கினான்.

    ஓகாரமும் ஏகாரமும் அசைநிலை.

     (மேற்கோளாட்சி) மு. களவுக்காலத்து வருந்திய வருத்தந்தீரத் தனது காதல் மிகுதி தோன்றச் சொல்லுதற்கண் தலைவனுக்குக் கூற்று நிகழ்ந்தது (தொல் .கற்பு. 5, இளம்); பிரிவரெனக் கருதிய தலைவியின் குறிப்புணர்ந்து தலைவன் கூறியது (தொல். களவு.10, ந. 11, இளம்); நம்மானன்றி நெஞ்சம் தம்மிற்றாம் கலத்தலின் தெய்வத்தானாயிற்றெனத் தலைவன் தலைவியைத் தெருட்டியது (தொல்.கற்பு.5,ந); தெளித்தல் (தமிழ்நெறி.15); தலைவன் பிரியேனென்றது (நம்பி.129).

    ஒப்புமைப் பகுதி 1. ஞாய் ;கலி.81:12, 85:28, 36, 107:25. “்யாராகியர்; குறுந்.110:2 செம்புலப்பெயனீரின் தன்மை: “நிலத்தியல்பா னீர்திரிந் தற்றாகு மாந்தார்க், கினத்தியல்ப தாகு மறிவு”, “நிலத்தொடு, நீரியைந் தன்னார்” (குறள்.452,1323);”அப்பென்றும் வெண்மைய தாயினு மாங்கந் நிலத்தியல்பாற், றப்பின்றி யேகுண வேற்றுமை தான்பலசார்தலினால்”(திருவேகம்பமாலை); ”செந்நில முகுநீர் போலச் செல்விமான் மயமே யாகி”(பிரபு.5:17)

(40)