அம்மூவன். (பி-ம்.) 3. ‘னார்மலர்’; 4. ‘பரக்குங்’; 5. ‘நக்குவளை’, ‘கடிதன்று’6. ‘றைதெமக்கம்ம’, ‘றைதேய்கம்ம’, ‘றைதேயம்மல’, ‘றைதேகாமம்’.
(ப-ரை.) அடும்பின் ஆய் மலர் விரைஇ - அடும்பினது அழகிய மலரைக் கலந்து, நெய்தல் நெடு தொடை வேய்ந்த-நெய்தலாலாகிய நெடிய மாலையை யணிந்த, நீர் வார் கூந்தல் - நீர் ஒழுகிய கூந்தலையுடைய, ஓரை மகளிர் அஞ்சி - விளையாட்டு மகளிரை அஞ்சி, ஈர் ஞெண்டு - ஈரத்தையுடையநண்டு, கடலில் பரிக்கும் துறைவனொடு - கடலுக்குள்ஓடும் துறையையுடைய தலைவனோடு, ஒரு நாள் நக்குவிளையாடலும் - ஒரு நாள் நகைத்து விளையாடுதலையும்,மெய் தோய் நட்பு - அவனுடைய மெய்யைத் தோய்ந்தநட்பானது, கடிந்தன்று - நீக்கியது, ஐதேகம்ம - இதுவியத்தற்குரியது.
(முடிபு) நட்பு கடிந்தன்று; ஐதேகம்ம.
(கருத்து) தலைவனோடு அளவளாவியதனால் உண்டான வேறுபாடு அவனைக் காணாமலிருக்கச் செய்தது.
(வி-ரை.) பகற் குறியிடத்துத் தலைவனோடு மெய்யுறு புணர்ச்சி நிகழ்த்தினமையின் தலைவியின்பால் வேறுபாடுகள் உண்டாயின;அவற்றை நோக்கிய தாய் அவளை இற்செறித்தாளாக. அதுமுதல்பழம்படியே தலைவனோடு விளையாடுதலும் அரிதாயிற்று.
அடும்பு: கடற்கரையில் வளருங் கொடி (குறுந். 243: 1-4, 248: 3-5, 349: 1-3.)
கடனீராடி மாலை வேய்ந்தனராதலின் நீர்வார் கூந்தலுடையராயினர். மகளிர் நீராடிக் கூந்தலில் மாலைகளை அணியும் வழக்கம்,
| “அவிர்துகில் புரையு மவ்வெள் ளருவித் |
| தவிர்வில் வேட்கையேந் தண்டா தாடிப் |
| ........ ........ ........ ........ |
| பின்னிருங் கூந்தல் பிழிவனந் துவரி |
| ........ ........ ........ ........ |
| பல்வே றுருவின் வனப்பமை கோதையெம் |
| மெல்லிரு முச்சிக் கவின்பெறக் கட்டி” (குறிஞ்சிப். 55-104) |
என்பதனாலும் பெறப்படும்.
மகளிர் அலவனாட்டுவராதலின் அவருக்கு அஃது அஞ்சியது. விளையாடலும்: உம்மை இழிவு சிறப்பு.
ஐது - வியப்பைத் தருவது; ஏகு: அசை நிலை; அம்ம: வியப்பிடைச் சொல். நட்பே: ஏ அசைநிலை.
ஐதேகாமமென்னும் பாடத்திற்குக் காமம் வியக்கத்தக்கதென்று பொருள் கொள்க; காமம் - மெய்யுறுபுணர்ச்சி.
“மெய்தோய்ந்த நட்பு, கண்டு நகுதலையும் போக்கியதுவியத்தற்குரியது” என்று கூறினாள்.
(மேற்கோளாட்சி) மு. தன் தோற்றப்பொலிவாகிய வேறுபாடு கண்டு தமர் தன்னை இற்செறித்தமையைத் தலைவி தன்னுள்ளே கூறியது (தொல். களவு. 20, ந.)
ஒப்புமைப் பகுதி 1. அடும்பின் ஆய்மலர்: “ஆய்பூ வடும்பி னலர்” (கலி. 144:30.)
2. நீர்வார் கூந்தல்: குறுந். 294:1.
3. ஓரை மகளிர்:குறுந்: 48:3, ஒப்பு.
1-3. மகளிர் அடும்பின் மலரை அணிதல்: “மாக்கொடி யடும்பின் மாயித ழலரி, கூந்தன் மகளிர் கோதைக் கூட்டும்” (நற். 145: 2-3); “அடும்பி னலர்கொண் டுதுக்காணெம், கோதை புனைந்த வழி”(கலி. 144: 30-31.)
மகளிர் நெய்தற்றொடை யணிதல்; “நெய்தற் பூவுட னெறிதரூஉத் தொடலை, தைஇ” (நற். 96: 7-8); “கடலாடு மகளிரும், நெய்தலம் பகைத்தழைப் பாவை புனையார், உடலகங் கொள்வோ ரின்மையிற், றொடலைக் குற்ற சிலபூ வினரே” (ஐங். 187: 2-5.)
6. ஐதேகம்ம: நற். 52:11, 240:1.
மெய்தோய் நட்பு: குறுந். 61:4,247:7. தலைவனது நட்பு: குறுந். 247: 6-7, ஒப்பு.
(401)
குறுந்தொகை முற்றும்
இத்தொகை முடித்தான் பூரிக்கோ.
இத்தொகை பாடிய கவிகள் இருநூற்றைவர்.
இத்தொகை நாலடிச் சிற்றெல்லையாகவும்
1. எட்டடிப் பேரெல்லையாகவும் தொகுக்கப்பட்டது.
1. | 307, 391 ஆம் செய்யுட்கள் மட்டும் ஒன்பதடிகளை யுடையனவாகக் காணப்படுகின்றன. |