(தலைவன் பிரிந்த காலத்தில் தலைவியின் மேனியிற் பொலிவழிந்த வேறுபாடு கண்டு கவலையுற்ற தோழியை நோக்கி, “தலைவர் உடனிருப் பின் நான் மகிழ்வுற்று விளங்குவேன்; பிரியின் பொலிவழிந்தவளாவேன்” என்று கூறியது.)
 41.    
காதல ருழைய ராகப் பெரிதுவந்து 
    
சாறுகொ ளூரிற் புகல்வேன் மன்ற  
    
அத்த நண்ணிய வங்குடிச் சீறூர்  
    
மக்கள் போகிய வணிலாடு முன்றிற்  
5
புலப்பில் போலப் புல்லென் 
    
றலப்பென் றோழியவ ரகன்ற ஞான்றே.  

என்பது பிரிவிடை வேறுபாடு கண்டு கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.

அணிலாடு முன்றிலார்.

    (பி-ம்) 5. ‘புலம்பில்’

    (ப-ரை.) தோழி - , காதலர் உழையர் ஆக - தலைவர் பக்கத்தவராக இருப்ப, பெரிது உவந்து - மிக மகிழ்ச்சியுற்று, சாறுகொள் ஊரின் - விழாக்கொண்ட ஊரினர் மகிழ்வதைப் போல, மன்ற - நிச்சயமாக, புகல்வேன் - விரும்பி மகிழ்வேன்; அவர் அகன்ற ஞான்று - அவர் என்னைப் பிரிந்து சென்ற காலத்தில், அத்தம் நண்ணிய - பாலைநிலத்திற் பொருந்திய, அம் குடிசிறு ஊர் - அழகிய குடியையுடைய சிறிய ஊரில், மக்கள் போகிய - மனிதர் நீங்கிச் சென்ற ,அணில் ஆடு முன்றில் - அணில் விளையாடுகின்ற முற்றத்தையுடைய, புலம்பு இல் போல - தனிமையுள்ள வீட்டைப்போல, புல்லென்று - பொலிவழிந்து, அலப்பென் - வருந்துவேன்.

    (முடிபு) தோழி, காதலர் உழையராகப் புகல்வேன்; அவர் அகன்ற ஞான்று அலப்பென்.

    (கருத்து) தலைவர் பிரிந்தமையின் வருத்தமுடையேனாயினேன்.

    (வி-ரை.) உழையர் - பக்கத்தில் உள்ளவர்; உழை - பக்கம்; என்றது நெருங்கிப் பழகும் நிலையினரென்றவாறு; “தழையினு முழையிற் போகான்” (குறுந். 294:7) சாறுகொள் ஊரிற் புகல்வேனென்றது, இயல்பாகவுள்ளவற்றோடு மிகுதியான சிறப்பை விழாக்காலத்தே ஓரூர் கொண்டிருப்பது போல எனது இயற்கை நலங்களோடு சிறப்பான விளக்கம் பெற்று இருப்பேனென்றபடி. பாலை நிலத்து வெம்மையின் கொடுமைக்கும் ஆறலைகள்வரால் வரும் ஏதத்திற்கும் அஞ்சி ஊரினர் வேறிடம் செல்வாராதலின், அத்தம் நண்ணிய சீறூரின் இல்லைக் கூறினாள். போகிய - ஒழிந்த (புறநா.10;10, உரை). அணிலாடு முன்றில் - மக்கள் பயிலாமையின் அணிலசையும் முற்றம்; மக்களுள்ள வழி அணில் வாராதென்பது, "வரிப்புற வணிலொடு கருப்பை யாடாது” (பெரும்பாண்.85) என்பதனாற் பெறப்படும். மக்கள் போகிய வீட்டு முற்றத்தை அணிலாடு முன்றிலென்று சிறப்பித்த இதனால் இச்செய்யுளை இயற்றிய ஆசிரியர் அணிலாடு முன்றிலார் என்னும் பெயர் பெற்றனர்.

    புலம்பு - தனிமை. அலத்தல் - துன்புறல் (முருகு.271, ந.) ஞான்றே; ஏகாரம் அசைநிலை. மக்கள் போகிய புலப்பில்போலப் புல்லென்று அலப்பெனென்ற உவமையினால் அழகு நீங்கிய உடம்பினளாவே னென்பது பெறப்படும்.

     இப்பொழுது என் வேறுபாட்டிற்குக் காரணம் தலைவரது பிரிவென்பதை இதன் வாயிலாகத் தலைவி தோழிக்குக் குறிப்பித்தாள்.

     (மேற்கோளாட்சி) மு. பிரிவிடை ஆற்றாளெனக் கவன்ற தோழிக்கு ஆற்றுவலென்பதுபடக் கூறியது (தொல். கற்பு. 6, ந.).

    ஒப்புமைப் பகுதி 2. விழாக்கொண்ட ஊரைப் போல மகிழ்தல்: “விழவுமேம் பட்டவென் னலனே” (குறுந். 125:4).

    3. மு. அகநா. 9:10.

    5. புல்லென்றல்: குறுந்.19:2, ஒப்பு.

    5-6. தலைவன் பிரிதலால் தலைவி பொலிவழிதல்: “உழையிற் பிரியிற் பிரியும், இழையணி யல்குலென் றோழியது கவினே” (கலி. 50; 23-4).

    3-6. “உண்ட லளித்தெ னுடம்பே விறற்போர், வெஞ்சின வேந்தன் பகையலைக் கலங்கி, வாழ்வோர் போகிய பேரூர்ப், பாழ்காத் திருந்த தனிமகன் போன்றே” (நற். 153:7-10); “கல்லெனக் கவின்பெற்ற விழவாற்றுப் படுத்தபிற், புல்லென்ற களம்போலப் புலம்புகொண்டமைவாளோ”, “நல்குநர் புரிந்து நலனுணப் பட்டோர், அல்குநர் போகிய வூரோ ரன்னர்” (கலி.5: 10-11, 23: 10-11).

(41)