(இரவில் வந்து தலைவியோடு பழகவேண்டுமென்று விரும்பிய தலைவனை நோக்கி, “நெருங்கிப் பழகாவிடினும் நும் நட்பு அழியாது” என்று குறிப்பால் தோழி மறுத்தது.)
 42.    
காம மொழிவ தாயினும் யாமத்துக் 
    
கருவி மாமழை வீழ்ந்தென வருவி  
    
விடரகத் தியம்பு நாடவெம் 
    
தொடர்புந் தேயுமோ நின்வயி னானே. 

என்பது இரவுக்குறி வேண்டிய கிழவற்குத் தோழி நேர்ந்த வாய்பாட்டான் மறுத்தது.

    (நேர்ந்த வாய்பாட்டான் மறுத்தலாவது உடன்பட்டாள் போன்ற சொல்லமைதியும் மறுத்தமையைக் குறிப்பாற் புலப்படுத்தும் பொருளமைதியும் பொருந்தக் கூறுதல்.)

கபிலர்.

    (ப-ரை.) யாமத்து - நடு இரவின் கண், கருவி மா மழை - தொகுதியையுடைய பெரிய மழை, வீழ்ந்தென - பெய்தலால், அருவி விடரகத்து இயம்பும் - நீர் பெருகி அதனால் அருவியானது பின்நாளிலும் மலைமுழைஞ்சுகளில் ஒலிக்கும், நாட - குறிஞ்சி நிலத்தையுடையவனே, காமம் ஒழிவது ஆயினும் - காமமானது நீங்குவதாக இருப்பினும், நின்வயினான் - நின்னிடத்தில், எம் தொடர்பும் தேயுமோ - எமக்குள்ள நட்பும் அழியுமோ? அழியாது.

    (முடிபு) நாட, காமம் ஒழிவதாயினும் நின்வயினான் எம் தொடர்பும் தேயுமோ?

    (கருத்து) நீ இரவில் வாராவிடினும் தலைவிக்கும் நினக்கும் உள்ள நட்பு அழியாது.

    (வி-ரை.) காமம் - இங்கே, மெய்யுறு புணர்ச்சி (குறள்.1092, பரிமேல்.) கருவி மா மழை - மின் இடி முதலாகிய தொகுதியையுடைய பெரிய மழை (புறநா. 159:19, உரை). விடரகம் - மலையிடத்துள்ள வெடிப்புக்களும் குகைகளும்; முழைஞ்சென்பர் நச்சினார்க்கினியர் (மலைபடு. 366, உரை). எம்மென்றது தலைவிக்கும் தனக்குமுள்ள ஒற்றுமைபற்றி, தொடர்பும்: உம்மை இறந்தது தழீஇயது. ஓகாரம் எதிர்மறைப் பொருளது. நின்வயினான்: ஆன் என்பது ஏழன்பொருளில் வந்தது. ஏகாரம் அசைநிலை.

    தொடர்புந் தேயுமோ வென்றமையால் தேயாதென்பது பெறப்பட்டமையின் தலைவன் முதலில் இரவுக்குறி நேர்ந்ததாகக் கருதினான். காமம்ஒழிவதாயினுமென்றது மெய்யுறு புணர்ச்சி நீங்கற்கு மிடமுண்டென்பதைக் குறிப்பால் அறிவித்து இரவுக்குறி மறுத்தமையை வெளிப்படுத்தியது.

    முதல்நாள் இடையாமத்தில் மழைபெய்து ஒழியினும் அதனால் உண்டான அருவி பிற்றைநாளும் அறாது ஒழுகுதல்போல், முன்னர்ப் பயின்ற பயிற்சியால் பெற்ற தொடர்பு பின்னர் அப்பயிற்சி ஒழியினும் அறாதென்பது குறிப்பு.

    ஒப்புமைப் பகுதி 1. காமமென்பது மெய்யுறுபுணர்ச்சியைக் குறித்தல்: குறுந். 32:3; இறை. 2. உரை. 2. கருவி மாமழை; குறுந்.94:7, 197:2, 205:1; பெரும்பாண். 24; நற். 329:11; அகநா.4:6; புறநா.159:19, 204:13. 1-2. யாமத்து மழை பெய்தல் “நள்ளென் யாமத்து மழைபொழிந் தாங்கே” (நற்.22:11) 3. விடரகத்தியம்பும்: குறுந். 241:6; மலைபடு. 366. 2-3. அருவி ஒலித்தல்: குறுந். 78. 1-2, 353: 3, 365: 3-4.

    அருவி விடரில் ஒலித்தல்: “மால்வரை யிழிதருந் தூவெள் ளருவி, கன்முகைத் ததும்பும்” (குறுந். 95: 1-2); “கல்யா றொலிக்கும் விடர் முழங் கிரங்கிசை” (மலைபடு. 324; 583-4.)

    1-3. முன்னாள் மழைபெய்தமையால் அருவி உண்டாதல்: (குறுந். 90: 2-5, 259: 1-2, 367: 4-5); “கருவி வானங் கான்ற புயலின், அருவி யரற்றுமலை”, “கருவி மாமழை கனைபெயல் பொழிந்தென வழிநாள், அருவி” (சீவக. 725, 2752).

    மு. குறுந். 61: 4-6.

(42)