(தலைவன் பிரிந்த காலத்தில் தலைவி ஆற்றமாட்டாளென்று கவலையுற்ற தோழியை நோக்கி, “என்னைத் துன்புறுத்தும் மாலைக் காலமும் தனிமையும் தலைவர் சென்ற நாட்டிலும் உளவாதலின் அவருக்கும் அவற்றால் துன்பம் உண்டாகும்; அதனால் அவர் விரைவில் வருவாரென்று எண்ணி யான் ஆற்றுகின்றேன்” என்று தலைவி கூறியது).
 46.   
ஆம்பற் பூவின் சாம்ப லன்ன 
    
கூம்பிய சிறகர் மனையுறை குரீஇ 
    
முன்றி லுணங்கன் மாந்தி மன்றத் 
    
தெருவினுண் டாது குடைவன வாடி 
5
இல்லிறைப் பள்ளித்தம் பிள்ளையொடு வதியும் 
    
புன்கண் மாலையும் புலம்பும் 
    
இன்றுகொ றோழியவர் சென்ற நாட்டே. 

என்பது பிரிவிடை ஆற்றாளெனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி ஆற்றுவலென்பது படச் சொல்லியது.

மாமலாடன் (பி-ம். மாமிலாடன்.)

    (பி-ம்) 3-4. ‘மன்றதெருவின்’ 4. ‘தெருவை நுண்டாது’.

    (ப-ரை.) தோழி -, ஆம்பல் பூவின் சாம்பல் அன்ன - ஆம்பல் மலரின் வாடலையொத்த, கூம்பிய சிறகர் - குவிந்த சிறகுகளையுடைய, மனை உறை குரீஇ - வீட்டின்கண் தங்கும் குருவிகள், முன்றில் உணங்கல் மாந்தி - முற்றத்தில் உலருந் தானியங்களைத் தின்று, மன்றத்து - பொதுவிடத்தின் கணுள்ள, எருவின் நுண்தாது குடைவன ஆடி - எருவினது நுண்ணிய பொடியைக் குடைந்து விளையாடி, இல் இறை பள்ளி - வீட்டிறப்பிலுள்ள இடத்தே, தம் பிள்ளையொடு வதியும் - தம்முடைய குஞ்சுகளோடு தங்கியிருக்கும், புன்கண் மாலையும் - பிரிந்தார்க்குத் துன்பத்தைத் தரும் மாலைக் காலமும், புலம்பும் - தனிமையும், அவர் சென்ற நாட்டு - அத்தலைவர் பிரிந்து சென்ற தேயத்தில், இன்றுகொல் - இல்லையோ?

    (முடிபு) தோழி, அவர் சென்ற நாட்டு, மாலையும் புலம்பும் இன்று கொல்?

    (கருத்து) என்னுடைய பிரிவினால் தலைவரும் துன்புறுவர் ஆதலின் விரைந்து வருவர்.

    (வி-ரை.) சாம்பல் - பூவின் வாடல் (சீவக. 2349, ந.) எரு - உலர்ந்த சாணம். பறவைகளின் குஞ்சுகளைப் பிள்ளை என்றல் மரபு (தொல். மரபு.4.) புன்கண் மாலை - ஒளியிழந்த மாலை என்பதும் ஆம் (குறள், 1222, பரிமேல்.) மாலையும் இன்று கொல், புலம்பும் இன்று கொலெனத் தனித் தனியே கூட்டுக. அவர்: நெஞ்சறி சுட்டு. ஏகாரம்: அசை நிலை.

    தலைவர் சென்ற நாட்டிலும் துன்பந்தரும் மாலையும் தனிமையும் உளவாதலின் அவற்றால் உண்டாகும் துயரத்தையறிந்து அவர் என்னை நினைத்து மீண்டு வருவார்; அது நினைந்து யான் ஆற்றுவேன் ஆயினேன் என்பது தலைவியின் கருத்து.

    தமக்குரிய இடத்தில் தம் பிள்ளையோடு குருவிகள் வதியும் மாலையில் அவை கண்ட தலைவர் நாமும் நம் மகவோடும் தலைவியோடும் சேர்ந்துறைதல் வேண்டும் என்னும் கருத்தினர் ஆவார் என்பது குறிப்பு.

    (மேற்கோளாட்சி) 4. பலவின் பால் வினைமுற்று வினையெச்சமானது (நன். 350, மயிலை, 351, சங்.). 5. பிள்ளையென்பது பறவையின் இளமைப்பெயர் (தொல். மரபு. 4, பேர்.)

    மு. தலைவி தலைவன் சென்ற நாட்டு இவை இன்று கொலென்றது (தொல். கற்பு.6, ந.).

    ஒப்புமைப் பகுதி 2.மனையுறை குரீஇ:“மனையுறை குரீஇக் கறையணற் சேவல்” (புறநா. 318:4); “மனையுறை குருவி வளைவாய்ச் சேவல்” (திருவாரூர் மும்மணிக். 19:1) 3. உணங்கல் - உலரும் தானியம்; (திருச்சிற்.235.)

    4. எருவின் தாது: நற்.271:2.3-4.மன்றத்து எருவின் தாது: “தாதெருத் ததைந்த முற்றம்” (மலைபடு. 531); “தாதெரு மறுகு” (நற்.343:3); (புறநா.33:11, 215:2, 311:3); “தாதெரு மன்றத் தயர்வர் தழூஉ”, “காஞ்சித்தா துக்கன்ன தாதெரு மன்றத்து” (கலி.103:62. 108:60); “தாதெரு மறுகின் மூதூ ராங்கண்” (அகநா. 165:4); “தாதெரு மன்றந்தானுடன் கழிந்து”, “தாதெருமன் றத்தாடுங் குரவை”, “தாதெரு மன்றத்து மாதரி யெழுந்து” (சிலப்.16:102, 17: ‘மாயவன்றன்’, 27:74).

    2-4. “மனையுறை புறவின் செங்காற் சேவல், இன்புறு பெடையொடு மன்றுதேர்ந் துண்ணாது, இரவும் பகலு மயங்கிக் கையற்று, மதலைப் பள்ளி மாறுவன விருப்ப” (நெடுநல். 45-8).

    5. பறவைகளின் குஞ்சைப் பிள்ளை யென்றல்: குறுந். 92:4, 139:4.

    2-5. குருவி வீட்டின் இறப்பில் தங்குதல்: “முடங்க லிறைய தூங்கணங் குரீஇ” (குறுந். 374:5) 6. புன்கண்மாலை:“பையுண் மாலை” (குறுந். 195:2) மாலை துன்பத்தைத் தருதல்: குறள். 1221-30. 5-6. மு.குறுந். 330:6-7.

(46)