(தலைவன் இரவில் தலைவியிடம் வந்து பழகுங் காலத்தில் அவனை விரைந்து மணம் செய்து கொள்ளும்படி தூண்ட எண்ணிய தோழி, “நிலவே, நீ இரவில் வந்தொழுகுந் தலைவரது களவொழுக்கத்திற்கு நன்மை செய்வாயல்லை” என்று கூறி இரவுக் குறியை மறுத்தது.)
 47.   
கருங்கால் வேங்கை வீயுகு துறுகல் 
    
இரும்புலிக் குருளையிற் றோன்றுங் காட்டிடை 
    
எல்லி வருநர் களவிற்கு 
    
நல்லை யல்லை நெடுவெண் ணிலவே. 

என்பது இராவந்தொழுகுங்காலை முன்னிலைப் புறமொழியாக நிலாவிற்கு உரைப்பாளாகத் தோழி உரைத்தது.

    (முன்னிலைப் புறமொழி - கூறப்படும் செய்தியைக் கேட்டறிதற் குரியவர் முன்னே இருப்பவும் அவரை விளித்துக் கூறாமல், வேறு ஒருவரை யேனும் பிறிதொரு பொருளை யேனும் விளித்துக் கூறுவது(தொல். கற்பு.26, ந.)

நெடுவெண்ணிலவினார்.

    (ப-ரை.) நெடு வெண் நிலவே - நீட்டித்தலையுடைய வெண்ணிலாவே, கரு கால் வேங்கை - கரிய அடியையுடைய வேங்கை மரத்தின், வீ உகு துறுகல் - மலர்கள் உதிர்ந்த குண்டுக்கல், இரு புலி குருளையின் தோன்றும் - பெரிய புலிக்குட்டியைப் போலக் காணப்படும், காட்டிடை - காட்டினிடத்து, எல்லி வருநர் களவிற்கு - இரவின்கண் வரும் தலைவரது களவொழுக்கத்திற்கு, நல்லை அல்லை - நன்மை தருவாய் அல்லை.

    (முடிபு) நெடுவெண்ணிலவே, காட்டிடை எல்லி வருநர் களவிற்கு நல்லை அல்லை.

    (கருத்து) இனி இரவில் வருதல் தகாதாதலின் தலைவர் தலைவியை விரைவில் மணந்து கொள்ளல் வேண்டும்.

    (வி-ரை.) வேங்கை, கருந்தோலிற் செம்பொறி யமைந்த உடலின தாகலின் கரிய பாறையும் அதன்மேல் உதிர்ந்த வேங்கை மலர்த் தொகுதியும் புலிக் குருளையின் தோற்றத்தைச் செய்தன; “புலிப்பொறி வேங்கைப் பொன்னிணர்” (ஐங்.396). காட்டில் வருங்கால் நிலாவொளியில் வேங்கை மலர் பரவிய துறுகல்லைப் புலியென்று எண்ணித் தலைவன் அஞ்சுதலுங் கூடும் என்பது குறிப்பு; “வான்கண் விரிந்த பகன்மரு ணிலவிற், சூரன் மிளைய சார லாராற், றோங்கன் மிசைஇய வேங்கை யொள்வீ, புலிப்பொறி கடுப்பத் தோன்றலின்” (அகநா. 228:8-11.) எல்லி -இரவு; “எல்லியம் போது வழங்காமை முன்னினிதே” (இனியது. 34.) காட்டிடை வரும்போது வழியிலுள்ள வேங்கை மலர் உக்க பாறையை வேங்கைக் குருளை என்று அஞ்சச் செய்வதாலும், ஊரின் கண் உள்ளார் கண்டு கொள்வதற்கு ஏதுவாதலாலும் நிலவை, ‘நல்ல யல்லை’ என்றாள். நெடு வெண்ணிலவு - நெடு நேரம் எறிக்கும் வெண்ணிலவு; இயல்பாகத் தனக்கமைந்த பொழுதின் மாத்திரம் எறிக்கும் நிலவாயினும், விரைவில் மறைய வேண்டுமென்னும் விருப்பினளாதலின், அவளுக்கு நெடுமை உடையதாகத் தோன்றியது; தம்மால் விரும்பப்படாத நிலவை, ‘நெடு வெண்ணிலவு’ என்று கூறுவதாக அமைத்த சிறப்பால் இச்செய்யுளை இயற்றிய நல்லிசைப்புலவர் ‘நெடுவெண்ணிலவினார்’ என்னும் பெயர் பெற்றார்.

    நிலவை நோக்கிக் கூறுவாளாய்த் தோழி, இங்ஙனம் ஒழுகுதல் ஏதம் தருமென்று தலைவனுக்கு அறிவுறுத்தி வரைவு கடாயினாளாயிற்று.

    (மேற்கோளாட்சி) 2. குருளை புலியின் இளமைப் பெயர் (தொல்.மரபு.8, பேர்.)

    1-2. ‘ஒற்றைக்கிளவியும் இரட்டைவழித்தாகி வருவன கொள்க; இரும்புலிக் குருளை யென்றதனையே துறுகல்லோடும் வேங்கைவீயோடும் ஒப்பித்தமையின் இப்பெயர்த்தாயிற்று’ (தொல். உவம.22, பேர்); ஒற்றைக்கிளவி இரட்டை வழித்தாய் வந்த உவமை (மாறன். 103.)

    மு. ‘இராவந்து ஒழுகுங்காலை முன்னிலைப் புறமொழியாக நிலாவிற்கு உரைப்பாளாய் உரைத்தது. இக்குறுந்தொகையுட் குறிஞ்சியுள் 1. வேனில் வந்தது’ (தொல்.அகத்.12, ந.); ‘தலைவி நிலவு வெளிப்பட வருந்தியது’ (தொல். களவு. 16.ந.); நிலவு வெளிப்படுதல் (நம்பி.161; இ.வி.519); பண்புவமை வந்தது (தண்டி.பொருளனி.12); பாலைக் குரியவேனில் குறிஞ்சிக்கண் வந்தது (இ.வி.394); வேறுபட வந்த உவமம் (இ.வி.645).

    ஒப்புமைப் பகுதி 1. கருங்கால் வேங்கை:குறுந். 26:1, ஒப்பு; 343:4; மதுரைக்.296; நற்.217:4, 222:1, 313:1, 351:5-6, 368:2, 383:1; அகநா.: 345:8, 349:10; புறநா.137:9. வேங்கைப்பூ துறுகல்லின்மேல் உகுதல்: “அரும்புவா யவிழ்ந்த கருங்கால் வேங்கைப், பொன்மரு ணறுவீ கன்மிசைத் தாஅம்” (நற்.257;5-6); “கருங்கால் வேங்கை மாத்தகட் டொள்வீ, இருங்கல் வியலறை வரிப்பத் தாஅம்” (ஐங்.219:1-2); “மன்ற வேங்கை மணநாட் பூத்த, மணியே ரரும்பின் பொன்வீ தாஅய், வியலறை வரிக்கு முன்றில்” (அகநா. 232:7-9).

    1-2. வேங்கைமலர் உதிர்ந்த துறுகல்லிற்கு வேங்கை: “மெல்லிணர் வேங்கை வியலறைத் தாயின, அழுகை மகளிர்க் குழுவை செப்ப” (பரி.14:11-2); “அரும்பற மலர்ந்த கருங்கால் வேங்கை, மாத்தகட்டொள்வீதாய துறுகல், இரும்புலி வரிப்புறங்கடுக்கும், பெருங்கல் வைப்பு” (புறநா. 202:18-21); “கருங்கா லினவேங்கை கான்றபூக் கன்மேல், இருங்கால் வயவேங்கை யேய்க்கும்” (திணைமா.26); “நறமனை வேங்கையின் பூப்பயில் பாறையை நாகநண்ணி, மறமனை வேங்கையென நனி யஞ்சும்” (திருச்சிற். 96). வேங்கைமலர்த் தொகுதிக்குப் புலி: நற்.383:1-2; அகநா. 12:9-11, 205:19-20.

    5. நெடுவெண்ணிலவு: குறுந். 193:4; அகநா.2:17; பெருங்.1.35:235.

(47)
  
 1.  
வேங்கை பூத்து உகுங்காலம் வேனிலாதலின் இங்ஙனம் உரைத்தார்.