(தலைமகன் பரத்தையிற் பிரிந்து மீண்டுவந்த காலத்து முன்னிருந்த ஆற்றாமை நீங்கி, அவனோடு அளவளாவி, “நாம் பிறவிதோறும் அன்புடைய கணவனும் மனைவியுமென இருப்போமாக!” என்று தலைவி கூறியது.)
 49.   
அணிற்பல் லன்ன கொங்குமுதிர் முண்டகத்து 
    
மணிக்கே ழன்ன மாநீர்ச் சேர்ப்ப 
    
இம்மை மாறி மறுமை யாயினும் 
    
நீயா கியரென் கணவனை 
5
யானா கியர்நின் னெஞ்சுநேர் பவளே. 

என்பது தலைமகன் பரத்தை மாட்டுப் பிரிந்தவழி ஆற்றாளாகிய தலைமகள், அவனைக் கண்டவழி அவ்வாற்றாமை நீங்குமன்றே; நீங்கியவழிப் பள்ளி (பி-ம். நீங்கிய வழியப்பள்ளி) யிடத்தானாகிய தலைமகற்குச் சொல்லியது.

(தலைவனைக் கண்டால் தலைவியினது ஆற்றாமை நீங்குமென்பது, “எழுதுங்காற் கோல்காணாக் கண்ணேபோற் கொண்கன், பழிகாணேன் கண்ட விடத்து”, “காணுங்காற் காணேன் றவறாய காணாக்காற், காணேன் றவறல் லவை” (குறள்.1285-6) என்பவற்றால் உணரப்படும். பள்ளி - படுக்கை.)

அம்மூவனார்.

    (பி-ம்) 2. ‘மாணீர்ச்’ 4. ‘கியரெங்’ 5. ‘னெஞ்சினேர்’.

    (ப-ரை.) அணில் பல் அன்ன - அணிலின் பல்லை ஒத்த முள்ளையுடைய, கொங்கு முதிர் முண்டகத்து - தாது முதிர்ந்த முள்ளிச் செடியையும், மணி கேழ் அன்ன மா நீர்-நீலமணியினது நிறத்தை ஒத்த கரிய நீரையுமுடைய, சேர்ப்ப - கடற்கரையை உடைய தலைவ, இம்மை மாறி - இப்பிறப்பு நீங்கப்பெற்று, மறுமை ஆயினும் - நமக்கு வேறு பிறப்பு உண்டாயினும், என் கணவன் - என்னுடைய தலைவன், நீ ஆகியர் - இப்பொழுது என்பால் அன்பு செய்தொழுகும் நீயே ஆகுக! நின் நெஞ்சு நேர்பவள் - நின்னுடைய மனத்திற்கு ஒத்த காதலி, யான் ஆகியர் - இப்பொழுது நின் நெஞ்சு கலந்தொழுகும் யானே ஆகுக!

    (முடிபு) சேர்ப்ப, மறுமையாயினும் நீ என் கணவன் ஆகியர் ! நின் நெஞ்சு நேர்பவள் யான் ஆகுக!

    (கருத்து) நம்முடைய அன்பு பிறவிதோறும் தொடரும் இயல்பின தாகுக!

    (வி-ரை.) அணிற்பல் முண்டகத்தின் முள்ளுக்கு உவமை. முண்டகம் - கழிமுள்ளிச்செடி. மறுமை என்றது வரும் பிறவிகள் எல்லாவற்றையும். கணவனை : ஐ, சாரியை. நீயாகியர் எங்கணவனை யென்றதற்கேற்ப யானாகியர் நின் மனைவி யென்னாது நெஞ்சு நேர்பவளென்றது, கணவ னென்றமையாலேயே மனைவி யென்பது பெறப்பட்டமையாலும், மனைவியாக இருப்பினும் நெஞ்சு நேர்பவளாகும் பேறு பரத்தைக்காவது முண்டாதலின் வாளா மனைவியென வாழாமல் நெஞ்சு பொருந்தியவளும் ஆதல் வேண்டும் என்பது நினைவு ஆதலாலும் என்க. நெஞ்சு நேர்தல்: “அன்புடை நெஞ்சந் தாங்கலந் தனவே”. (குறுந். 40:5) என்று முன்னும் வந்தது. நேர்தல் -கொடுத்தலுமாம்; தலைவன் தன் நெஞ்சைத் தலைவிக்குக் கொடுத்தல் ஆவது எப்பொழுதும் அவளை நினைத்து அன்பு பாராட்டல். ஏகாரம் : அசை நிலை.

    முள்ளிச்செடி புறத்தே முட்களை உடையது ஆயினும் மலர்களும் அம்மலர்களில் மணம் உடைய பூந்தாதும் குறைவறப் பெற்றிருத்தலைப் போலத் தலைவன் புறத்தொழுக்க முடையனாயினும் தன் மாட்டு அன்புடையனாகவே இருக்கின்றான் என்பது தலைவியின் குறிப்பு.

    (மேற்கோளாட்சி) மு. தலைமகன் நலம்பாராட்டியவழித் தலைவி கூறியது (தொல். கற்பு.6, இளம்.); தலைவிக்குச் சாக்காடென்னும் மெய்ப்பாடு வந்தது (தொல். களவு.9,ந.); காமக்கிழத்தியர் நலம்பாராட்டிய தீமையின் முடிக்கும் பொருளின்கண் தலைவி கூறியது. (தொல். கற்பு.6, ந.).

    ஒப்புமைப் பகுதி 1. முண்டகத்தின் முள்: குறுந். 51:1. 5. நெஞ்சு நேர்பவள் : ஐங். 151:5.

    3-5. மறுமையிலும் கணவனும் மனைவியுமாதல்: (குறுந். 199: 5-8); ‘தன் துணையாக - இம்மை மறுமைக்குத் துணையாக’ (கலி. 69:4, ந.) “எமர்தர வாரா தாயினு மிவணோற், றவனுறை யுலகத் தழித்துப்பிறந்தாயினும், எய்துதல் வலித்தனென்” (பெருங். 1.36:113-5); “மறப்பானடுப்பதொர் தீவினை வந்திடிற் சென்றுசென்று, பிறப்பானடுப்பினும் பின்னுந்துன் னத்தகும் பெற்றியரே” (திருச்சிற். 205.)

(49)