(பிரிவாற்றாமையைால் தலைவி வருந்துதலை அறிந்து கவலையுற்றதோழிக்கு அவள், தன் கண்கள் துயிலாமையை உணர்த்தும் வாயிலாகக்காமநோயின் கொடுமையைக் கூறியது.)
 5.    
அதுகொ றோழி காம நோயே 
    
வதிகுரு குறங்கு மின்னிழற் புன்னை 
    
உடைதிரைத் திவலை யரும்புந் தீநீர் 
    
மெல்லம் புலம்பன் பிரிந்தெனப் 
5
பல்லித ழுண்கண் பாடொல் லாவே.  

என்பது பிரிவிடை ஆற்றாளெனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.

நரிவெரூஉத்தலையார்.

     (பி-ம.்) 2. ‘மின்னிலைப் புன்னை’, ‘மென்னிழற் புன்னை’, 3.‘துவலை’.

     (ப-ரை.) தோழி -, வதி குருகு உறங்கும்- தன்னிடத்தில் தங்கியிருக்கும் குருகுகள் உறங்குதற்குக் காரணமாகிய, இன்நிழல் புன்னை - இனிய நிழலை உடைய புன்னை மரமானது, உடை திரைதிவலை அரும்பும்- கரையைச் சாரச்சார உடைகின்ற அலைகளால் வீசப்படும் துளியால் அரும்புகின்ற, தீ நீர் - கண்ணிற்கு இனிதாகியநீர்ப் பரப்பை உடைய, மெல்லம் புலம்பன்- மெல்லிய கடற்கரையையுடையதலைவன், பிரிந்தென- பிரிந்தானாக, பல் இதழ் உண் கண்- பல இதழ்களைஉடைய தாமரை மலரைப் போன்ற என் கண்கள், பாடு ஒல்லா- இமைபொருந்துதலைச் செய்யா வாயின; காம நோய் அது கொல் - காம நோய் என்பது அத்தன்மைத்தோ?

     (முடிபு) தோழி, புலம்பன் பிரிந்தெனக் கண்பாடொல்லா; காம நோய் அது கொல்.

     (கருத்து) தலைவன் பிரிவினால் யான் துயில் ஒழிந்தேன்.

     (வி-ரை.) அதுவென்றது கண் உறங்காமையைச் சுட்டி நின்றது; செய்யுளாதலின் சுட்டிப்பெயர் முன் வந்தது (தொல்.கிளவி.39.)தோழி:விளி. காமநோயே: ஏ, அசை. குருகு பகலிலும் இரவிலும் தங்குதற்குரியதாகலின் 'வதி குருகுறங்கும் புன்னை' என்றாள். இயல்பாகவே தங்குவதற்குரியதாயினும் அதன் நிழல் உறக்கத்தையும் உண்டு பண்ணுவதாதலின், 'இன்னிழற்புன்னை' என்றாள். உடைதிரை- முரி ‘‘கின்ற திரை; உடைதிரை முத்தஞ் சிந்த’’ (சீவக.2652.) தீ நீர்ப் புலம்பு, மெல்லம்புலம்பு என்க; தீமை-இனிமை; புலம்பு- கடற்கரை. மருதமும் நெய்தலும் மென்புலமெனப் படுமாதலின், `மெல்லம் புலம்பு’ எள்றாள். பிரிந்தென-பிரிந்தானாக; ‘‘தண்கடற் சேர்ப்பன் பிரிந்தென’’ (ஐங்.183.3.) பல்லிதழ்- பல இதழ்களை உடைய தாமரைப் பூ; சினையில் கூறும் முதலறி கிளவி. உண்: உவம உருபு: உண்கண்-மையுண்ட கண்களுமாம்.

    தன் நாட்டில் குருகு உறக்கத்தைப் பெறும் புலம்பன் எனக்கு உறக்கம்நீங்குதற்குக் காரணனாயினான் என்பது குறிப்பு.

     (மேற்கோளாட்சி) 1. ‘குறியது (குற்றெழுத்து) பிற்கூறிய முறையன்றிக் கூற்றினால்...அதுகொறோழி எனவும்... தொடர் மொழி யீற்று நின்ற ஒற்றுக்கெடுதலுங்கொள்க' (தொல். தொகை.18,ந); இடைச் சொல், அதுகொறோழி காமநோயே எனப் பெயரைச் சார்ந்து நின்று அதன் பொருளை விளக்கிற்று (தொல்.இடை. 1,ந.); இடைச் சொற் பகாப்பதம் பிறிதோடு வந்தது (நன்.150,மயிலை.); `அதுகொ... நோயே; என்றற்றொடக்கத்தன தொகா நிலைத் தொடர் மொழிகள்’(நன். 259,373,மயிலை; நன்.374சங.்) 'அதுகொல்: தொடர் மொழி' (நன்.260,சங்.)

     4. மெல்லம் புலம்பு: 'தெள்ளம்புனல், மெல்லம்புலம்பு போல்வதோர்பண்புத் தொகை’ (திருச்சிற். 372,பேர்.)

    மு. 'பிரிந்தவழிக் கலங்கியது: அதுகொ... நோயே என வரும்’(தொல்.களவு. 20, இளம்.); 'இது வரைவிடைக் கவன்ற தோழிக்குக் கூறியது;அதுகொ றோழி காமநோயே: என்னும் பாட்டும் அது’ (தொல்.களவு.21,ந.)

     ஒப்புமைப் பகுதி 1. குருகு- நாரை (குறுந்.236:4-5, 296:1-2); அன்னப் பறவையெனினுமாம்; "கன்னியம் புன்னைமே லன்னங்காள்’’(யா.வி.60, மேற்.)குருகுறங்கும் புன்னை: "புன்னைத் தடவுநிலை மாச்சினை, புள்ளிறை கூரும்’ (அகநா.10:3-4.) இன்னிழற் புன்னை: 'புன்னையம் புகர்நிழல்’’ (குறுந்.303:6); "எக்கர்ப் புன்னை யின்னிழ லசைஇ" (அகநா.20:3); ‘‘கன்னியம் புன்னை யின்னிழற் றுன்னிய’’ (யா.வி.37,மேற்.) (பி-ம்.) இன்னிலைப் புன்னை: ‘’முடவுமுதிர் புன்னைத் தடவு நிலை மாச்சினை’’(அகநா.10:3.) (பி-ம்.) மின்னிலைப் புன்னை: ‘‘மின்னிலைப் பொலிந்த விளங்கிண ரவிழ்பொற், றண்ணுறும் பைந்தா துறைக்கும், புன்னையங் கானல்’’ (அகநா.11-3.)

     2-3. புன்னை திரைத்திவலையால் அரும்பல்: ‘‘வான்கடற் பரப்பிற் றூவற் கெதிரிய, மீன்கண்டன்ன மெல்லரும் பூழ்த்த, முடவுமுதிர் புன்னை’’(அகநா.10:1-3); "தூவற் கலித்த தேம்பாய் புன்னை’’ (புறநா.24:7.)

     4. மெல்லம் புலம்பன்: குறுந். 245:5; நற்.195:4; ஐங்.120:4, 190:3; அகநா.10:4. மு. ஐங். 133:2.

     5. பல்லித முண்கண்: (குறுந்.259:4); "பல்லித ழுண்கணும் பரந்தவாற் பனியே’’, "பல்லித ழுண்கண் கலுழ’’ (நற்.155:10,241:11), "பல்லித ழுண்கண் பசத்தன்மற் றெவனோ’’, ‘‘பல்லித ழுண்கண் ணழப்பிரிந் தோரே’, "பல்லித ழுண்கண் மடந்தை’’, ‘‘பல்லித ழுண்கண் பனியலைக் கலங்க’, (ஐங்,170:4,190:4, 334:5, 351:4, 471:2); "பல்லிதழ் மலருண்கண்’’, "பல்லித ழுண்கண்ணுந் தோளும்’’ (கலித்.45:11, 100:10,112:9); "பல்லித ழுண்கண் பரந்தன பனியே’’ (அகநா.141:14.)கண்பாடொல்லா: (குறுந்.11:2, 357:1,365:2-6); "கண்படலொல்லா’’ (கலி.10:13.)

     4-5. தலைவன் பிரிவாற் கண்துயிலாமை: "நாடற்குத், துயிறுறந் தனவாற் றோழியென் கண்ணே’’ (குறுந்.186:3-4); "தமிழ்நர் பெருமாற்கென், கண்படா வாறே யுரை’’ (முத்.75.)

(5)