(தலைவியையும் உடன் அழைத்துச் செல்ல வேண்டுமென்று விரும்பிய தோழிக்கு உடம்படானாகித் தனியே பிரிந்து சென்ற தலைமகன் பாலைநிலத்தின் தீமையைக் கண்டு, "இத்தகைய பொல்லாங்கையுடைய இடத்தில் தலைவி வருவாளாயின் மிக இரங்கத் தக்காள்!" என்று கூறியது.)
 56.   
வேட்டச் செந்நாய் கிளைத்தூண் மிச்சிற் 
    
குளவி மொய்த்த வழுகற் சின்னீர் 
    
வளையுடைக் கைய ளெம்மொ டுணீஇயர் 
    
வருகதில் லம்ம தானே 
5
அளியளோ வளியளெந் நெஞ்சமர்ந் தோளே. 

என்பது தலைமகன் கொண்டுதலைப் பிரிதலை மறுத்துத் தானே போகின்றவழி இடைச்சுரத்தின் பொல்லாங்கு கண்டு கூறியது.

    (கொண்டுதலைப் பிரிதல் - தலைவியை - உடன்கொண்டு அவள் தமரினின்றும் பிரிதல் (தொல். அகத். 15) பொல்லாங்கு - தீமை.)

சிறைக்குடியாந்தையார். (பி-ம். சிறைக்குடியாந்தை).

    (ப-ரை.) வேட்டம் செ நாய் - வேட்டையை மேற் கொண்ட செந்நாய், கிளைத்தூண் மிச்சில் - தோண்டி உண்டு எஞ்சியதாகிய, குளவி மொய்த்த - காட்டுமல்லிகைப் பூ மூடிய, அழுகல் சில் நீர் - அழுகல் நாற்றத்தையுடைய சிலவாகிய நீரை, வளையுடை கையள் - வளையையுடைய கையளாய், எம்மொடு - உணீயர் - எம்மோடு சேர்ந்து உண்ணுதற்கு, தான் - தலைவி, வருகதில் - வருக; வந்தால், எம் நெஞ்சு அமர்ந்தோள் - எம் நெஞ்சின்கண் விரும்பிய பொருந்திய அத்தலைவி, அளியளோ, அளியள் - மிக இரங்கத் தக்காள்!

    (முடிபு) தான் என்மொடு நீரை உணீஇயர் வருகதில்லம்ம; எம் நெஞ்சமர்ந்தோள் அளியள்!

    (கருத்து) பொல்லாங்கையுடைய இவ்விடத்தில் தலைவி வருதற்குரியளல்லள்.

    (வி-ரை.) வேட்டம் - தனக்குரிய இரையைத் தேடி வேட்டையாடுதல். பாலைநிலத்தில் நீரற்ற சுனையில் தோண்டி அங்குள்ள சிறிதளவாகிய நீரை விலங்கினமும் மக்களும் உண்டல் வழக்கம்; "ஆறுசெல் வம்பலர் சேறுகிளைத் துண்ட, சிறுபல் கேணி" (அகநா. 137: 1-2). குளவி - காட்டுமல்லிகை (குறிஞ்சிப். 76,ந.) அருகிலுள்ள மரங்களிலிருந்து உதிர்ந்த குளவிமலர்கள் மிக விழுந்து மூடி நெடுநாளிருத்தலின் அவை அழுகி நீரில் தீய நாற்றத்தை உண்டாக்கின. சின்னீர் - சிறிதளவாகிய நீர்; 'குடத்துள்ளும் பிறகலத்துள்ளும் இருந்த நீரைச் சிறிதென்னாத்து சில வென்றலும்.... போல்வன வழக்காம்'(தொல். கிளவி. 17, ந.) வருகதில் லம்மவென்றது, வந்தால் இன்னாமை யையுடையளாவளென்னும் பொருள் தந்து ஒழியிசையாய் நின்றது. பிரிந்திருப்பின் பிரிவையாற்றாளாதலாலும், உடன் வந்தாற் பாலைநிலத்துப் பொல்லாங்கை ஆற்றாளாதலாலும் 'அளியள்' என்றான். அளியளோ வளியளென்றது மிக அளியளென்றவாறு (புறநா.51:8, உரை).தலைவியைப் பிரிந்து வந்தேனாயினும் அவளை எப்பொழுதும் நினைக்கும் நிலையினேனென்பான், 'எம் நெஞ்சமர்ந்தோள்' என்றான்.

    அம்ம, ஏ: அசை நிலைகள்.

    (மேற்கோளாட்சி) மு.1. தமர் வரைவுடன் படாதவழித் தலைமகளைச் சுரத்தின் கண் உடன்கொண்டு போகத் தலைவன் துணிந்தது (தொல். அகத். 44, இளம்.); "நீ களவில் தேற்றிய தெளிவகப்படுத்தலும் தீராத் தேற்றமும் பொய்யாம்; அவை பொய்யாகாதபடி, செய்கைகளோடே இவளை உடன் கொண்டு செல்க" எனத் தன் அறியாமை தோன்றக் கூறிவந்த தோழி கேட்பத் தலைவன் கூறியது (தொல். கற்பு. 5, ந.).

    ஒப்புமைப் பகுதி 1. வேட்டச் செந்நாய்: "பைங்கட் செந்நாய்" (குறுந்.4:8); "பசியட முடங்கிய பைங்கட் செந்நாய், மாயா வேட்டம் போகிய கணவன்"(நற். 103:6-7);வேட்டச் செந்நாய் உண்ட மிச்சில்:நற். 43:3-4; பெருங். 1. 52: 75-7; குறுந். 141:6; மலைபடு. 338; கலி. 83:1.

    2. குளவி: குறுந்: 59, 100; நற். 346:9; மலைபடு. 334; பதிற். 71.அழுகல்: புறநா. 325. நீரை மலர் மூடியிருத்தல்: குறுந். 317; 3-4, ஒப்பு. சின்னீர்:பெரும்பாண். 340; கலி. 11:8, 34:3ந புறநா. 327:3, மணி. 23:142. 1-3. தலைவி மிச்சில்நீரை உண்ணுதல்: "இனிய...... உவலைக் கூவற் கீழ, மானுண் டெஞ்சிய கலுழி நீரே" (ஐங்.203: 2-4).

    4. வருகதில்லம்ம: அகநா. 141:11, 276:7; புறுநா. 284.

    5. அளிவளோ அளியள்; "அறியரோ வளியர்" (நற். 12:8; அகநா.43:113).தலைவன் நெஞ்சில் தலைவி இருத்தல்:"நெஞ்சமர் தகுவி"(அகநா. 259:12); "யாமு முளேங்கொ லவர்நெஞ்சத்து" (குறள். 1204).

(56)
  
 1. 
இக்கருத்து, இச்செய்யுளுக்கு இயல்பாக உள்ள கருத்தைக் காட்டிலும் சிறப்புடையதாகத் தோற்றுகின்றது.