(தாய் முதலியவர்களாற் காக்கப்படும் தலைவி, தலைவனைப் பிரிந்திருத்தற்கு ஆற்றாளாகித் தோழியை நோக்கி, "தலைவரும் யானும் தனித்திருப்பினும் ஒன்றாக இருந்து ஒருங்கே உயிர் விடுதல் நன்று" என்று கூறியது.) 57. | பூவிடைப் படினும் யாண்டுகழிந் தன்ன | | நீருறை மகன்றிற் புணர்ச்சி போலப் | | பிரிவரி தாகிய தண்டாக் காமமொ | | டுடனுயிர் போகுக தில்ல கடன்றிந் | 5 | திருவே மாகிய வுலகத் | | தொருவே மாகிய புன்மைநா முயற்கே. |
என்பது காப்புமிகுதிக்கண் ஆற்றாளாகிய தலைமகள் தோழிக்குச் சொல்லியது.
(காப்பு மிகுதி - தலைவியைப் புறத்தே செல்லவிடாமல் தாய் முதலியவர்கள் பாதுகாத்தலின் மிகுதி; 'தாய்துஞ்சாமை நாய் துஞ்சாமை ஊர்துஞ்சாமை காவலர் கடுகுதல் நிலவு வெளிப்படுதல் கூகை குழறல் கோழிகுரற் காட்டலென இவை' என்பர் (இறை. 29, உரை.)).
சிறைக்குடியாந்தையார். (பி-ம்) 1. படினுமியாண்டு; 4.போகதில்ல.
(ப-ரை.) தோழி, கடன் அறிந்து - செயக்கடவனவாகிய முறையை அறிந்து, இருவேம் ஆகிய - பிறவிதோறும் தலைவனும் தலைவியுமாகிய இருவேமாகப் பயின்று வந்த, உலகத்து - இவ்வுலகத்தில், ஒருவேம் ஆகிய புன்மை - பிரிவினால் ஒருவராகிய துன்பத்தினின்றும், நாம் உயற்கு - நாம் நீங்கித் தப்புதற்கு, பூ இடைபடினும் - பூவானது தம் இடையிலே பட்டாலும், யாண்டு கழிந்தன்ன - அக்காலம் பல யாண்டுகள் கடந்தாற் போன்ற துன்பத்தை உண்டாக்கும் தன்மையையுடைய நீர் உறை மன்றில் புணர்ச்சிபோல - நீரின்கண் உறைகின்ற மகன்றிற்பறவைகளின் புணர்ச்சியைப் போல, பிரிவு அரிதாகிய தண்டா காமமொடு - பிரிதல் அருமையாகிய நீங்காத காமத்தோடுந உடன் உயிர் போகுகதில்ல - ஒருங்கே எம் உயிர் போவனவாகுக; இஃது எனது விருப்பம்.
(முடிபு) ஒருவேமாகிய புன்மையினின்றும் நாம் உயற்கு உடன் உயிர் போகுகதில்ல.
(கருத்து) தலைவரைப் பிரிந்திருத்தலினும் உயிர்நீத்தல் சிறப்புடையது.
(வி-ரை.) மகன்றில்: இது நீர்வாழ் பறவைகளுள் ஒன்று; இப்பறவைகள் ஆணும் பெண்ணும் பிரிவின்றி இணைந்து வாழும் தன்மையுடையன; இவை மருதத்திணைக் குரியவையென்று தெரிகின்றது (நம்பி) 23); இவை மலர்களிற் பயில்வனவாதலின் உடனுறையுங் காலத்தில் அப்பூ இடைப்படுதலும் கூடுமாதலால், 'பூவிடைப் படினும்' என்றாள்; 'பூவின்கண் திரியும் மகன்றில்' (பரி. 8:44, பரிமேல்.) என்பதைப் பார்க்க. காமம் - மெய்யுறு புணர்ச்சி (குறுந். 42:1).
கடனென்றது கற்புக்காலத்துக் கணவனும் மனைவியும் நடத்தும் இல்லறத்துக்குரிய முறைகளை. இருவேமாகிய உலகமென்றது பல பிறப்பின்கண்ணும் தொடர்ந்து வந்த நட்பைக் குறிக்கொண்டது. நெஞ்சும் உயிரும் ஒன்றுபட்டன வேனும் நம் கடமையை யறிந்து ஒழுகுதற்காக இரண்டு மெய்யுடையேமாயினோமென்பது தலைவியின் கருத்து. ஒருவரால் ஒருவர் இன்பந் துய்க்கும் முறையறிந்து அதற்காக இருவேமாயினோம் என்பதும் ஒன்று; ‘வேறுபாடு இல்லையாயினும், புணர்ச்சியான் வரும் இன்பம் துய்த்தற்பொருட்டாக இன்று யானென்றும் இவளென்றும் வேறுபாட்டோடு கூடிய அழகை யாரறிவார்!’ (திருச்சிற். 8, பேர்.) என்பதையறிக.
காப்புமிகுதிக்கண் தலைவனைப் பிரிந்திருப்ப வளாதலின், ‘இங்ஙனம் தனித்து இருத்தலினும் அவனோடு சேர்ந்துள்ள காலத்திலேயே அவனுயிரும் என்உயிரும் ஒருங்கே நீங்கின் மீண்டும் நட்புடையவராகப் பிறப்போம்’ என்று கூறினாளாயிற்று. இறக்கும்பொழுது உள்ள நினைவின் மிகுதியே மறுபிறப்பிற்குக் காரணமாகுமென்னும் கருத்தினால் இது வேண்டினாள்; ‘உயிர் உடம்பை நீங்கிப் போங்காலத்து அடுத்த வினையும் அது காட்டுங் கதிநிமித்தங்களும் அக்கதிக்கண் அவாவும் உயிரின்கண் முறையே வந்துதிப்ப.... அவ்வுயிரை அவ்வவா அக்கதிக்கட் கொண்டு செல்லுமாதலான்’ (குறள். 361, பரிமேல்.).
தலைவனைப் பிரிந்து தான் ஒருத்தியாதலையும், தன்னைப் பிரிந்து அவன் ஒருவனாதலையும் ‘ஒருவேம்’ என்பதனாற் புலப்படுத்தினாள்.
படினும்: உம்மை இழிவு சிறப்பும்மை. கூகாரம் அசைநிலை.
4. (மேற்கோளாட்சி) தில்ல: இணைச்சொல், ஈறு திரிந்து வந்தது (தொல். இடை. 3. ந.).
மு. ‘முற்பிறப்பில் இருவேமாய்க் கூடிப் போந்தனம்; இவ்வுலகிலே இப்புணர்ச்சிக்கு முன்னர் யாம் வெவ்வேறாய் உற்ற துன்பத்து இன்று நாமே நீங்குதற்கெய்திய பிரிவரிதாகிய காமத்துடனே இருவர்க்கும் உயிர் போவதாக, இஃதெனக்கு விருப்பமென்றானென்பதனால் தந்நிலை யுரைத்தலும் பிரிவச்சமும் கூறிற்று’ (தொல். களவு. 10, ந.).
(கு-பு.)இதனால் நச்சினார்க்கினியர் இச் செய்யுளைத் தலைவன் கூற்றாகக் கொண்டாரென்று தெரிகின்றது; இக்கருத்தே சிறப்புடையது, தலைவி தலைவன் உயிர் போதலைக் கூறுதல் சிறப்பின்றாதலால்.
ஒப்புமைப் பகுதி 1-2. நீருறைமன்றில்: சீவக. 302, 250; நம்பி. 23. மகன்றிற் புணர்ச்சி: “குறுங்கான் மகன்றி லன்ன, உடன்பணர் கொள்கைக் காதலோரே” (ஐங்.381:4-5); “அலர்ஞெமன், மகன்றினன்னர்ப் புணர்ச்சி” (பரி. 8:44).
3. பிரிவரிதாகிய காமம்: (குறுந். 177:7); “அரிதே காதலர்ப் பிரிதல்” (நற்.5:7); “நூலிடை விலங்கினும், கவவுப்புலந் துறையுங் கழிபெருங்காமம்” (அகநா. 361: 5-6). 3-4. பிரிதலைக் காட்டிலும் உயிர் செல்லுதல் நலம்: குறுந். 32:6, ஒப்பு; நற். 129: 1-2, 203: 7-8;ஐங்.111: 3-4: கலி.2:13, 3:6, 4:24, 5: 18-9, 10:21, 21: 12-3; அகநா. 305:8, 339: 11-4. 6. இருவேம்: கலி. 43:4.6. உய்தல்: குறுந்.11:3, ஒப்பு.
மு. | “மணிநீர்க் கயத்து மலரிடை தட்பினும் வார்கழுத்துப் | | பிணிநீர் மையிற்சற்று நீங்கினு மூழி பெயர்ந்தனைய | | துணிநீர் மகன்றிலிற் றண்டாது காமத் துறைபடியும் | | அணிநீர் மையினுயி ரோராங் ககல்கதி லம்புவிக்கே” | | (தணிகைப். களவுப். 72) |
(57)
|