(தலைவன் பொருள்தேடச் சென்ற காலத்தில் அவனது பிரிவை ஆற்றாமல் வருந்திய தலைவியை நோக்கி, "தலைவர் நின்னை மறவார்; தமக்கு வேண்டிய பொருளைப் பெற்று விரைவில் மீளுவர்" என்று தோழி கூறியது.)
 59.   
பதலைப் பாணிப் பரிசிலர் கோமான் 
    
அரலைக் குன்றத் தகல்வாய்க் குண்டுசுனைக்  
    
குவளையொடு பொதிந்த குளவி நாறுநின்  
    
நறுநுதன் மறப்பரோ மற்றே முயலவும் 
5
சுரம்பல விலங்கிய வரும்பொருள் 
    
நிரம்பா வாகலி னீடலோ வின்றே. 

என்பது பிரிவிடை யழிந்த கிழத்தியைத் தோழி வற்புறுத்தியது.

    (அழிந்த - மனம் வருந்திய, வற்புறுத்தியது - ஆற்றியிருத்தல் வேண்டுமென்று துணிவு கூறியது.)

மோசிகீரனார் (பி-ம். மோசிகீரன்).

    (பி-ம்) 1. பரதவர்; 2. அறலைக், அதலைக்; 4.நறு நுதறா வெனின், தாவெ மறப்பரோ மற்றெனா.

    (ப-ரை.) பதலை பாணி - ஒருகண்மாக்கிணையை இயக்கும் தாளத்தையுடைய, பரிசிலர் கோமான் - பாணர் முதலிய இரவலரைப் பாதுகாப்பவனது, அரலை குன்றம் - அரலையென்னும் குன்றத்தின்கண் உள்ள, அகல்வாய் - அகன்ற வாயையுடைய, குண்டுசுனை குவளையொடு - ஆழமுள்ள சுனையின்கண் அலர்ந்த குவளை காட்டுமல்லிகையின் மணம் வீசும், நின் நறு நுதல் - நினது நல்ல நெற்றியை, மறப்பரோ - தலைவர் மறப்பாரோ? முயலவும் - பலநாள் நின்று முயற்சிகளைச் செய்தாலும், சுரம் பல விலங்கிய அரு பொருள் - பாலைநிலம் பல குறுக்கிட்ட கிடைத்தற்கரிய பொருள், நிரம்பாவாகலின் - முற்றக் கை கூடாவாதலின், நீடல் இன்று - முற்றும் பெற்றே மீள்வே மென்று கருதித் தலைவர் காலம் நீட்டித்துத் தங்குதல் இலதாகும்; ஆதலின் நீ வருந்துதலை ஒழிவாயாக.

    (முடிபு) நறுநுதல் மறப்பரோ? பொருள் நிரம்பா ஆகலின் நீடல் இன்று.

    (கருத்து) தலைவர் விரைவில் மீளுவர்.

    (வி-ரை.) பதலை - ஒருகண் மாக்கிணையென்னும் பறை. பரிசிலர் கோமானென்றது பரிசிலருக்குப் பரிசில் தந்து பாதுகாக்கும் தலைவனென்றபடி. அரலைக்குன்றமென்பது ஒரு குன்றத்தின் பெயரென்று தோற்றுகின்றது; ஆயினும் அதன் தலைவன் இன்னானென்பதும் அதன் இருப்பிடமும் இப்பொழுது விளங்கவில்லை; அரலை - பரலுமாம். குளவியொடுஉஉ பொதிந்த குவளைக்கண்ணியை நெற்றி மாலையாக மணத்தைக் கூறினும் பொருந்தும். குளவி நாறுமென்றமையின் நறுமை நன்மையாயிற்று; "பொலநறுந் தெரியல்" (புறநா. 29:3) என்பதன் உரையில், "பொன்னா னியன்ற நல்ல மாலை' என்றும், 'நறுமை பொன்னிற்கு இன்றெனினும் தெரியற்கு அடையாய் நின்றது; நன்மையுமாம்' என்றும் உள்ள பகுதிகளைப் பார்க்க. மற்று, ஏ: அசை நிலை.

    'நின் நறுநுதலை நீவிப்பிரிந்த அவர் அந்நுதலின் அழகையும், தம் பிரிவு நீட்டிக்குமெனின் அழகு குறையுமென்பதையும் மறவாதவராதலின் அங்கே நெடுநாள் தங்கார்; தாம் பெற வெண்ணிய பொருளனைத்தும் பெற்றே மீள்வரென்பையேல், பொருளை முற்றப் பெறுதல் அரிதாதலின் அங்ஙனம் எண்ணாமல் வேண்டியதுமட்டும் பெற்று மீள்வர்' என்று தோழி காரணங்காட்டி வற்புறுத்தினாள்.

    சுரம்பலவற்றைக் கடந்துசென்று பொருள் தேடவேண்டுமாதலின், 'சுரம்பல விலங்கிய வரும்பொருள்' என்றாள். "சென்றோர் முகப்பப் பொருளுங் கிடவாது" (கலி. 18:5) என்பதும், 'நீ நன்குமதித்த பொருளும், சென்றவர்கள் தத்தம் நிலைமைக்கேற்பக் காலம் நீட்டிப்ப நின்று தேடுவதன்றி இப்பொழுதே முகந்துகொள்ள ஓரிடத்தே கிடவாது' என்னும் அதன் உரையும் அன்புடையார் காலம் நீட்டிப்பப் பொருள்தேடி நில்லாரென்பதைப் புலப்படுத்தல் காண்க. நீடலோ: ஓகாரம் அசைநிலை.

    ஒப்புமைப் பகுதி 1. பதலைப் பாணி: "நொடிதரு பாணிய பதலை" (மலைபடு; 11). பாணி: குறுந்.136:5. கலி. 1:13; புறநா. 209:1, 7; அகநா. 50:4, 134:7, 360:11; குறிஞ்சிப். 152.

    2. பரிசிலர் கோமான்: "இல்லோ ரொக்கற் றலைவன்" (புறநா. 95:8); "இல்லோர் செம்மல்" (சிலப். 15:90).

    3. குளவிமலர் மணமுடையது: "குளவிக், கடிபதங் கமழுங் கூந்தல்" (நற்.346:9-10); "நாறிதழ்க் குளவி" (புறநா. 380:7) தலைவி நுதலுக்கு மணம் உண்மை: குறுந். 22:5, ஒப்பு. குளவியும் குவளையும்: நற். 376:5-6. 2-3. சுனைக்குவளை: "பைஞ்சுனைக் குவளை" (குறுந்.342:4-5); 'குவளையம் பைஞ்சுனை" (மலைபடு. 251); "கடவுட் கற்சுனை யடையிறந் தவிழந்த, பறியாக் குவளை மலர்" (நற். 34:1-2); "மல்லலறைய மலிர்சுனைக் குவளை" (அகநா. 308:11); "குவளைப் பைஞ்சுனை" (புறநா. 132:5). குண்டுசுனைக் குவளை: "குண்டுநீர்ப் பைஞ்சுனை பூத்த குவளை" (குறுந். 291:6); "தீநீர்ப் பெருங்குண்டு சுனைப்பூத்த குவளை" (புறநா. 116:1) 5-6. "பொருள்வயி னீடலோ விலர்நின், இருளைங் கூந்த லின்றுயின் மறந்தே" (அகநா. 233: 14-5).

(59)