(தலைவனது பிரிவையாற்றாத தலைவி தோழியை நோக்கி, "தலைவர் என்னோடு அளவளாவாம லிருப்பினும் அவரைக் காணுமாத்திரத்தில் எனக்கு இன்பம் பிறக்கும்; அஃதும் இப்பொழுது இலதாயிற்று" என்று கூறியது.)
 60.   
குறுந்தாட் கூதளி யாடிய நெடுவரைப் 
    
பெருந்தேன் கண்ட விருக்கை முடவன் 
    
உட்கைச் சிறுகுடைஐ கோலிக் கீழிருந்து 
    
சுட்டுபு நக்கி யாங்குக் காதலர் 
5
நல்கார் நயவா ராயினும் 
    
பல்காற் காண்டலு முள்ளத்துக் கினிதே. 

என்பது பிரிவிடை யாற்றாமையிற் றலைமகள் தோழிக்குரைத்தது.

பரணர்.

    (பி-ம்) 1. கூதளிராடிய, கூதாளி, பருவரைப்; 2.இருகை, இருங்கை; 3.உட்குழி சிறுகுடை, 4.நீட்டுபுநக்கி, உருட்டுபுநக்கி; 3-4 கீழிருந்தூட்டுபு.

    (ப-ரை.) தோழி---, குறு தாள் கூதளி - குறிய அடியையுடைய; கூதளஞ்செடி, ஆடிய நெடு வரை - அசைந்த உயர்ந்த மலையிலுள்ள, பெரு தேன் கண்ட - பெரிய தேனடையைக் கண்ட, இருக்கை முடவன் - காலின்மையின் எழுந்து நிற்றற்கு இயலாமல் இருத்தலையுடைய முடவன், உள் கை சிறுகுடை - உள்ளங்கையாகிய சிறிய குவிந்த பாத்திரத்தை, கோலி - குழித்து, கீழ் இருந்து - அம்மலையின் கீழே இருந்தபடியே, சுட்டுபு - அத்தேனிறாலைப் பலமுறை சுட்டி, நக்கியாங்கு - உள்ளங்கையை நக்கி இன்புற்றதைப் போல, காதலர் - தலைவர், நல்கார் நயவார் ஆயினும் - தண்ணளி செய்யாராயினும் விரும்பாராயினும், பல்கால் காண்டலும் - பலமுறை பார்த்தலும், உள்ளத்துக்கு இனிது - எனது நெஞ்சிற்கு இனிமை தருவது.

    (முடிபு) காதலர் நல்கார் நயவாராயினும் பல்காற் காண்டலும் இனிது.

    (கருத்து) தலைவரைக் காணாதிருத்தல் துன்பத்தைத் தருவதாயிற்று.

    (வி-ரை.) தோழியென்னும் விளி வருவித்துரைக்கப் பட்டது. கூதளி - இது கூதாளியெனவும், கூதளம், கூதாளமெனவும் வரும்; கூதாளியென்பதே புணர்ச்சிக்கண் அம்முப் பெற்றும் குறுகியும் வருமென்பர் நச்சினார்க்கினியர் (தொல். உயிர்மயங்கு. 44); இதன் மலர் வெண்ணிற முடையது (முருகு. 192); கூதிர்ப் பருவத்தில் அலர்வது (நற். 244:2).

    பெருந்தேன்: குறுந். 3:4, வி-ரை. காலுடையாரும் ஏறுதற்கரிதென்பாள் நெடுவரை யென்றாள். குடை - பனையோலையாற் செய்யப்பட்டு நீர் எடுத்தற்கும் பருகுதற்கும் உணவுப்பொருள் வைத்தற்குமுரிய ஒரு கருவி (கலி. 23:9; அகந. 121:12; புறநா. 177:16). இங்கே அதனைப் போன்றமையின் உட்கைச்சிறுகுடை யென்றாள். 'முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்பட்டாற்போல' என்னும் பழமொழியொன்று இங்கே நினைத்தற்குரியது. 'முடவன் தேனிறாலிலுள்ள தேன் தன் கையில் வீழப்பெற்றுச் சுவைத்து இன்புறானாயினும் அதனைக் கண்டவளவிலே ஓரின்பம் பெற்றதுபோலத் தலைவருடைய தண்ணளி யையும் நயப்பையும் பெறேனாயினும் அவரைக் காண்டலே ஓரின்பம் தருவதென்று உவமையை விரித்துக் கொள்க. காண்டலும் : உம்மை இழிவுச்சிறப்பு. பல்காற் காண்டலும் என்பதற்கேற்பப் பல்கால் என்பது உவமைக்கும் கூட்டப்பட்டது. இனிதே:ஏகாரம் அசை நிலை.

    1. கூதளி -ஒரு மரம்; கூதளம், கூதாளம், கூதாளி: குறுந். 282:6; புறநா. 168, 380; தொல். 246.ந.

    ஒப்புமைப் பகுதி 2. இருக்கை முடவன்: 'தமக்கு உற்றது உரைக்கலாத மூத்தார்களும் பெண்டிர்களும் இருக்கை முடவரும் ' (இறை. 35, உரை).

    3. குடை: 168:2; நாலடி.289.

    1-3. தேனைக் கண்ட முடவன் அதனை விரும்பல்: "கொடுங்குன்றி னீள்குடுமி, மேற்றேன் விரும்பு முடவனைப் போல" (திருச்சிற். 151).

    5. தலைவன் நல்குதல்: குறுந். 37:1, ஒப்பு.

    5-6. தலைவனைக் காணுதலால் இன்பம் உண்டாதல்: "துனிதீர் கூட்டமொடு துன்னா ராயினும். இனிதே காணுநர்க் காண்புழி வாழ்தல்" (நற். 216: 1-2); "பேணாது பெட்பவே செய்யினுங் கொண்கனைக், காணா தமையல கண்" (குறள். 1283)

(60)