1. தும்பிசேர்கீரன். (பி-ம்) 6. புற்றனஞ்.
(ப-ரை.) தச்சன் செய்த - தச்சனாற் செய்யப்பட்ட, சிறு மா வையம் - சிறிய குதிரை பூட்டப்பெற்ற சிறு வண்டியை, ஊர்ந்து இன்புறார் ஆயினும் - ஏறிச் செலுத்தி இன்பமடையாராயினும், கையின் ஈர்த்து இன்புறூஉம் இளையோர் போல - கையால் இழுத்து இன்பமடையும் சிறுவரைப்போல, உற்று இன்புறேம் ஆயினும் - மெய்யுற்று இன்பமடையேமாயினும், நல் தேர் - நல்ல தேர்களையும், பொய்கை - பொய்கையையுமுடைய, ஊரன் கேண்மை - ஊர்க்குத் தலைவனது நட்பை, செய்து இன்புற்றனெம் - மேன்மேலும் பெருகச் செய்து இன்பமடைந்தோம்: வளை செறிந்தன - அதனால் வளைகள் கழலாமல் இறுகியமைந்தன.
(முடிபு) உற்று இன்புறேமாயினும் ஊரன்கேண்மையைச் செய்து இன்புற்றனெம்; வளை செறிந்தன.
(கருத்து) தலைவர் எம்மை மறந்தாலும் யாம் அவரை மறவே மாயினேம்.
(வி-ரை.) தச்சன் செய்தவை மாவும் வையமுமாகிய இரண்டும். சிறுமா, சிறுவையமென்க. நற்றேரையுடைய ஊரனைப் பற்றிச் சொல்லப் புகுவாள் அத்தேரோடு தொடர்புடைய உவமையையே கூறினாள்.
'இளையோர், பெரியோர் ஊரும் பெரியதேரை ஊர்ந்து இன்புறாவிடினும் அத்தேரை நினைந்து பண்ணிய சிறுதேரை ஈர்த்து, அப்பெரியோர் அடையும் இன்பத்தைப் பெறுவதுபோல, பரத்தையர் பெறும் மெய்யுறு புணர்ச்சியைப் பெற்று இன்புறேமாயினும், தலைவனை நினைந்து உள்ளத்தே நட்பைப் பெருக்குதலினால் அவர் பெற்ற இன்பத்தையே யாம் பெற்றேம்ய என்று உவமையை விரித்துக்கொள்க.
நற்றேர்ப் பொய்கையூரனென்றது, தலைவன் தன் தேரிலேறிப் பரத்தையருடன் பொய்கை நீராடுவானென்றறிந்ததைக் குறித்தது. கேண்மை - நெஞ்சிற் பயின்ற நட்பு; "புணர்ச்சி பழகுதல் வேண்டா வுணர்ச்சிதான், நட்பாங் கிழமை தரும்" (குறள். 785) என்பவாகலின், உணர்ச்சியே புணர்ச்சிக்குரிய பயனாகிய வளை செறிதலை உண்டாக்கியது. தோழி தனக்கும் தலைவிக்குமுள்ள ஒற்றுமைபற்றி உற்றின்புறேமாயினுமென்று தன்மைப்பன்மையாற் கூறினாள்.
வளையே: ஏகாரம் அசை நிலை.
இதனால், 'அவன் ஈண்டு வாராதிருப்பவும் வந்தாறபோன்ற இன்பத்தைப் பெற்றேம்; அதலின் ஈண்டு வந்து செய்வதொன்றிலன்' என்று தோழி வாயில் மறுத்தாளாயிற்று.
விளையாட்டுத்தேரை ஈர்த்து இன்புறும் பருவம் கடந்து மெய்த்தேரை யூர்ந்து இன்புறுவார்போலக் களவுக்காலங் கடந்து மெய்யுறு புணர்ச்சியை இடையீடில்லாமற் பெறுவதற்குரிய கற்புக் காலத்தினேமாகிய யாம் சிறாரைப் போலக் களவுக்குரிய உள்ளப் புணர்ச்சியையே உடையேமாயினேம் என்னும் குறிப்பும் பெறப்படும்.
(மேற்கோளாட்சி) 1. அதனின் இயறல் என்னும் பொருளில் மூன்றாம் வேற்றுமை வந்தது (தொல். வேற்றுமை. 11, இளம். கல்.)
ஒப்புமைப் பகுதி 1-3. சிறுதேரை இளையோர் ஊராமல் ஈர்த்தல்: "தச்சச் சிறாஅர் நச்சப் புனைந்த, ஊரா நற்றே ருருட்டிய புதல்வர்" (பெரும்பாண். 248-9). இளையோர் சிறுதேரை இழுத்தல்: "பொற்காற் புதல்வர் புரவியின் றுருட்டும், முக்காற் சிறுதேர்" (பட். 24-5); "கால்வறேர் கையி னியக்கி நடைபயிற்றா, ஆலமர் செல்வ னணிசால் பெருவிறல், போல வருமென் னுயிர்" (கலி. 81: 8-10); "விளையாடு சிறுதே ரீர்த்துமெய் வருந்தி, யமளித் துஞ்சும்.... புதல்வர்" (மணி. 7: 55-7); "தொழிலுடைச் சிறுபறை பூண்டுதே ரீர்த்து" (திருவாரூர் மும்மணிக். 22:2); ஆண்பாற் பிள்ளைத் தமிழ்களிலுள்ள சிறுதேர்ப் பருவத்தைப் பார்க்க.
4. உற்றின்புறுதல்: "ஐதெமக்கம்ம மெய்தோய் நட்பே" (குறுந். 401:6).5. ஊரன் கேண்மை: குறுந். 264:4, 308:6. 4-6.ஒருவாறு ஒப்பு: குறுந்.42. 6.வளை செறிதல்: குறுந். 260:3.
(61)
1. | இதனைத் தும்பிசொகிநனென்று படித்தற்கும் இடமுண்டு. |