(இயற்கைப்புணர்ச்சிக்கண் தலைவியோடு அளவளாவிய தலைவன் பிற்றைநாளில் முதல்நாட் கண்ட இடத்தில் அவளைத் தலைப்பட்டு இன்புற எண்ணித் தன் நெஞ்சை நோக்கி, "அவள் நறுமையும் மென்மையும் நன்னிறமும் உடையள்; இன்றும் அவளைப் பெறுவேம்" என்று கூறியது.)
 62.   
கோட லெதிர்முகைப் பசுவீ முல்லை 
    
நாறிதழ்க் குவளையொ டிடைப்பட விரைஇ 
    
ஐதுதொடை மாண்ட கோதை போல 
    
நறிய நல்லோண் மேனி 
5
முறியினும் வாய்வது முயங்கற்கு மினிதே. 

என்பது தலைமகன் இடந்தலைப்பாட்டின்கட் கூடலுறு நெஞ்சிற்குச் சொல்லியது.

    (இடந்தலைப்பாடு - இயற்கைப் புணர்ச்சிக்குப் பின் மீண்டும் தலைவியை முன்னாட் கண்ட இடத்திலே சென்று தலைப்படுதல்.)

சிறைக்குடி யாந்தையார்.

    (பி-ம்) 2.நாறிணர்க், டிடைபட, டிடையிடுபு; 4.நறியணல்லோள்; 5.வாயது, முயங்குக வின்னே, முயங்குவமினியே, முயங்குக மினியே .

    (ப-ரை.) நெஞ்சே, கோடல் - காந்தள் மலரையும், எதிர்முகை பசு வீ முல்லை - தோற்றிய அரும்பிலிருந்து உண்டாகிய செவ்வி மலர்களாகிய முல்லைப்பூக்களையும், நாறு இதழ் குவளையொடு - மணக்கின்ற இதழ்களையுடைய குவளைமலர்களோடு, இடைப்பட விரைஇ - இடையிடையே பொருந்தும்படி கலந்து, ஐது தொடைமாண்ட - அழகிதாகத் தொடுத்தல் மாட்சிமைப்பட்ட, கோதைபோல - மாலையைப்போல, நறிய நல்லோள் மேனி - நறு நாற்றத்தையுடைய தலைவியது மேனியானது, முறியினும் வாய்வது - தளிரைக் காட்டிலும் மென்மையும் நிறமும் பொருந்தியது; முயங்கற்கும் இனிது - தழுவுதற்கும் இனியது.

    (முடிபு) நெஞ்சே, நல்லோளது நறிய மேனி முறியினும் வாய்வது; முயங்கற்கும் இனிது.

    (கருத்து) தலைவியை முன்பு தழுவி இன்புற்றதுபோல இப்பொழுதும் இன்புறுவேன்.

    (வி-ரை.) எதிர்தல் - தோன்றுதல்(கலி. 117:3, ந.); பருவத்தை நேர்தல் (ஐந். ஙூம். 31, உரை). பசுவீ - செவ்விப் பூ; பசுமை நிறத்தின்கண் செல்வதன்று; 'பைங்காந்தள் - செவ்விக்காந்தட்பூ' (திருச்சிற். 1, பேர்.) என்பதைப் பார்க்க. மேனியின் இயலைக் கூறினான், இயற்கைப் புணர்ச்சிக்கட் பழகியவனாதலின். இனிதே: ஏகாரம் அசைநிலை.

    (மேற்கோளாட்சி) மு. தலைவன் பிரிந்துழிப் பெருகிய சிறப்பின்கண் அவனுக்குக் கூற்று நிகழ்ந்தது (தொல். கற்பு. 5, இளம்.);1. புணர்ந்துழி மகிழ்ந்து கூறியது (தொல். அகத். 14, களவு. 6, ந.); இயற்கைப்புணர்ச்சிக்கண் வந்தது (தொல். செய்.186, ந.); முயங்குதலுறுத்தல் (நம்பி. 127); மெய்யுறு புணர்ச்சி (இ.வி. 405).

    ஒப்புமைப் பகுதி 1. எதிர்முகை: "எதிர்மலர்" (நான்மணி. காப்பு.); நற்.52:2. பசுவீ முல்லை: குறுந். 221:5.

    1-4. தலைவியின் மேனி மலர்களின் மணத்தையுடைமை: (குறுந். 84: 4-5, 168: 1-4); "பொய்கைப் பூவினு நறுந்தண் ணியளே" (ஐங். 97:4). தலைவியின் மேனிக்கு மலர்மாலை உவமை: (குறுந். 84: 4-5, 168: 1-4, 229:6); "திருவளர் தாமரை சீர்வளர் காவிகளீசர்தில்லைக், குருவளர் பூங்குமிழ் கோங்குபைங் காந்தள்கொண் டோங்கு தெய்வ, மருவளர் மாலையொர் வல்லியி னொல்கி யனநடைவாய்ந், துருவளர் காமன்றன் வென்றிக் கொடிபோன் றொளிர்கின்றதே" (திருச்சிற். 1); "பேதையைப் பெச்சியலைப் பெய்வளையை யென்மார்பிற், கோதையை" (பு.வெ. 255).

    4-5. தலைவிமேனிக்கு முறி உவமை: (குறுந். 222:7); "முறிமேனி..... வேய்த்தோ ளவட்கு" (குறள். 1113).5. தலைவி மேனியின் நறுமை, மென்மை, இனிமை: குறுந். 70: 2-5.

(62)
 1. 
இக்கருத்து, சிறப்புடையதாகத் தோற்றுகின்றது.