(பொருள் தேடவேண்டுமென்று துணிந்த நெஞ்சை நோக்கி, "பொருள் தேடச் செல்லின் தலைவியைப் பிரிய வேண்டும்; அவளைப் பிரிவது அரிது" என்று உணர்த்தித் தலைவன் செலவு தவிர்ந்தது.)
 63.   
ஈதலுந் துய்த்தலு மில்லோர்க் கில்லெனச்  
    
செய்வினை கைம்மிக வெண்ணுதி யவ்வினைக்  
    
கம்மா வரிவையும் வருமோ 
    
எம்மை யுய்த்தியோ வுரைத்திசி னெஞ்சே  

என்பதி பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குச் சொல்லியது.

    (கடைக் கூட்டுதல் - முடிவு போக்குதல் (பொருந. 175, ந.); துணிதல்.)

    (கு-பு.) பொருள் கடைக்கூட்டிய நெஞ்சு: குறுந். 71, கருத்து; அகநா. 335, கருத்து.

உகாய்க்குடிகிழார் (பி-ம். உகாய்க்குடிக்கிழார்).

    (ப-ரை.) நெஞ்சே---, ஈதலும் - இரவலர்க்குக் கொடுத்தலும், துய்த்தலும் - இன்பங்களை அனுபவித்தலும், இல்லோர்க்கு - பொருளில்லாத வறியவர்க்கு, இல் என - இல்லையென்று கருதி, செய்வினை - பொருள் செய்தற்குரிய செயல்களை, கைம்மிக எண்ணுதி - மிக எண்ணாநின்றாய்; அ வினைக்கு - அச்செயல் செய்தற்குத் துணையாக, அ மா அரிவையும் - அழகிய மாமை நிறத்தையுடைய தலைவியும், வருமோ - வருவாளோ? எம்மை உய்த்தியோ - எம்மை மட்டும் செலுத்துகின்றாயோ? உரைத்திசின் - சொல்லுவாயாக.

    (முடிபு) நெஞ்சே, செய்வினை எண்ணுதி; அரிவையும் வருமோ? எம்மை உய்த்தியோ? உரைத்திசின்.

    (கருத்து) இவளைப் பிரிந்து செல்லுதல் இயலாதது.

    (வி-ரை.) ஈந்து எஞ்சியவற்றையே துய்த்தல் இல்வாழ்வான் கடப்பாடாதலின் ஈதலை முன்னர்க் கூறினான்; "விருந்தோம்பி, மிச்சின் மிசைவான்" (குறள். 85) என்பதை ஓர்க. ஈதலாகிய அறமும் துய்த்தலாகிய இன்பமும் பொருளால் ஆகுமாதலின் அம்முறை பற்றிக் கூறினானெனலுமாம்; "வடுவிலா வையத்து மன்னிய மூன்றில் நடுவண தெய்த விருதலையுமெய்தும்" (நாலடி. 114); "ஆராயிற் றானே யறம்பொருளின்பமென், றாரா ரிவற்றி னிடையதனை யெயெதுவார், சீராரிருதலையு மெய்துவர்" (திவ். சிறிய திருமடல், 3-4). இல்லோர் - பொருளில்லாதவர் (குறுந். 120:1); பொருளின்மையையே இன்மையென்றும், பொருளில்லோரையே இல்லோரென்றும் வழங்குதல் மரபு. இல்லோர்க்கென்பதற்கு வேற்றுநாட்டுக்குச் சென்று பொருண்முயற்சி செய்யாமல் இல்லிலே தங்கியிருப் பாருக்கெனலுமாம்; "செறுவோர் செம்மல் வாட்டலுஞ் சேர்ந்தோர்க், குறுமிடத் துய்க்கு முதவி யாண்மையும், இல்லிருந்தமைவோர்க் கில்லென் றெண்ணி" (அகநா. 231 : 1-3) என்பதைக் காண்க. இல்லோர்க்கு இல்லென என்ற குறிப்பால் செய்வினை யென்பது பொருள் செய்வினையைச் சுட்டியது. உரைத்திசின்: சின், முன்னிலையசை; "உரைத்திசிற் றோழி" (குறிந். 302:1); இதன் இலக்கணம், "மியாயிக மோமதி இகுஞ்சினென்னும், ஆவயி னாறும் முன்னிலை யசைச்சொல்" (தொல். இடை. 26) என்பது.

    'நெஞ்சே, நீ பொருள் செய்யும்பொருட்டு வேற்றுநாட்டுக்குப் போக எண்ணுகின்றாய்; அங்கே இத்தலைவி வருவாளோ? வாராளாகலின் நான் மட்டும் போகவேண்டும்; இவளைப் பிரிந்து நான் செல்ல ஆற்றேனன்றே' என்று கூறித் தலைவன் செலவழுங்கினான். இங்ஙனம் அழுங்கியது செல்லாமலே இருத்தற்கன்று; தன் மனத்திலுள்ள பேரன்பைப் புலப்படுத்தி ஒருவகையால் அவளை ஆற்றுவித்துப் பின்பு பிரிவதே அவன் கருத்து; இதுவே புலனெறி வழக்கமென்பது, "செலவிடை யழுங்கல் செல்லாமை யன்றே, வன்புறை குறித்த றவிர்ச்சி யாகும்" (தொல். கற்பு. 44) என்பதனால் அறியலாகும்.

    (மேற்கோளாட்சி) மு. இன்மையது இளிவைத் தலைவன் நெஞ்சிற்குக் கூறியது; இது (பொருள் வயிற்பிரிவு) வணிகர்க்கே யுரியது (தொல். அகத். 41, ந.); தலைவியை வருகின்றாளன்றேயெனக் கூறித் தலைவன் செலவழுங்கியது (தொல். கற்பு. 5); மறுத்துரைப்பதுபோல நெஞ்சினை இளிவரல்பற்றிக் கூறியது (தொல். பொருளியல், 2, ந.).

    ஒப்புமைப் பகுதி 1. இல்லோர்க்கு ஈதல் இல்லை: "இருள்படு நெஞ்சத் திடும்பை தீர்க்கும், அருணன் குடைய ராயினு மீதல், பொருளில் லோர்க்கஃ தியையா தாகுதல், யானு மறிவென் மன்னே" (அகநா. 335:1-4); அகநா.231: 1-3. 1-5 இல்லோர்க்குத் துய்த்தல் இல்லை: (குறுந். 120:1); "வறியாரிருமை யறியார்" (திருச்சிற். 333). இல்லோர்க்கு ஈதலும் துய்த்தலும் இல்லை: "இசையு மின்பமு மீதலு மூன்றும், அசைவுட னிருந்தோர்க் கரும்புணர் வின்மென" (நற். 214:1-2).

    2. கைம்மிகல் :நற்.39:3; கலி.46:23, 58:7, 107:24.

    1-2."அரிதாய வறனெய்தி யருளியோர்க் களித்தலும், பெரிதாயபகைவென்று பேணாரைத் தெறுதலும், புரிவமர் காதலிற் புணர்ச்சியுந் தருமெனப், பிரிவெண்ணிப் பொருள்வயிற் சென்றநங் காதலர்" (கலி. 11: 1-4). அம்மாவரிவை: புறநா. 349:5; குறள்.1107.2-3: குறுந்.347: 4-6. 3. 4.உரைத்திசினெஞ்சே: நற். 03:1.

(63)