(தலைவன் பிரிவை ஆற்றாமலிருந்த தலைவியை நோக்கி, "அவர் நின் துன்பத்தையறிவர்; ஆதலின் விரைவில் மீளவர்" என்று தோழி கூற, "அவர் அறிந்தவராயிருந்தும் இன்னும் வந்திலர்" என்று தலைவி கூறியது.)
 64.   
பல்லா நெடுநெறிக் ககன்று வந்தெனப்  
    
புன்றலை மன்ற நோக்கி மாலை 
    
மடக்கட் குழவி யணவந் தன்ன 
    
நோயே மாகுத லறிந்தும் 
5
சேயர் தோழி சேய்நாட் டோரே. 

என்பது பிரிவிடை யாற்றாமை கண்டு, வருவரெனச் சொல்லிய தோழிக்குக் கிழத்தி உரைத்தது.

    (வருவர் - தலைவர் வருவர்.)

கருவூர்க் கதப்பிள்ளை (பி-ம். கருவூர்க் கந்தப்பிள்ளை, கருவூர்க் கந்தப்பிள்ளைச் சாத்தனார்).

    (பி-ம்) 1. கன்று வருந்தெனப்; 3. மக்கட்குழவி, யலம் வந்தன்ன, யவண்வந் தன்ன, யென வந்தனரே; 4.நோவே.

    (ப-ரை.) தோழி---, பல் ஆ - பல பசுக்கள், நெடு நெறிக்கு அகன்று வந்தென - நெடிய வழியின்கண் நீங்கிச் சென்றன வாக, புன்தலை மன்றம் நோக்கி - அவை தங்கி யிருத்தற்குரிய புல்லிய இடத்தையுடைய மன்றத்தைப் பார்த்து, மாலை - மாலைக்காலத்தில் மடம் கண்குழவி - மடப்பம் பொருந்திய கண்ணையுடைய கன்றுகள், அணவந்தன்ன நோயேம் ஆகுதல் அறிந்தும் - தலையெடுத்துப் பார்த்து வருந்தினாற் போன்ற தம் வரவு நோக்கிய துன்பத்தை யுடையேமாதலை அறிந்திருந்தும், சேய்நாட்டோர் - நெடுந்தூரத்தேயுள்ள நாட்டுக்குச் சென்ற தலைவர், சேயர் - இன்னும் நெடுந்தூரத் திலேயுள்ளார்,

    (முடிபு) தோழி, சேய்நாட்டோர் நோயேமாகுதல் அறிந்தும் சேயர்.

    (கருத்து) தலைவர் நாம் துன்புறுவோமென்பதை அறிந்தவராயிருந்தும் இன்னும் வந்திலர்,

    (வி-ரை.) படர்க்கையிலும் வந்தென்பது செல்லுதலென்னும் பொருளில் வந்தது; தொல். கிளவி. 29, உரை. பசுக்கள் சென்றது மேய்தற்கு. புன்றலை - பொலிவழிந்த இடம்; பசுக்கள் இன்மையின் பொலிவழிந்த தாயிற்று. மன்றம் - பசுக்கள் தங்கியிருக்கும் இடம்; "ஆன்கணம், கன்று பயிர் குரல மன்று நிறை புகுதர" (குறிஞ்சிப். 217 -8); இதனை யுடையராயிருத்தல் பற்றி இடையர்கள் மன்றாடிகள் (திருவால.52:5, 11) என்னும் பெயருடையராயினார்; இப்பெயர் சிலாசாஸனங்களிற் காணப்படுகின்றது. மடக்கண் - மென்மைபொருந்திய கண்; கன்றாதலின் மடக்கண் உடைய தாயிற்று.

    மேயச் சென்ற பசுக்கள் மாலைக்காலத்தில் ஊர்க்கு மீண்டு வந்து மன்று புகுவது வழக்கம்; அதனால் மாலையில் கன்றுகள் தம் தாய்ப் பசுக்களை எதிர்நோக்கியிருந்தன; "கறவை கன்று வயிற் படர" (குறுந். 108:2). அணவருதல் - தலையெடுத்துப் பார்த்து வருந்துதல்; "அணந்த யானை" (குறிஞ்சிப். 35) என்பதற்கு, 'மேனோக்கி வருந்தின யானை' என்று நச்சினார்க்கினியர் உரையெழுதுதல் காண்க. அலம் வந்தன்னவென்ற பாடத்திற்கு மனஞ் சுழன்றாற்போன்ற வென்று பொருள் கொள்க.

    பிரிந்து சென்ற பசுக்கள் மாலைக்காலத்தில் மீண்டு வருதலை அவற்றின் கன்றுகள் எதிர்நோக்கி நிற்றலைப்போல, பிரிந்து சென்ற தலைவனது வரவை உரிய பருவத்தில் எதிர்நோக்கியிருப்பேனென்று உவமையை விரித்துக்கொள்க. புன்றலையென்று உவமைக்குக் கூறியதற்கேற்ப அவரில்லாமையாற் பொலிவிழந்த இவ்விடத்தைப் பார்த்து யான் வருந்தி னேனென்பதும் கொள்க.

    "அவர் நின் துன்பத்தை அறியாதிரார்" என்று தோழி ஆற்றுவித்தாளாதலின், "அறிந்தும் இன்னும் சேயராயினர்" என்று வருந்தினாள்.

    தாய்ப் பசுவிற்கும் கன்றுக்கும் உள்ள அன்பு மிகச் சிறந்ததாதலின் அது தாய்க்கும் பிள்ளைக்குமுள்ள அன்புக்கு உவமை கூறப்படுவதோடு, தலைவன் தலைவியருக்கு இடையிலுள்ள அன்பு, இறைவன் அடியார்க்கு இடையிலுள்ள அன்பு முதலியவற்றிற்கும் கூறப்படுதல் மரபு; "கன்றுபிரி காராவின் றுயருடைய கொடி" (கம்ப. குகப்.) என்று தாயன்புக்கும், "தமியர் தாமே, செல்பவென்ப.... பண்பில் கோவலர் தாய்பிரித்தியாத்த, நெஞ்சமர் குழவி போல நொந்துநொந், தின்னாமொழிது மென்ப" (அகநா. 293:9-13) என்று தலைவியின் அன்புக்கும், "கற்றாவின் மனம் போலக் கசிந்துருக வேண்டுவனே" (திருவா.) என்று அடியாரது அன்புக்கும் உவமையாக வருதல் காண்க.

    அறிந்தும்: உம்மை உயர்வுசிறப்பு. நாட்டோரே: ஏகாரம் அசைநிலை.

    ஒப்புமைப் பகுதி 1. பசுவின் கன்று தாயை நோக்கி அழைத்தல்: அகநா. 14: 9-11. அணவரல்: குறுந்.128:3, பரி. 1:2.

    1-4. தலைவன் வரவை எதிர்பார்க்கும் தலைவிக்குத் தாய்ப் பசுவை எதிர்பார்க்கும் கன்று: குறுந். 132: 4-6.

(64)