(கார்ப்பருவம் வந்ததையறிந்த தலைவி, தலைவன் வாராமையால் வருந்தி "இன்னும் நீங்கள் உயிரோடு இருக்கின்றீர்களோ வென்று கேட்பதுபோலக் கார்ப்பருவம் வந்தபின்பும் தலைவர் வந்திலர்; இனி என் செய்வேன்!" என்று தோழியிடம் வருந்திக் கூறியது.)
 65.   
வன்பரற் றெள்ளறல் பருகிய விரலைதன்  
    
இன்புறு துணையொடு மறுவந் துகளத்  
    
தான்வந் தன்றே தளிதரு தண்கார் 
    
வாரா துறையுநர் வரனசைஇ 
5
வருந்திநொந் துறைய விருந்திரோ வெனவே. 

என்பது பருவங்கண்டு அழிந்த (பி-ம். ஒழிந்த) தலைமகள் தோழிக்கு உரைத்தது.

கோவூர் கிழார்.

    (பி-ம்) 1. வன்பாற்; 2. மருவந்து; 3.களிதரு; 4-5.வருந்தி, நோநொந்துறைய விருந்தினரோ; 5.விருந்தீரோ, விருந்தன்றாலெனவே, விருந்தனிரோ.

    (ப-ரை.) தோழி, வன் பரல் தெள் அறல் பருகிய - வலிய பருக்கைக் கற்களினிடத்தேயுள்ள தெளிந்த நீரைக் குடித்த, இரலை - ஆண்மான், தன் இன்புறு துணையொடு - இன்பத்தை நுகர்தற்குரிய தன்னுடைய பெண்மானோடு, மறுவந்து உகள - களிப்பினாற் சுழன்று துள்ளி விறையாடா நிற்கவும், வாராது உறையுநர் - இங்கே வாராமல் சென்ற இடத்தே தங்கிய தலைவர், வரல் நசைஇ - மீண்டும் வருதலை விரும்பி, வருந்தி நொந்து உறைய - மிகவருந்தித் தங்கும் பொருட்டு, இருந்திரோ என - உயிர் வைத்துக் கொண்டிருந்தீரோ வென்று கேட்பதற்கு, தளிதரு தண் கார் - மழைத்துளியைத் தருகின்ற தண்ணிய கார்ப் பருவம், வந்தன்று - வந்தது.

    (முடிபு) உறையுநர் வரல் நசைஇ இருந்திரோ எனக் கார் வந்தன்று.

    (கருத்து) கார்ப்பருவம் வந்தபின்பும் தலைவர் வந்திலர்.

    (வி-ரை.) மான் தன் துணையோடு உகளும்படி கார்ப் பருவம் வரவும், தலைவர் தம் துணையோடு மகிழும்படி வந்து சேர்ந்தில ரென்னும் குறிப்புத் தோன்றுகின்றது. 'கார்ப்பருவம் வந்த பின்பும் நாம் உயிரோடு இருத்தல் பிழை' என்னும் நினைவினளாதலின் அக்கருத்தை அப்பருவம் கேட்பதாக அமைத்தாள். இனி அவர் விரைவில் வாராவிடின் உயிர் வாழ்தலருமை என்பதும் புலப்பட்டது.

    தான், ஏகாரங்கள்: அசைநிலைகள்.

    ஒப்புமைப் பகுதி 1. பரலிலுள்ள நீர்: "பரவலற்படுநீர்" (குறுந். 250:1) அகநா. 4:4, மலைபடு. 198; "பரலவ லூறற் சிறுநீர்" (நற். 333:3.) பரலும் இரலையும்: "பரலவ லடைய விரலை தெறிப்ப" (அகநா. 4:4)

    2. மறுவருதல்: குறுந். 45:4, ஒப்பு; அகநா.22:4.

    1-2. பரல்களிலுள்ள நீரைப் பருகி இரலைமான் பெண்மானோடு உகளுதல்: குறுந். 250:1-2. இரலையும் துணையும் உகளல்: (குறுந்.338: 1-2);"அறுகோட் டிரலையொடு மான்பிணை யுகளவும்" (பட். 245); "பணையெருத் தெழிலேற்றின் பின்னர்ப், பிணையுங் காணிரோ பிரியுமோ வவையே" (கலி. 20: 22-3); "மடப்பிணை தழீஇத், திரிமருப் பிரலை புல்லருந் துகள" (அகநா. 14:5-6); "மறியுடன் றழீஇய மடமானம்பிணை, துள்ளுநடை யிரலையொடு வெள்ளிடைக் குழும" (பெருங்.1. 54:38-9).

    1-3. கார்ப்பருவத்தில் இரலையும் துணையும் இணைந்திருத்தல்: "திரிமருப் பிரலையொடு மடமா னுகள, எதிர்செல் வெண்மழை பொழியுந் திங்களின்" (முல்லை. 99-100); "அரக்கத்தன்ன.... மடப்பிணை தழீஇத் திரிமருப் பிரலை, புல்லருந் துகள", "மண்கண் குளிர்ப்ப வீசித் தண்பெயல், பாடுலந் தன்றே பறைக்குர லெழிலி... அண்ணலிரலை யமர்பிணை தழீஇத், தண்ணறல் பருகித் தாழ்ந்துபட் டனவே", "இருதிரி மருப்பி னண்ண லிரலை, செறியிலைப் பதவின்... மடப்பிணை யருத்தித், தெள்ளாற றழீஇய வார்மண லடைகரை, மெல்கிடு கவுள துஞ்சுபுறங் காக்கும்", "கார்தளி பொழிந்த வார்பெயற் கடைநாள்... தண்ணறும் படுநீர் மாந்திப் பதவருந்து, வெண்புறக்குடைய திரிமருப், பிரலை, வார்மண லொருசிறைப் பிடவவிழ் பொழுநிழற், காமர் துணையொ தேமுறவதிய", "படுமழை பொழிந்த பயமிகு புறவின்.... திரிமருப் பிரலை தெள்ளறல் பருகிக், கார் துணையொடேமுற வதிய", "இருவிசும்பிவர்ந்த கருவி மாமழை, நீர்செறி நுங்கின் கண்சிதர்ந்தவைபோற், சூர்பனிப் பன்ன தண்வர லாலியொடு, பரூஉப்பெயலழிதுளி தலைஇ வானவின்று, குரூஉத்துளி பொழிந்த பெரும்புலர்வைகறை, செய்துவிட்டன்ன செந்நில மருங்கிற், செறித்துநிறுத் தன்ன தெள்ளறல் பருகிச், சிறுமறிதழீஇய தெறிநடை மடப்பிணை, வலந்திரி மருப்பினண்ண லிரலையொ, டலங்குசினைக் குருந்தி னல்குநிழல் வதிய", "மறியுடை மடப்பிணை தழீஇப் புறவிற், றிரிமருப் பிரலை பைம்பவருகள, வார்பெய லுதவிய கார்செய் காலை" (அகநா. 14:1-6, 23:1-9, 34:4-8, 139:5-12, 154:1-9, 304:1-10, 314:5-7); "கருவியல் கார்மழை கால்கலந்தேத்த, உருகு மடமான் பிணையோ டுகளும்" (திணை மொழி. 25); "கார்வளம் பழுனிக் கவினிய கானத்து.... சிறுபிணை தழீஇய திரிமருப்பிரலை" (பெருங். 1. 49:101-14).

    5. வருந்தி நொந்துறைதல்: குறுந். 192:2, 400:7

(65)