கோவதத்தன் (பி-ம். கோவத்தன்). (பி-ம்.) 1. மடவை; 4. கொடியிணர் பூத்த; 5.வம்பு.
(ப-ரை.) கல் பிறங்கு அத்தம் சென்றோர் - கற்கள் விளங்கும் பாலைநிலத்து அருவழியைக் கடந்து சென்ற தலைவர், கூறிய - மீண்டு வருவேனென்று சுட்டிக் கூறிய பருவம் - கார்ப்பருவம், வாரா அளவை - வாராத காலத்திலே, வம்ப மாரியை - பருவமல்லாத காலத்துப் பெய்யும் மழையை, கார் என கார் என - கார் காலத்து மழையென்று, மதித்து - கருதி, நெரிதர - நெருங்கும்படி, கொம்புசேர் கொடி இணர் ஊழ்த்த - சிறு கொம்புகளிற் சேர்ந்த ஒழுங்காகிய பூங்கொத்துக்களைப் புறப்பட விட்டன; ஆதலின், தடவு நிலை கொன்றை - பரந்த அடியையுடைய கொன்றை மரங்கள், மன்ற - நிச்சயமாக, மடவ - பேதைமையையுடைய.
(முடிபு) பருவம் வாரா அளவை வம்பமாரியைக் காரென மதித்து இணர் ஊழ்த்த; அதனாற் கொன்றை மடவ.
(கருத்து) இது கார்ப்பருவம் அன்று; ஆதலின் நீ வருந்தற்க.
(வி-ரை.) தலைவி, "கார்ப்பருவம் வந்துவிட்டது; மழை பெய்கின்றது; கொன்றையும் பூத்தன; இன்னும் அவர் வந்திலர்" என்று கூறி இரங்கினாளாதலின், 'இது கார் காலமன்று' என்று வற்புறுத்துந் தோழி தலைவிகூற்றை மறுப்பாளாய், " இம்மழை வம்ப மாரி; இதைக்கண்டு அறியாமையால் கொன்றைகள் பூத்தன" என்றாள். இங்ஙனம் பருவத்தைத் தெரிவிக்கும் பொருள்களின் மேல் அறியாமையை ஏற்றிக் கூறும் மரபு, "பெருந்தண் மாரிப் பேதைப் பித்திகத், தரும்பே முன்னு மிகச்சிவந் தனவே", "மடவ வாழி மஞ்ஞை" (குறுந். 94:1-2, 251:1) என்று பின்னும் வந்துள்ள செய்யுட் பகுதிகளால் உணரப்படும். கல்-மலையுமாம். கொன்றையின் மலர்கள் நீண்ட கொத்தாக இருத்தலின், 'கொடியிணர்' என்றாள். கொன்றை கார்காலத்தில் மலர்வது. ஊழ்த்த - செவ்வியழிந்த: குறுந்.110:5; கலி. 27; அகநா. 10:2.
மதித்தே: ஏகாரம், அசைநிலை.
(மேற்கோளாட்சி) 5. வம்பு என்னும் உரிச்சொல் நிலையின்மைப் பொருள் குறித்து வந்தது (தொல். உரி. 31, சே. தெய்வச்.59, ந.; இ.வி. 290).
மு. தலைவிக்குத் தோழி பருவம் அன்றென்றது (தொல் .அகத். 42, இளம்.); பருவமன்றென்று வற்புறுத்தலின் இச்செய்யுள் இருத்தல் நிமித்தமானது (தொல். அகத்.14, ந.); பருவமன்றெனத் தோழி படைத்து மொழிந்தது (தொல் .கற்பு. 9, ந.).
ஒப்புமைப் பகுதி 3. தடவுநிலை: குறுந். 219:6.
2. கல்பிறங்கத்தம்: அகநா.7:14, 79:16; சிலப். 16:57; மணி. 13:39; குறுந். 174:4.
1-4. கொன்றையின் கொடியிணர்: "புழற்காய்க் கொன்றைக் கோடணி கொடியிணர்" (நற். 266:4); "கொன்றை கொடியிணரூழ்ப்ப" (பரி. 8:24).
5. வம்பமாரி: "வம்பப் பெரும்புயல்" (புறநா. 325:2); "வம்பார் குன்றம்" (தே.திருஞா. திருக்குற்றாலம்). 1-5. கொன்றை கார் காலத்தில் மலர்தல்: குறுந். 21:3-4, ஒப்பு.
மு. | "நீரற வறந்த நிரம்பா நீளிடைத் |
| துகில்விரித் தன்ன வெயிலவி ருருப்பின் |
| அஞ்சுவரப் பனிக்கும் வெஞ்சுர மிறந்தோர் |
| தாம்வரத் தெளித்த பருவங் காண்வர |
| இதுவோ வென்றிசின் மடந்தை மதியின்று |
| மறந்துகடன் முகந்த கமஞ்சூன் மாமழை |
| பொறுத்தல் செல்லா திறுத்த வண்பெயல் |
| காரென் றயர்ந்த வுள்ளமொடு தேர்வில |
| பிடவுங் கொன்றையுங் கோடலும் |
| மடவ வாகலின் மலர்ந்தன பலவே" (நற். 99.) |
(66)