(தலைவனது பிரிவை ஆற்றாத தலைவி தோழியை நோக்கி, "பிரிந்து சென்ற தலைவர் நம்மை நினையாரோ? நினைப்பின் வந்திருப்பாரன்றே" என்று கூறுயது.)
 67.   
உள்ளார் கொல்லோ தோழி கிள்ளை 
    
வளைவாய்க் கொண்ட வேப்ப வொண்பழம் 
    
புதுநா ணுழைப்பா னுதிமாண் வள்ளுகிர்ப் 
    
பொலங்கல வொருகா சேய்க்கும் 
5
நிலங்கரி கள்ளியங் காடிறந் தோரே. 

என்பது பிரிவிடை யாற்றாது (பி-ம். ஆற்றாத) தலைமகள் தோழிக்கு உரைத்தது.

அள்ளூர் நன்முல்லை.

    (பி-ம்) 3.புதுநூனுழைப்பான்.

    (ப-ரை.) தோழி---, கிள்ளை - கிளி, வளை வாய் கொண்ட - வளைந்த அலகினிடத்திலே கொண்ட, வேப்ப ஒள் பழம் - வேம்பினது ஒள்ளிய பழமானது, புது நாண் நுழைப்பான் - புதிய பொற்கம்பியை ஊடு செலுத்தும் பொற்கொல்லனது, நுதிமாண் வள் உகிர் - முனை மாட்சிமைப்பட்ட கூரிய கைந்நகத்திற் கொண்ட, பொலம் கலம் ஒரு காசு ஏய்க்கும் - பொன்னாபரணத்திற்குரிய ஒரு காணை ஒக்கும், நிலம் கரி - நிலம் கரிந்துள்ள, கள்ளியங்காடு - கள்ளியையுடைய பாலை நிலத்தை, இறந்தோர் - கடந்து சென்ற தலைவர், உள்ளார் கொல் - என்னை நினையாரோ?

    (முடிபு) தோழி, காடிறந்தோர் உள்ளார்கொல்?

    (கருத்து) தலைவர் என்னை மறந்தனர் போலும்!

    (வி-ரை.) கிளியின் அலகுக்குக் கைவிரல் நகங்களும், வேப்பம் பழத்திற்கு உருண்டையான பொற்காசும் உவமைகள். காசைப் பற்றுதற்குரிய தகுதியுடையதைப் புலப்படுத்தி, 'நுதிமாண் வள்ளுகிர்' என்றாள். ஒருவகைப் பொற்காசு உருண்டை வடிவமாகவும் இருந்ததென்பது,

  
"காசி னன்ன போதீன் கொன்றை"  
  
".... புன்கா லுகாஅய்க் 
  
 காசினை யன்ன நளிகனி"              (குறுந். 148:4, 274:1-2) 
  
"பொன்செய் காசி னெண்பழந் தாஅம்  
  
 குமிழ்"                                 (நற். 274:4-5) 

என்பவற்றாலும் அறியப்படும். பொன்னென்பது செய்யுளிற் பொல மென்றாயிற்று. பொலங்கலமென்றது இங்கே காசு மாலையை. வெம்மையால் நிலங்கரிந்தது.

    வேம்பும் கள்ளியும் பாலைநிலக் கருப்பொருள்கள்.

    கள்ளியங்காடு: அம், சாரியை. ஓகாரமும் ஏகாரமும் அசைநிலை.

    உள்ளார் கொல்லென்றது நினைத்தால் வந்திருப்பரென்னும் நினைவிற்று.

    ஒப்புமைப் பகுதி 1. உள்ளார் கொல்லோ தோழி: குறுந். 16:1, ஒப்பு. 1-2. கிளியின் வளைந்த வாய்: "வளைவாய்ச் சிறுகிளி" (குறுந். 141:1); "கிளிவா யொப்பின்" (குறுந். 240:2); "வளைவாய் கிள்ளை" (பெரும் பாண். 300).

    3-4. காசை நாணிற் கோத்தல்: "நாண்வழிக் காசு போலவும்" (இறை.2, உரை).

    1-5. கள்ளியங் காடிறந்தோர் உள்ளார் கொல்: குறுந். 16:1-6.

(67)