ஓரம்போகியார் (பி-ம். ஓரம் போதியார்). (பி-ம்.) 5.அனைமெல்லியல், அனைமெல்லியள்யா மூயங்குங்காலே.
(ப-ரை.) நெஞ்சே, ஒடுங்கு ஈர் ஓதி - ஒடுங்கிய நெய்ப்பையுடைய கூந்தலையும், ஒள்நுதல் - ஒள்ளிய நுதலையும் உடைய, குறுமகள் - தலைவி, நறு தண் நீரள் - மணத்தையும் தண்மையையும் உடைய தன்மையினள்; ஆயினும், அரு அணங்கினள் - பிரிந்தகாலத்துப் பொறுத்தற்கரிய வருத்தத்தைத் தருபவள்; அவள் - அவளை, இனையள் என்று - இத்தகையினளென்று, புனை அளவு கிளவி சில மெல்லிய - அவளுடைய சொற்கள் சின்மையையுடையன; மென்மையை உடையன; யான் முயங்குங்கால் - யான் அவளை அணையும்பொழுது, அணைமெல்லியள் - பஞ்சணையைப் போன்ற மென்மையை உடையவள்.
(முடிபு) குறுமகள் நறுந்தண்ணீரள்; அணங்கினள்; புனையளவு அறியேன்; கிளவி சில மெல்லிய; அணையுங்கால் அணை மெல்லியள்.
(கருத்து) இவள் ஐம்புலனுக்கும் இன்பந்தருபவள்.
(வி-ரை.) ஒடுங்கீரோதி யென்றது, ஐவகைக் கூந்தற் பகுப்பில் ஒன்றாகிய சுருளை (பதிற். 14:15, உரை).புனையப் புனைய மேலும் புனையத் தோன்றுவதன்றி இவ்வளவே என வரையறுத்து நிறுத்தலாகாமையின், புனையள வறியேனென்றான்.
ஓதி, ஒண்ணுதற் குருமகளென்றமையின் காட்சியின்பமும், சில மெல்லியவே கிளவி யென்பதனாற் கேள்வியின்பமும், தண்ணீரள் அணை மெல்லியளென்றமையால் ஊற்றின்பமும், நறுநீரளென்றமையின் உயிர்ப் பின்பமும், யான் முயங்குங்காலென்பதனாற் குறிப்பாகச் சுவை இன்பமும் ஒருங்கே பெறுதலை உணர்த்தினான்.
ஏகாரங்கள் அசைநிலை.
(மேற்கோளாட்சி) மு. புணர்ச்சியால் தலைவன் மகிழ்ந்தது (தொல். களவு. 11, இளம்.); இடந்தலைப்பாட்டின்கண் தலைவன் புணர்ச்சியின் மகிழ்ந்தது (தொல். களவு. 11, ந.).
ஒப்புமைப் பகுதி 2. தலைவியின் மேனி நறுமை: குறுந். 62: 1-4, ஒப்பு. நறுந்தண்ணீரள்: குறுந். 84: 4-5, 168:4, ஐங். 97:4. 4.சில கிளவி: குறுந். 14:2, ஒப்பு; அகநா. 343:18, சீவக. 2027.
5. மெல்லியள்: குறுந். 137:1. அணைபோன்ற மென்மை: "அணைமென்றோள்" (கலி. 1:9, 30:9, 66:9, 91:6, 124:12); "அணைமரு ளின்றுயி லம்பணைத் தடமென்றோள்", "அணையென,.... அமைந்தநின் றடமென்றோள்", "அணைத்தோளாய்", (கலி. 14:1, 56:19-20, 87:9); "அணைபுரை மென்மை யமைபடு பணைத்தோள்" (பெருங். 2.15:72); "செம்பஞ்சி யணையனைய வாடமைத்தோள்" (சீவக. 170).