(பாங்கியின் வாயிலாகத் தலைவியோடு அளவளாவப்பெற்ற தலைவன் பிரியும் காலத்தில் அவனை நோக்கி, “நின்னுடைய குறையை நான் முடித்து வைத்தேன்; தலைவி நின்னோடு ஒன்றினள்; இனி நீ அதோ தெரியும் எம் ஊர்க்கண்ணும் வந்து பழகுவாயாக” என்று தோழி கூறியது.)
 81.    
இவளே, நின்சொற் கொண்ட வென்சொற்றேறிப்  
    
பசுநனை ஞாழற் பல்சினை யொருசிறைப் 
    
புதுநல னிழந்த புலம்புமா ருடையள் 
    
உதுக்காண் டெய்ய வுள்ளல் வேண்டும் 
5
நிலவு மிருளும் போலப் புலவுத்திரைக் 
    
கடலுங் கானலுந் தோன்றும் 
    
மடறாழ் பெண்ணையெஞ் சிறுநல் லூரே. 

என்பது தோழியிற் கூட்டங் கூடிப் பிரியும் தலைமகற்குத் தோழி சொல்லியது.

வடமவண்ணக்கன் பேரிசாத்தன் (பி-ம். வடமவண்ணக்கர், வடமவண்ணக்கன்).

    (பி-ம்) 2. ‘பல்கிளை’ 3. ‘னிழந்து’ 5. ‘புலவுதிரைக்’ 7. ‘மடல்சழ்’, ‘பெண்ணையஞ்’.

    (ப-ரை.) வெற்ப, இவள் - இத்தலைவியானவள், நின் சொல் கொண்ட என் சொல் - குறையுறும் நின்சொற்களை ஏற்றுக்கொண்டு தன்னிடத்துக் கூறிய என் சொற்களை, தேறி - தெளிந்து, பசு நனை ஞாழல் பல் சினை ஒரு சிறை - பசிய அரும்புகளையுடைய ஞாழல் மரத்தினது பல கிளைகள் அடர்ந்த ஒரு பக்கத்து, புது நலன் இழந்த - இதுகாறும் புதியதாக இருந்த தன் பெண்மை நலத்தை இழந்தனாலுண்டான, புலம்பு உடையள் - தனிமையையுடையள்; நிலவும் இருளும் போல - நிலவையும் அதனோடு நின்ற இருளையும் போல, புலவுதிரை கடலும் கானலும் 3தோன்றும் - புலால் நாற்றம் வீசும் அலைகளையுடைய கடலும் அதன் கரையிலுள்ள சோலையும் கண்ணுக்குத் தோன்றுகின்ற, மடல் தாழ் பெண்ணை - மடல்கள் தாழ்ந்த பனைமரங்களை யுடைய, எம் சிறு நல் ஊர் - எமது சிறிய நல்ல ஊர், உது காண் - அதோ பார்; உள்ளல் வேண்டும் - இனி எம்மை மறவாது நினைக்க வேண்டும்.

     (முடிபு) இவள் நலன் இழந்த புலம்புடையாள்; எம் சிறு நல்லூர் உதுக்காண்; உள்ளல் வேண்டும்.

     (கருத்து) இனி எம்மை மறவாது எம்மூருக்கு வந்து பழக வேண்டும்.

     (வி-ரை.) (வி-ரை.) இவளே; ஏகாரம் அசைநிலை. நின்சொற் கொண்ட என்சொல் லென்றது, தோழி தலைவனது குறையையேற்றுத் தலைவி நயக்கச் செய்த சொற்களை. பசு நனை - இள அரும்பு. ஞாழல் - நெய்தற் குரியதொரு மரம். தோழியிற் கூட்டம் கூடிய தலைவன் தலைவியோடு கடற்கரையிலுள்ள ஞாழன்மரத்தின் நிழலில் அளவளாவினா னாதலின், ‘ஞாழற் பல்சினை யொருசிறைப், புதுநலனிழந்த புலம்புடையள்’ என்றாள். புலம்பு - நலனிழந்தமையால் உண்டான தனிமை. மார்: அசைநிலை இடைச்சொல்; ஐந். 152:5. உதுக்காண்: சுட்டின்முன் வல்லெழுத்து இயல்பாகாது மிக்கதை நச்சினார்க்கினியர்,

  
“சுட்டுமுத லிறுதி யுருபிய னிலையும் 
  
 ஒற்றிடை மிகாஅ வல்லெழுத் தியற்கை”    (தொல். உயிர்மயங்கு. 61)  

என்னும் சூத்திரத்திலுள்ள ‘வல்லெழுத்தியற்கை’ என்ற விதப்பினாற் கொண்டார். தெய்ய: அசை நிலை (தொல். இடை. 48, இளம்.); “சொல்லேன் றெய்ய நின்னொடும் பெயர்த்தே”; இது தெய்யோ வெனவும் வரும். உள்ளல் வேண்டுமென்பது நினைந்து வரவேண்டு மென்னும் குறிப்பினது; அதன் பொருட்டே தம் ஊரைக் காட்டினாள்; இது தோழி களஞ்சுட்டிக் கூறியது; இதற்கு விதி, “தோழியின் முடியு மிடனுமாருண்டே” (தொல். களவு. 30) என்பது.

     அலையின் பிறழ்ச்சியால் வெண்மையாகத் தோற்றும் கடலுக்கு நிலவும், அடர்த்தியால் இருண்டு தோன்றும் கானலுக்கு இருளும் உவமை; நிரனிறை. எதிர் நிரனிறையாகக் கொண்டு கருநீர்க் கடலுக்கு இருளையும், பரந்த கடற்கரை மணற்பரப்புக்கு நிலவையும் (குறுந். 123:2) உவமை கொள்ளுதலும் ஆம். நெய்தனிலத்ததாதலின் ஊர் பனை மரங்களையுடைய தாயிற்று. நெடுந்தூரத்தில் வரும்போது தோன்றும் அடையாளங்களாகிய கடலையும் கானலையும் முன்பும், அணுகிய பின்னர்த் தோன்றுவதாகிய பெண்ணையைப் பின்பும் கூறினாள். சிறியதாயினும் சிறப்புடையதாதலின் சிறுநல்லூரென்றாள்; நீ வருவதற்குரியதென்னும் குறிப்பினது. ஊரே: ஏகாரம், அசை நிலை.

    “தலைவி தானாக விரும்பி இதனைச் செய்திலள்; நான் கூறினமையின் இது செய்தாள். நானும் நீ குறைவேண்டி இரந்தமையின் அவளை நயக்கச் செய்தேன். ஆதலின் அவள் நலனிழந்தமைக்கு நின் முயற்சியே காரணமாவது. இனி நீ அவள் துயருறாவாறு அவ்வூரினிடத்தும் வந்து அளவளாவுக” என்று தோழி கூறினாள்.

    (மேற்கோளாட்சி) மு. இவ்வொழுக்கம் புறத்தார்க்குப் புலனாகுமென்று அறிவுறுத்தவழிப் பின்னும் புணர்ச்சி வேண்டிய தலைவற்குத் தோழி இடமுணர்த்தியது (தொல். களவு. 24, இளம்.); பாங்கியிற் கூட்டத்தின் பின் முற்காலத்துப் பணிந்து பின்னின்றோனைத் தோழி தானே பணிந் தொழுகுமிடத்து அவளுக்குக் கூற்று நிகழ்ந்தது (தொல். களவு. 23, ந.); தோழிக்குத் தலைவி தனது வேட்கையை எதிர்நின்று கூறியது (தொல். களவு, 27, ந.)

    ஒப்புமைப் பகுதி 1. ஞாழல்: குறுந். 183:5, 296:2.

    3. தலைவி புதுநலம் இழத்தல்: “பூவி னன்ன நலம்புதிதுண்டு” (நற். 15:4); “பொன்மாலை மார்பனென் புதுநலமுண் டிகழ்வானோ” (தே. திருநா. திருப்பழனம்). மார்: ஐங். 44:4. 2-3. கடற்கரையில் தலைவனும் தலைவியும் அளவளாவுதல்: (குறுந். 97:1-2); “கடிமலர்ப் புன்னைக்கீழ்க் காரிகை தோற்றாளை” “ஆய்மலர்ப் புன்னைக் கீழணி நலந் தோற்றாளை”, “திகழ் மலர்ப் புன்னைக் கீழ்த் திருநலந்தோற்றாளை (கலி. 135: 6, 9, 12.)

    4. உதுக்காண்: குறுந். 191:1, 358:4. தொல். உயிர். 61, ந. ஐங். 101:1. தெய்ய: அசை; ஐங்.64:5.

    5-6. கானற் சோலைக்கு இருள்: “இருடிணிந் தன்ன வீர்ந்தண் கொழுநிழல்” (குறுந். 123:1); “பொழிலே, இரவோ ரன்ன விருளிற் றாகியும்” (யா.வி. 69, மேற்.) கடலுக்கும் கானலுக்கும் நிலவும் இருளும்: “நிலவு மிருளும் போல நெடுங்கடற், கழியுங் கானலு மணந்தன்று” (தொல். களவு. 23, ந. மேற்.) நிலவும் இருளும்: குறுந். 123: 1-2; திணைமா. 29.

    7. சிறுநல்லூர்: குறுந். 55:5; அகநா. 394:16. 4 - 7. உதுக்காண்.... சிறுநல்லூரே: “ஈகாண் டோன்றுமெஞ் சிறுநல்லூரே” (நற். 264:9); “உவக்காண் டோன்றுமெஞ் சிறுநல் லூரே” (அகநா. 350:15.)

    மடல்தாழ் பெண்ணை: ஐங்.114.

(81)