(வரைவுக்குரிய முயற்சிகளோடு வந்த தலைவனைச் செவிலி ஏற்றுக் கொண்டமையைத் தோழி அச்செவிலியை வாழ்த்தும் வாயிலாகத் தலைவிக்கு உணர்த்தியது.)
 83.    
அரும்பெற லமிழ்த மார்பத மாகப்  
    
பெரும்பெய ருலகம் பெறீஇயரோ வன்னை  
    
தம்மிற் றமதுண் டன்ன சினைதொறும்  
    
தீம்பழந் தூங்கும் பலவின்  
5
ஓங்குமலை நாடனை வருமென் றோளே. 

என்பது தலைமகன் வரைந்தெய்துதல் உணர்த்திச் (பி-ம். உணர்த்திய) செவிலியைத் தோழி வாழ்த்தியது.

வெண்பூதன் (பி-ம். வெண்பூகன்)

    (பி-ம்) 1. ‘லமிர்தம்’ 3. ‘கிளை’.

    (ப-ரை.) தம் இல் - தமது வீட்டின்கண் இருந்து, தமது உண்டன்ன - தமது முயற்சியால் ஈட்டிய பொருளில் தம் கூற்றை உண்டாற் போன்ற இன்சுவையைத் தருவனவாகி, சினை தொறும் - கொம்பு தோறும், தீ பழம் - இனிய பழங்கள், தூங்கும் பலவின் - தொங்குகின்ற பலாமரங்களையுடைய, ஓங்கு மலைநாடனை - உயர்ந்த மலைகளுள்ள நாட்டுக்குத் தலைவனை, வரும் என்றோள் - வரைதற்குரிய பொருளோடு வருவானென்று கூறியவளாகிய, அன்னை---, அருபெறல் அமிழ்தம் ஆர்பதம் ஆக - பெறுதற்கரிய அமிழ்தமே உண்ணும் உணவாக, பெருபெயர் உலகம் - பெரும்புகழுடைய சுவர்க்கத்தை, பெறீஇயர் - பெறுவாளாக.

     (முடிபு) நாடனை வருமென்றோளாகிய அன்னை, பெரும் பெயருலகம் பெறீஇயர்.

     (கருத்து) தலைவர் வருவாரென்று உணர்த்திய செவிலி வாழ்வாளாக.

     (வி-ரை.) பெரும்புண்ணியம் செய்தார்க்கே அமுதவுணவு பெறற் குரியதாகலின் ‘அரும்பெற லமிழ்தம்’ என்றாள். ஆர்பதம் - உணவு. பெரும்பெயர் உலகம் - பெரிய புகழையுடைய உலகம்; என்றது சுவர்க் கத்தை; பெயர் - பொருளுமாம். தமது என்றது தம் முயற்சியால் ஈட்டிய பொருளில் தமக்கென ஆன்றோரால் வரையறுத்த ஆறிலொரு கூற்றை. உண்டன்ன தீம்பழமென்று கூட்டுக. “தம்மி லிருந்து தமதுபாத் துண்டற்றால், அம்மா வரிவை முயக்கு” (குறள், 1107) என்றவிடத்து இன்பத்துக்குத் தமதுண்ட இன்பத்தை உவமை கூறுதல் காண்க.

    வருமென்றோள் - வருவாளென்று கூறினாள்; அங்ஙனம் கூறியது தம்மில் தமதுண்டன்னதென்று உரைத்தலும் ஆம்: அன்ன: அன்ன தென்பதன் விகாரம்.

    இதனால் தோழி தலைவிக்கு, “தலைவன் வரைதற்குரிய முயற்சிகளைச் செய்வானாயினான்; அவற்றிற்கு அன்னை முதலியோர் உடம்பட்டனர்” என்று உணர்த்தினாள்.

    ஓ,ஏ : அசைநிலைகள்.

    ஒப்புமைப் பகுதி 1. நீரையேற்ற பசுங்கலம்: நலஞ்செய்தவர்கள் அமிழ்தம் பெறுகவென்று வாழ்த்தல்: குறுந். 201:1, ஆர்பதம்: குறுந். 389:2; நற்.102:2; பதிற். 55:11, 66:9. 2.பெயர் - பொருள்: பதிற்.21:1, 90:23; முருகு.269, ந; பெருங்.1. 35:113; 3. 10:18, 1-2. சுவர்க்கம் பெறும்படி வாழ்த்துதல்: குறுந். 361:1-2.

    5. குறுந். 201:7. 4-5. சினைதொறுந் தீம்பழம் தூங்கும் பலவு: (குறுந். 257: 1-3): “கீழு மேலுங் கார்வாய்த் தெதிரிச், சுரஞ்செல் கோடியர் முழவிற் றூங்கி, முரஞ்சுகொண் டிறைஞ்சின வலங்குசினைப் பலவே” (மலைபடு. 142-4)

    மு. ஒருவாறு ஒப்பு : குறுந். 361.

(83)