மோசிகீரன். (ப-ரை.) (ப-ரை.) கழல் தொடி ஆய் - உழல இட்ட தோள் வளையையுடைய ஆயென்னும் வள்ளலது, மழை தவழ் பொதியில் - மேகங்கள் தவழும் பொதியின் மலையில் உண்டான, வேங்கையும் காந்தளும் நாறி - வேங்கை மலரினது மணத்தையும் காந்தள் மலரினது மணத்தையும் வீசி, ஆம்பல் மலரினும் - ஆம்பல் மலரைக் காட்டிலும், தண்ணியள் - குளிர்ச்சியையுடையளாகிய என்மகள், பெயர்த்தனென் முயங்க - யான் ஒருமுறை தழுவிய தோடமையாமல் மீட்டும் தழுவும் காலத்து, யான் வியர்த்தனென் என்றனள் - நான் வியர்வையையடைந்தேன் என்று கூறினாள்; அது துனி ஆகுதல் - அங்ஙனம் யான் தழுவியது அவளுக்கு வெறுப்புண்டாக்குதற்குக் காரணமாதலை, இனி அறிந்தேன் - அவள் கூறிய அக்காலத்தே அறிந்திலேனாயினும் இப்பொழுது அறிந்தேன்.
(முடிபு) தண்ணியள், யான் முயங்க வியர்த்தனென் என்றனள்; அது துனியாகுதலை இனி அறிந்தேன்.
(கருத்து) தலைவி எம்பால் வெறுப்புற்று ஒரு தலைவன்பால் விருப்புற்றுச் சென்றனள்; இதனை முன்னரே அறிந்திலன்.
(வி-ரை.) பெயர்த்தனென் என்றமையால் முன் ஒருமுறை தழுவினாளென்றது பெறப்பட்டது. அங்ஙனம் தழுவிய பழக்கத்தால் செவிலி மீட்டும் தழுவினாள். தலைவியை அருகில் துயிலச் செய்தல் செவிலியர் வழக்கம். வியர்த்தனெனென்றது, வியர்த்தனெனாதலின் நீ முயங்கற்கவென்ற குறிப்பினது.
செவிலி அறிந்தது, “ஒரு தலைவனது முயக்கத்தையே இன்பமாகக் கருதியவளாதலின் பிறர் முயக்கம் வெறுப்புறச் செய்தது” என்பதனை. “முன்பு விருப்பாயிருந்த என் முயக்கம் இப்பொழுது அவளுக்கு வெறுப்பாயிற்று” என்பது குறிப்பு;
| “குறுக வந்து குவவுநுத னீவி |
| மெல்லெனத் தழீஇயினே னாக வென்மகள் |
| நன்ன ராகத் திடைமுலை வியர்ப்பப் |
| பல்கான் முயங்கினண் மன்னே” (அகநா. 49:6-9) |
என்பதில் இக்கருத்து விரிவுற அமைந்திருத்தல் காண்க.
இனி - இப்பொழுது (கலி. 1:4, ந.) இனி யறிந்தேனென் றமையின் அப்பொழுது அறிந்திலேனென்பதும், அறிந்திருப்பின் அவள் நெஞ்சு விரும்பியது ஆற்றியிருப்பேனென்பதும் போந்தன. ஆகுதலே : ஏகாரம் அசைநிலை. கழல் தொடி : இந்நூல் முதற் செய்யுளின் மூன்றாமடியையும் அதன் உரை முதலியவற்றையும் பார்க்க.
ஆய்: ஏழுவள்ளல்களுள் ஒருவன். இவனுக்குரியது பொதியின் மலை. மழைதவழ் பொதியிலென்றது, காந்தளும் வேங்கையும் வளம் பெற வளர்தற்குரிய மழையுண்டென்பதைக் குறித்தது. தான் வாழும் குறிஞ்சிநிலத்திற்குரிய வேங்கையின் மணத்தையும் காந்தளின் மணத்தை யும் அறிந்தவளாதலின், தலைவியின் மேனி மணத்துக்கு அவற்றை உவமை கூறினாள். தலைவியின் மேனி இயற்கை மணம் உடையதென்றபடி, ஆம்பல்மலர் நீர்ப்பூவாதலின் தண்மைக்கு உவமையாயிற்று; “பொய்கைப் பூவினு நறுந்தண் ணியளே” (ஐங். 97:4). தான் நாள்தோறும் முயங்கித் துயின்ற பழக்கத்தினால் தலைவி மேனியின் நறுமையையுந் தண்மையையும் கூறினாள்.
தான் : அசை நிலை. தண்ணியளே : ஏகாரம் இரக்கக் குறிப்பு; இத்தகைய தண்மை உடையவள் வெப்பமிக்க பாலையிற் செல்ல நேர்ந்ததே என்னும் நினைவிற்று.
(மேற்கோளாட்சி) 1. செய்கென்கிளவி அவ்வியல் திரியாது எனவே... ... ஏனை முற்றுச்சொல் வினை கொள்ளுங்கால் அவ்வியல் திரியும். (தொல். வினை. 7, சே.)
‘பெயர்த்தனென் முயங்க’ என்னுந் தொடக்கத்தன இறந்த கால முணர்த்தலிற் செய்தென் எச்சமாதற் கேற்புடைமையான் அவற்றைத் திரிபென்றார், வினையெச்சத் தன்மைத் தெரிநிலைமுற்று (தொல். எச்ச. 61, ந.); தன்மை வினைமுற்று வினை எச்சமாயிற்று (நன். 350, மயிலை, 351, சங். இ.வி. 237, 250)
4-5. ஆசை வெள்ளம்: குறிப்பு வினைமுற்று, சிறுபான்மை ஆக்கமின்றி வந்தது (தொல். எச்ச. 36, சே., ந.; நன். 346, மயிலை; இ.வி.249).
மு. பிற்றை ஞான்று தலைமகளது போக்குணர்ந்து செவிலி மயங்கிப் பெரியதோர் கவலையளாய் நெருநலை இவை செய்தது இது கருதிப் போலும் என்று கூறியது (இறை. 23); உடன்போக்கிய செவிலி கவன் றுரைத்தது (தொல். அகத். 39, இளம்.); உடன்போக்கிற்கு மகள் நெஞ்சு துணிந்த காலத்துத் தன்மேல் அன்பு நீங்கியதுணர்ந்து செவிலி கூறியது (தொல். களவு. 24, ந.); செவிலி கூற்று (தொல். செய். 190, பேர்; இ.வி. 562.)
ஒப்புமைப் பகுதி 2. இனி: குறுந். 11:4, 153:3, 205:5; குறள். 1083; கலி. கட. 4; தஞ்சை. 20. மு. கலி. 14;9. செவிலி முயக்கம் தலைவிக்கு வெறுப்பைத் தருதல்; குறுந். 353:6-7.
3. கழறொடி:குறுந். 1:3, ஒப்பு. கழறொடியாய்: புறநா. 374:16. மு. புறநா. 128:5.
4. வேங்கை மணம் நாறுதல்: குறுந். 355:6, ஒப்பு. 3-4. பொதியில் வேங்கை: “வகையமை தண்டாரான் கோடுயர் பொருப்பின்மேற், றகையிண ரிளவேங்கை மலர்” (கலி. 57: 16-7). (பொருப்பு - பொதியின் மலை). 4-5. தலைவியின் மேனி மலர்களின் மணம் உடைமை: குறுந். 62:1-4, ஒப்பு. தலைவிமேனியின் நறுமையும் தண்மையும்: குறுந். 70:2, ஒப்பு
(84)