(“தலைவன் இரவுக்குறியை விரும்புகின்றான்: இனி இரவிலே வருவான்” என்று தோழி தலைவிக்குக் கூறியது.)
 88.    
ஒலிவெள் ளருவி யோங்குமலை நாடன்  
    
சிறுகட் பெருங்களிறு வயப்புலி தாக்கித் 
    
தொன்முரண் சோருந் துன்னருஞ் சாரல் 
    
நடுநாள் வருதலும் வரூஉம் 
5
வடுநா ணலமே தோழி நாமே. 

என்பது இரவுக்குறி நேர்ந்த வாய்ப்பாட்டால் தோழி தலைமகட்குச் சொல்லியது

மதுரைக் கதக்கண்ணன்.

    (பி-ம்) 3. ‘கொல்லுந்’, ‘சொல்லுந்’, ‘துன்னருஞ் சோலை’.

    (ப-ரை.) தோழி-----, ஒலி வெள் அருவி - ஒலிக்கும் வெள்ளிய அருவியையுடைய, ஓங்கு மலைநாடன் - உயர்ந்த மலைகளுள்ள நாட்டையுடைய தலைவன், சிறு கண் பெருகளிறு - சிறிய கண்ணையுடைய பெரிய களிறு, வய புலி தாக்கி - வலியையுடைய புலியை எதிர்த்துப் பொருது, தொல் முரண் சோரும் - தனது பழைய வலி சோர்தற்கிடமாகிய, துன் அரு சாரல் -மக்கள் அடைதற்கரிய சாரலின் வழியே, நடுநாள் வருதலும் வரூஉம் - இடையிரவில் வருதலையும் செய்வான்; நாம் வடு நாணலம் - அங்ஙனம் அவன் வருதலி னால் நமக்கு உண்டாகும் பழிக்கு நாம் நாணேம்.

    (முடிபு) தோழி, மலைநாடன் வருதலும் வரூஉம்; நாம் வடு நாணலம்.

    (கருத்து) தலைவர் இனி இரவில் வந்து அளவளாவுவர்.

     (வி-ரை.) களிறும் புலியும் எதிர்த்துப் போர்செய்யும் சாரலாதலின் துன்னுதற்கு அரியதாயிற்று. வயப்புலி - சிங்கமுமாம்; ஈங்காய். 4. நடுநாள் - இடையாமம். வருதலும் வரூஉம்:

    “நல்கினு நல்குவர்” (குறுந். 37:1) என்பதன் விசேடவுரையைப் பார்க்க. ‘நடுநாள் வருதலும் வரூஉம்’ என்பது இரவுக்குறி நேர்ந்ததைப் புலப்படுத்தியவாறு.

     வடுவென்றது தலைவன் வருதலைப் பிறர் குறிப்பால் அறிந்து பழிகூறுதலை; வடு - குற்றம்; பரி.2:24.

     வழியின் ஏதத்துக்கு அஞ்சாமல் அவனே வரும்பொழுது அவனை ஏற்றுக்கொள்ளாமல் வடுவை நாணி மறுத்தல் அழகன்றென்பது தோழியின் நினைவு.

    அருவியானது ஓங்கிய மலையிலிருந்து கீழிழிந்து நிலப்பரப்பி லுள்ளாருக்குப் பயன்படுவது போலத் தலைவன் நெடுந்தூரம் கடந்து வந்து நமக்குப் பயன்படுவானென்பது குறிப்பு.

    (மேற்கோளாட்சி) மு. பகற்குறி நேர்ந்த இடத்துத் தோழி தலைவிக்குக் கூறியது (தொல். களவு. 24, இளம்.); இரவுக்குறி மறுத்தது (தமிழ்நெறி. 18); பாங்கி தலைமகட்குத் தலைமகன் குறையறிவுறுத்தல் (நம்பி. 158.)

     (கு-பு.) இரவுக்குறி மறுத்தலென்னும் கருத்துச் சிறப்புடையது.

    3. (பி-ம்.) சொல்லும் - நீக்கும்; அகநா. 8:10; சீவக.1146.

    ஒப்புமைப் பகுதி 2-3. களிறு புலியைத் தாக்குதல்: குறுந். 141:4-5, 343:1-3; மலைபடு. 307-9; நற். 36:1-3, 39:4-7, 104:1-2, 151:2-3, 202: 1-4, 217:2-5, 247:1-2, 353:9-10; கலி. 38:6-7, 42:1-2, 48:1-7 49:1-2, 52:1-4, அகநா. 332:2-9.

    4. தலைவன் நள்ளிருளில் வருதல்: குறுந், 268:5. வருதலும் வரூஉம்: குறுந். 37:1, ஒப்பு.

(88)