தாமோதரன். (பி-ம்) 3. ‘மரத்த’, ‘மாத்த’, ‘மராத்த’; 5.’இரை கொண்டவையும்’
(ப-ரை.) ஞாயிறு பட்ட - கதிரவன் மறைந்த, அகல் வாய் வானத்து - அகன்ற இடம் பொருந்திய ஆகாயத்தில், கொடு சிறை பறவை - வளைந்த சிறகுகளையுடைய பறவைகள், இறை உற ஓங்கிய - தாம் தங்கும்படி உயர்ந்த, நெறி அயல் மரா அத்த - வழியின் அயலில் வளர்ந்த கடம்பின்கண் உள்ள கூட்டிலிருக்கும், பிள்ளை - குஞ்சுகளின், உள் வாய் செரீஇய - வாயினுள்ளே செருகும் பொருட்டு, இரை கொண்டமையின் - இரையைத் தம் அலகில் எடுத்துக் கொண்டமையால், செலவு விரையும் - விரைந்து செல்லும்; அளிய - அவை இரங்கத்தக்கன.
(முடிபு) பறவை செலவு விரையும்; அளிய.
(கருத்து) மாலைக்காலம் வந்தது; இனிக் காமநோயை ஆற்றேன்.
(வி-ரை.) படுதல் - மறைதல்; “படுசுட ரமையம்” (அகநா, 48:23) என்பது காண்க.
மாலைக்காலத்திற் பறவைகள் தம் கூட்டிற்கு வந்து அடங்கும்; “குரீஇ... இல்லிறைப் பள்ளித்தம் பிள்ளையொடு வதியும், புன்கண் மாலை” (குறுந்.46), “விலங்கும் பறவையும் வீழ்துணைப்படர” (பெருங். 1. மாலைப் புலம்பல், 43.) இறையுறல் - தங்குதல் “புன்னைத் தடவுநிலை மாச்சினைப், புள்ளிறை கூரும்” (அகநா. 10:3-4) என்பதையும், ‘இறை கூரும் - தங்குதல் மிகும்’ என்னும் அதன் உரைக்குறிப்பையும் பார்க்க. “பார்ப்பும் பிள்ளையும் பறப்பவற் றிளமை” (தொல். மரபு. 4) என்பது விதியாகலின், பறவைக் குஞ்சைப் பிள்ளை யென்றாள். செரீஇய- செருகும் பொருட்டு; செருகி யென்பது செரீஇயென்று வந்தது (குறுந். 295:1); இங்ஙனமே பருகியென்பது பரீஇயென (நாலடி.220) வருதல் காண்க.
தாம், ஆல், ஏ: அசைநிலைகள்.
இதனால் தலைவி மாலைப்பொழுது வந்ததையறிந்து காமநோய் மிகப்பெற்று ஆற்றாளாயினளென்பது பெறப்படும்.
(மேற்கோளாட்சி) மு. இரங்கல், நிமித்தமென்னும் உரிப்பொருள் வந்தது (தொல். அகத். 14, ந.); தலைவிக்கு காமம் சிறந்து தோன்றினமையின் கூற்று நிகழ்ந்தது (தொல். களவு. 20, ந.)
ஒப்புமைப் பகுதி 1. அகல்வாய் வானம்: குறுந். 44:3, ஒப்பு.
2. கொடுஞ்சிறைப் பறவை: “கொடுமென் சிறைய கூருகிர்ப் பறவை” (குறுந். 352:2)
3. நெறியயன் மராம்: அகநா. 121:8.
4. பிள்ளை: குறுந்.46:5, 139:4.
2-4. பறவை இரையைப் பிள்ளையின் வாயிற் செருகுதல்: “இரைதேருந் தடந்தா ணாரை, ஐய சிறுகட் செங்கடைச் சிறுமீன், மேக்குயர் சினையின் மீமிசைக் குடம்பைத், தாய்ப்பயிர் பிள்ளை வாய்ப்படச் சொரியும்” (நற். 91:4-7); “கழனி யாரல் கவுளகத் தடக்கிப், பழன மருதிற் பார்ப்புவாய்ச் சொரிந்து, கருங்கா னாரை நரன்றுவந் திறுப்ப”, “பல்சிறைப் புறவம் பரிந்துட னாடி, அவ்வாய்க் கொண்ட வாரிரை யமிழ்தம், செவ்வாய்ப் பார்ப்பிற்குச் சேர்ந்தவண் சொரிதலின்” (பெருங். 3.7:29-31. 5. 1:68-70)
(92)