அள்ளூர் நன்முல்லை. (ப-ரை.) நல் நுதல் - நல்ல நெற்றியை உடையாய், அருவி வேங்கை - அருவியினதருகில் வளர்ந்த வேங்கை மரங்களையுடைய, பெரு மலை நாடற்கு - பெரிய மலையையுடைய நாட்டுக்குரிய தலைவன் திறத்து, யான் எவன் செய்கு - நான் என்ன செய்வேன், என்றி - என்று கூறி அவனை இயற்பழித்தாய்; யான் அது நகை என உணரேன் ஆயின் - நீ அங்ஙனம் கூறியதை நான் விளையாட்டு மொழி யென்று உட்கொண்டிரேனாயின், நீ என் ஆகுவை - நீ என்ன பாடு படுவாய்? மிகவும் துன்புறுவாயன்றே.
(முடிபு) நன்னுதல், நாடற்கு யான் எவன் செய்கோ என்றி; யான் அது நகையென உணரேனாயின், நீ என்னாகுவை?
(கருத்து) நீ தலைவனை இயற்பழித்தல் தகாது.
(வி-ரை.) தலைவன் விரைவில் வரையாமல் ஒழுகினானாக அவன் வரைதல் வேண்டிய தோழி, “தலைவன் நம் நிலையை அறியானாயினன்; அவன் திறத்து என்செய்வேன்!” என்று இயற்பழித்தாளாக, “அவரை நீ அறியாது பழித்தாய். நீ கூறியதை நகைப்பொருட்டுச் சொல்லியதாக உட்கொண்டேன்: இல்லையெனின் உன்னைத் தண்டம் செய்வேன்; அப்பொழுது நீ எந்நிலையி னையாவாய்!” என்று தலைவி கூறினாள்.
அருவி - அருவீ என்பதன் விகாரமெனலும் ஒன்று; “அருவியாம்பல்” (பதிற். 63:19) என்பதன் உரையைப் பார்க்க. யானெவன் செய்கோ வென்னுந் தொடர் வினாவுதல் கருதாது வெறுப்புக் குறிப்புடையது (ஐங். 154:4, உரை)
அருவி வேங்கைப் பெருமலை நாடனென்றது, அருவியானது தன்னைச் சார்ந்த வேங்கையைக் குறைவின்றிப் பாதுகாத்தலைப் போலத் தலைவனும் தன்னைச் சார்ந்த என்னைப் பாதுகாப்பானென்னும் குறிப்பை உணர்த்தியது; இக்குறிப்பினாலே தலைவி இயற்படச் சொன்னாளாயிற்று.
ஓ, கொல், ஏ: அசைநிலைகள்.
(மேற்கோளாட்சி) மு. தலைவன் வரைதலை விரும்பி இயற்பழித்த தோழிக்குத் தலைவி இயற்பட மொழிந்தது (தொல். களவு. 16, ந.)
ஒப்புமைப் பகுதி 1. அருவி வேங்கை: குறுந். 134: 3-5); “அதிரிசையருவிதன் னஞ்சினை மிசைவீழ, முதிரிணர் வீழ்கொண்ட முழவுத்தா ளெரி வேங்கை” (கலி. 44: 3-4); “கறங்குவெள்ளருவி பிறங்குமலைக் கவாஅற், றேங்கம ழிணர வேங்கை” (அகநா. 118: 1-5.)
2. யானெவன் செய்கோ: குறுந். 25:2 ஐங். 154:4.
(96)