(தலைவன் தான் கூறிச்சென்ற பருவத்தே வாராமையால் வருந்திய தலைவி, “யான் பசலையுற்ற நிலையையும் பருவம் வந்தமையையும் யாரேனும் தலைவரிடம் சென்று அறிவுறுத்தினால் நலமாகும்” என்று தோழிக்குக் கூறியது)
 98.   
இன்ன ளாயின ணன்னுத லென்றவர்த் 
    
துன்னச் சென்று செப்புநர்ப் பெறினே  
    
நன்றுமன் வாழி தோழிநம் படப்பை  
    
நீர்வார் பைம்புதற் கலித்த  
5
மாரிப் பீரத் தலர்சில கொண்டே.  

என்பது பருவங்கண்டு அழிந்த தலைமகள் தோழிக்கு உரைத்தது.

கோக்குளமுற்றன்.

    (பி-ம்.) 2. ‘துன்னர்ச் சென்று’, ‘துன்னாச் சென்று’

    (ப-ரை.) தோழி-----, நம் படப்பை - நம் தோட்டத்திலுள்ள, நீர் வார் பைம்புதல் கலித்த - நீர் ஒழுகுகின்ற பசிய புதலினிடத்தே தழைத்துப் படர்ந்த, மாரி பீரத்து அலர் சில - மழைக்காலத்தில் மலரும் பீர்க்கின் மலர்கள் சிலவற்றை, கொண்டு - கைக்கொண்டு, அவர் துன்ன சென்று -தலைவரை நெருங்கச் சென்று, நல் நுதல் இன்னள் ஆயினள் - நல்ல நெற்றியையுடைய தலைவி இவ்வலரைப் போன்ற பசலையை அடைந்தாள், என்று செப்புநர் பெறின் - என்று அவர்பாற் சொல்லுவாரைப் பெற்றால், நன்று மன் - மிக்க உதவியாக இருக்கும்.

    (முடிபு) தோழி-----, பீரத்தலர் சில கொண்டு அவர்த் துன்னச் சென்று இன்னளாயினளென்று செப்புநர்ப்பெறின் நன்றுமன்.

    (கருத்து) நான் பசலை நோயட நிற்றலைத் தலைவர் அறிந்திலர்; அறியின் வரைவர்போலும்!

    (வி-ரை.) நன்னுதலென்றது நீ கண்ட பொழுது நன்னுதலாயிருந்தாள், இப்போது பசலையுற்றாளென்னும் கருத்துடையது. நன்னுதல் இன்னளாயின ளென்றமையின் அந்நுதல் பசலையுற்ற தென்றுணர்க: இந்நூல் 87:4-ஆம் அடியின் ஒப்புமைப் பகுதியைப் பார்க்க. அவர்: நெஞ்சறிசுட்டு. பிறரறியத் தகாத மறையாதலின் அவரை அணுகச்சென்று கூறவேண்டு மென்றாள். செப்புநர்ப்பெறினென்றது செப்புவாரைப் பெறுதல் அரிய தாயிற்றென்றவாறு. மன்: மிகுதியை உணர்த்தியது; அது பெற்றிலே னெனலுமாம். வாழி: அசைநிலை; அங்ஙனம் செப்புவார் உளரேல் அவர் வாழ்வாராக எனலும் பொருந்தும். படப்பை - தோட்டம்: இங்கே மனைக் கருகிலுள்ள தோட்டம்: “படப்பை வேங்கை” (குறுந். 266:3) எனப் பின்னும் வருதல் காண்க.

    மாரிக்காலமாதலின் நீர்வார் பைம்புதலாயிற்று. புதல் - செடிகள் அடர்ந்து வளர்ந்த செறிவு; இஃது இப்பொழுது புதரென வழங்கும். பீர்க்கு, கொடியாதலின் புதலிற்படர்ந்து தழைத்தது. மழைக்காலத்திலுள்ள நீர்நலத்தாற் புதலும் தழைத்துப் பசுமை பெற்றது; பீர்க்கும் தழைத்துப் பூப்பெற்றது. பீரம் - பீர்க்கு; அது மழைக்காலத்தில் மலர்வது.

    பீரத்து அலரைக் காட்டுதல் தலைவியின் பசலையையும், மழைப் பருவம் வந்தமையையும் ஒருங்கே நினைவுறுத்தற்கு; இது குறிப்பு நுட்ப மென்னும் அணி.

    தலைவன் வரைபொருட்குப் பிரிந்தானாக, அவன் கூறிச் சென்ற கார்ப்பருவம் வந்தகாலத்தில் அவன் வாராமையால் வருந்திய தலைவி “தலைவரது பிரிவினால் நான் பசலைபெற்றேன்; என் மேனி அழகு கழிந்தது. அவர் என் நிலையை அறியார் போலும்! யாரேனும் அவர் உள்ள இடத்திற்குச் சென்று ‘நின் பிரிவினால் தலைவி நலனிழந்து பசலையுற்றாள்; நீ கூறிய பருவமும் வந்தது’ என்று நினைவுறுத்தினால் அவர் விரைந்து வந்து வரைந்துகொள்வர்” என்று கூறினாள்.

    ஏகாரங்கள் அசைநிலைகள்.

    இதில் பசலைபாய்தல், தூதுமுனிவின்மை யென்னும் மெய்ப்பாடுகள் வந்தன.

    (மேற்கோளாட்சி) 5. பீர் என்னும் சொல் அத்துச்சாரியை பெற்று வந்தது (தொல். புள்ளிமயங்கு. 68, ந.; இ.வி. 133)

    மு. இயற்கைப் புணர்ச்சிப்பின் நிகழ்ந்தனவற்றைத் தலைவி தோழிக்கு நாணத்தால் உரையாளாயின் நோயட வருந்துவாள் (தொல்.களவு. 21, இளம்.); ‘மாரிப்பீரத்தலர் சில கொண்டே காட்டி இன்னளாயினள் நன்னுதல் என்றவழி, குறித்தபருவங் கழிந்ததென்னும் பொருண்மை விளங்கிற்று; உருவுவமம் இவ்வாறு பொருளுணர்த்துதற் பகுதிநோக்கி உவமப் பகுதியென்றா னென்பது’ (தொல். உவம.1, பேர்.); தன்னைத் தலைவன் காணா வகை நாணால் மறைந்தொழுகினும், தன் பொலிவழிவினைத் தலைவனுக்குக் காட்டல் வேண்டுதற்கண்ணும் தலைவிக்குக் கூற்று நிகழும்: ‘இன்னளாயினளென்றது, தற்காட்டுறுதல்; செப்புநர்ப்பெறினே யென்ற தனாற் களவாயிற்று, கற்பிற்கு வாயில்கள் செப்புவார் உளராதலின்’ (தொல். களவு. 20, ந.); தலைவி தன் துயர் தலைவனுக்கு உரைத்தல் வேண்டு மென்றது (இ.வி. 521.)

    ஒப்புமைப் பகுதி 1-3. தலைவி தன் வேறுபாட்டைத் தலைவனுக்கு அறிவிக்க விரும்புதல்: குறுந் 185:1-8, 310:5-7, 332,மு.நற்.3;7.

    4. நீர்வார் பைம்புதல்: குறுந். 240:1, 242:3.

    5. பீர்க்கு மழைக்காலத்தில் மலர்தல்: நற்: 227:7; புறநா.116:6; “மாரிப் பீரத்தலர்” (சிலப். 7:38)

    4-5. புதற்கலித்த பீரம்: “பொன் போற் பீரமொடு புதற்புதன் மலர” (நெடுநல்.14); “இவர் கொடிப் பீர மிரும்புதன் மலரும்” (ஐங். 464:2); “புதலிவர் பீரி னெதிர்மலர்” (அகநா. 135:2.)

    1-5.பசலைக்குப் பீர்க்கின் மலர்: நற். 197:1-2, 277:6-8, 326: 6-7.அரிது:கலி. 31:4, 53:14-5, 124:8, 143:49; அகநா.45:7-8, 57:12-3, 135:2-3; ஐந்திணை ஐம்பது, 2; திணைமாலை நூற். 100, 116; சிலப். 7:38.

    கார்ப்பருவத்தில் தலைவன் வாராமையால் தலைவி பீர்க்க மலரைப் போன்ற பசலை அடைதல்: “ வறந்த ஞாலந் தெளிர்ப்ப வீசிக், கறங்குர லெழிலி கார்செய்தன்றே, பகைவெங் காதலர் திறைதரு முயற்சி, மென்றோ ளாய்கவின் மறையப,் பொன்புனை பீரத் தலர்செய்தன்றே” (ஐங். 452)

(98)