91-100

91. நெய்தல்
நீ உணர்ந்தனையே-தோழி!-வீ உகப்
புன்னை பூத்த இன் நிழல் உயர் கரைப்
பாடு இமிழ் பனிக் கடல் துழைஇ, பெடையோடு
உடங்கு இரை தேரும் தடந் தாள் நாரை
5
ஐய சிறு கண் செங் கடைச் சிறு மீன்,
மேக்கு உயர் சினையின் மீமிசைக் குடம்பை,
தாய்ப் பயிர் பிள்ளை வாய்ப் படச் சொரியும்
கானல் அம் படப்பை ஆனா வண் மகிழ்ப்
பெரு நல் ஈகை நம் சிறு குடிப் பொலிய,
10
புள் உயிர்க் கொட்பின் வள் உயிர் மணித் தார்க்
கடு மாப் பூண்ட நெடுந் தேர்
நெடு நீர்ச் சேர்ப்பன் பகல் இவண் வரவே?

தோழி, தலைமகட்கு வரைவு மலிந்து உரைத்தது.-பிசிராந்தையார்

92. பாலை
உள்ளார்கொல்லோ-தோழி!-துணையொடு
வேனில் ஓதி பாடு நடை வழலை
வரி மரல் நுகும்பின் வாடி, அவண
வறன் பொருந்து குன்றத்து உச்சி கவாஅன்
5
வேட்டச் சீறூர் அகன் கண் கேணிப்
பய நிரைக்கு எடுத்த மணி நீர்ப் பத்தர்,
புன் தலை மடப் பிடி கன்றோடு ஆர,
வில் கடிந்து ஊட்டின பெயரும்
கொல் களிற்று ஒருத்தல் சுரன் இறந்தோரே!

பிரிவிடை வேறுபட்ட கிழத்திக்குத் தோழி சொல்லியது.

93. குறிஞ்சி
''பிரசம் தூங்க, பெரும் பழம் துணர,
வரை வெள் அருவி மாலையின் இழிதர,
கூலம் எல்லாம் புலம்புஉக, நாளும்
மல்லற்று அம்ம, இம் மலை கெழு வெற்பு!'' எனப்
5
பிரிந்தோர் இரங்கும் பெருங் கல் நாட!
செல்கம்; எழுமோ; சிறக்க, நின் ஊழி!
மருங்கு மறைத்த திருந்து இழைப் பணைத் தோள்,
நல்கூர் நுசுப்பின், மெல் இயல், குறுமகள்
பூண் தாழ் ஆகம் நாண் அட வருந்திய
10
பழங்கண் மாமையும் உடைய; தழங்கு குரல்
மயிர்க் கண் முரசினோரும் முன்
உயிர்க் குறியெதிர்ப்பை பெறல் அருங்குரைத்தே.

வரைவு கடாயது.-மலையனார்

94. நெய்தல்
நோய் அலைக் கலங்கிய மதன் அழி பொழுதில்,
காமம் செப்பல் ஆண்மகற்கு அமையும்;
யானே, பெண்மை தட்ப நுண்ணிதின் தாங்கி-
கை வல் கம்மியன் கவின் பெறக் கழாஅ
5
மண்ணாப் பசு முத்து ஏய்ப்ப, குவி இணர்ப்
புன்னை அரும்பிய புலவு நீர்ச் சேர்ப்பன்
என்ன மகன்கொல்-தோழி!-தன்வயின்
ஆர்வம் உடையர் ஆகி,
மார்பு அணங்குறுநரை அறியாதோனே!

தலைமகன்சிறைப்புறமாக, தலைவி, தோழிக்கு உரைப்பாளாய்ச்சொல்லியது.-இளந்திரையனார்

95. குறிஞ்சி
கழை பாடு இரங்க, பல் இயம் கறங்க,
ஆடு மகள் நடந்த கொடும் புரி நோன் கயிற்று,
அதவத் தீம் கனி அன்ன செம் முகத்
துய்த் தலை மந்தி வன் பறழ் தூங்க,
5
கழைக் கண் இரும் பொறை ஏறி விசைத்து எழுந்து,
குறக் குறுமாக்கள் தாளம் கொட்டும் அக்
குன்றகத்ததுவே, குழு மிளைச் சீறூர்;
சீறூரோளே, நாறு மயிர்க் கொடிச்சி;
கொடிச்சி கையகத்ததுவே, பிறர்
10
விடுத்தற்கு ஆகாது பிணித்த என் நெஞ்சே.

தலைமகன் பாங்கற்கு, ''இவ்விடத்து இத்தன்மைத்து'' என உரைத்தது.-கோட்டம்பலவனார்

96. நெய்தல்
''இதுவே, நறு வீ ஞாழல் மா மலர்தாஅய்,
புன்னை ததைந்த வெண் மணல் ஒரு சிறை,
புதுவது புணர்ந்த பொழிலே; உதுவே,
பொம்மற் படு திரை நம்மோடு ஆடி,
5
புறம் தாழ்பு இருளிய பிறங்குகுரல் ஐம்பால்
துவரினர் அருளிய துறையே; அதுவே,
கொடுங் கழி நிவந்த நெடுங் கால் நெய்தல்
அம் பகை நெறித் தழை அணி பெறத் தைஇ,
தமியர் சென்ற கானல்'' என்று ஆங்கு
10
உள்ளுதோறு உள்ளுதோறு உருகி,
பைஇப் பையப் பசந்தனை பசப்பே.

சிறைப்புறமாகத்தோழி தலைவிக்கு உரைப்பாளாய் வரைவு கடாயது.-கோக்குளமுற்றனார்

97. முல்லை
அழுந்து படு விழுப் புண் வழும்பு வாய்புலரா
எவ்வ நெஞ்சத்து எஃகு எறிந்தாங்கு,
பிரிவில புலம்பி நுவலும் குயிலினும்,
தேறு நீர் கெழீஇய யாறு நனி கொடிதே;
5
அதனினும் கொடியள் தானே, ''மதனின்
துய்த் தலை இதழ பைங் குருக்கத்தியொடு
பித்திகை விரவு மலர் கொள்ளீரோ?'' என
வண்டு சூழ் வட்டியள் திரிதரும்
தண்டலை உழவர் தனி மட மகளே.

பருவம் கண்டு ஆற்றாளாய தலைவி தோழிக்கு உரைத்தது.-மாறன் வழுதி

98. குறிஞ்சி
எய்ம் முள் அன்ன பரூஉ மயிர்எருத்தின்
செய்ய்ம்ம் மேவல் சிறு கட் பன்றி
ஓங்கு மலை வியன் புனம் படீஇயர், வீங்கு பொறி
நூழை நுழையும் பொழுதில், தாழாது
5
பாங்கர்ப் பக்கத்துப் பல்லி பட்டென,
மெல்லமெல்லப் பிறக்கே பெயர்ந்து, தன்
கல் அளைப் பள்ளி வதியும் நாடன்!
எந்தை ஓம்பும் கடியுடை வியல் நகர்த்
துஞ்சாக் காவலர் இகழ் பதம் நோக்கி,
10
இரவின் வரூஉம் அதனினும் கொடிதே-
வைகலும் பொருந்தல் ஒல்லாக்
கண்ணொடு, வாரா என் நார் இல் நெஞ்சே!

இரவுக்குறி வந்து ஒழுகும்தலைவனைத் தோழி வரைவு கடாயது.-உக்கிரப் பெருவழுதி

99. முல்லை
''நீர் அற வறந்த நிரம்பா நீள்இடை,
துகில் விரித்தன்ன வெயில் அவிர் உருப்பின்,
அஞ்சுவரப் பனிக்கும் வெஞ் சுரம் இறந்தோர்
தாம் வரத் தெளித்த பருவம் காண்வர
5
இதுவோ?'' என்றிசின்-மடந்தை!-மதி இன்று,
மறந்து கடல் முகந்த கமஞ் சூல் மா மழை
பொறுத்தல்செல்லாது இறுத்த வண் பெயல்
கார் என்று அயர்ந்த உள்ளமொடு, தேர்வு இல-
பிடவமும், கொன்றையும் கோடலும்-
10
மடவ ஆகலின், மலர்ந்தன பலவே.

பருவம் கண்டு ஆற்றாளாய தலைவியைத் தோழி, ''பருவம் அன்று'' என்று வற்புறுத்தியது.-இளந்திரையனார்

100. மருதம்
உள்ளுதொறும் நகுவேன்-தோழி!-வள்உகிர்
மாரிக் கொக்கின் கூரல் அன்ன
குண்டு நீர் ஆம்பல் தண் துறை ஊரன்
தேம் கமழ் ஐம்பால் பற்றி, என் வயின்
5
வான் கோல் எல் வளை வௌவிய பூசல்
சினவிய முகத்து, ''சினவாது சென்று, நின்
மனையோட்கு உரைப்பல்'' என்றலின், முனை ஊர்ப்
பல் ஆ நெடு நிரை வில்லின் ஒய்யும்
தேர் வண் மலையன் முந்தை, பேர் இசைப்
10
புலம் புரி வயிரியர் நலம் புரி முழவின்
மண் ஆர் கண்ணின் அதிரும்,
நன்னர் ஆளன் நடுங்கு அஞர் நிலையே.

பரத்தை, தலைவிக்குப்பாங்காயினார் கேட்ப, விறலிக்கு உடம்படச்சொல்லியது.-பரணர்