51-60

51. குறிஞ்சி
யாங்குச் செய்வாம்கொல்-தோழி! ஓங்கு கழைக்
காம்புடை விடர் அகம் சிலம்ப, பாம்பு உடன்று
ஓங்கு வரை மிளிர ஆட்டி, வீங்கு செலல்
கடுங் குரல் ஏறொடு கனை துளி தலைஇப்
5
பெயல் ஆனாதே, வானம்; பெயலொடு
மின்னு நிமிர்ந்தன்ன வேலன் வந்தென,
பின்னு விடு முச்சி அளிப்பு ஆனாதே;
பெருந் தண் குளவி குழைத்த பா அடி,
இருஞ் சேறு ஆடிய நுதல, கொல்களிறு
10
பேதை ஆசினி ஒசித்த
வீ ததர் வேங்கைய மலை கிழவோற்கே?

ஆற்றாது ஏதம் அஞ்சி வேறுபட்டாள், வெறியாடலுற்ற இடத்து, சிறைப்புறமாகச்சொல்லியது.-பேராலவாயர்

52. பாலை
மாக் கொடி அதிரற் பூவொடு பாதிரித்
தூத் தகட்டு எதிர் மலர் வேய்ந்த கூந்தல்
மணம் கமழ் நாற்றம் மரீஇ, யாம் இவள்
சுணங்கு அணி ஆகம் அடைய முயங்கி,
5
வீங்கு உவர்க் கவவின் நீங்கல்செல்லேம்;
நீயே, ஆள்வினை சிறப்ப எண்ணி, நாளும்
பிரிந்து உறை வாழ்க்கை புரிந்து அமையலையே;
அன்பு இலை; வாழி, என் நெஞ்சே! வெம் போர்
மழவர் பெரு மகன் மா வள் ஓரி
10
கை வளம் இயைவது ஆயினும்,
ஐது ஏகு அம்ம, இயைந்து செய் பொருளே.

தலைமகன் செலவு அழுங்கியது.-பாலத்தனார்

53. குறிஞ்சி
யான் அஃது அஞ்சினென் கரப்பவும், தான் அஃது
அறிந்தனள்கொல்லோ? அருளினள்கொல்லோ?
எவன்கொல், தோழி! அன்னை கண்ணியது?-
''வான் உற நிவந்த பெரு மலைக் கவாஅன்,
5
ஆர் கலி வானம் தலைஇ, நடு நாள்
கனை பெயல் பொழிந்தென, கானக் கல் யாற்று
முளி இலை கழித்தன முகிழ் இணரொடு வரும்
விருந்தின் தீம் நீர் மருந்தும் ஆகும்;
தண்ணென உண்டு, கண்ணின் நோக்கி,
10
முனியாது ஆடப் பெறின், இவள்
பனியும் தீர்குவள், செல்க!'' என்றோளே!

வரைவு நீட்டிப்ப, தோழி சிறைப்புறமாகச் சொல்லியது.-நல்வேட்டனார்

54. நெய்தல்
வளை நீர் மேய்ந்து, கிளை முதல்செலீஇ,
வாப் பறை விரும்பினைஆயினும், தூச் சிறை
இரும் புலா அருந்தும் நின் கிளையொடு சிறிது இருந்து-
கருங் கால் வெண் குருகு!-எனவ கேண்மதி:
5
பெரும் புலம்பின்றே, சிறு புன் மாலை;
அது நீ அறியின், அன்புமார் உடையை;
நொதுமல் நெஞ்சம் கொள்ளாது, என் குறை
இற்றாங்கு உணர உரைமதி-தழையோர்
கொய்குழை அரும்பிய குமரி ஞாழல்
10
தெண் திரை மணிப் புறம் தைவரும்
கண்டல் வேலி நும் துறை கிழவோற்கே!

காமம் மிக்க கழிபடர்கிளவி.-சேந்தங் கண்ணனார்

55. குறிஞ்சி
ஓங்கு மலை நாட! ஒழிக, நின் வாய்மை
காம்பு தலைமணந்த கல் அதர்ச் சிறு நெறி,
உறு பகை பேணாது, இரவின் வந்து, இவள்
பொறி கிளர் ஆகம் புல்ல, தோள் சேர்பு
5
அறுகாற் பறவை அளவு இல மொய்த்தலின்,
கண் கோள் ஆக நோக்கி, ''பண்டும்
இனையையோ?'' என வினவினள், யாயே;
அதன் எதிர் சொல்லாளாகி, அல்லாந்து,
என் முகம் நோக்கியோளே: ''அன்னாய்!-
10
யாங்கு உணர்ந்து உய்குவள்கொல்? என, மடுத்த
சாந்த ஞெகிழி காட்டி-
ஈங்கு ஆயினவால்'' என்றிசின் யானே.

வரைவிடை மெலிவு ஆற்றுவிக்கும் தோழி தலைவற்குச் சொல்லியது.-பெருவழுதி

56. பாலை
குறு நிலைக் குரவின் சிறு நனை நறு வீ
வண்டு தரு நாற்றம் வளி கலந்து ஈய,
கண் களி பெறூஉம் கவின் பெறு காலை,
எல் வளை ஞெகிழ்த்தோர்க்கு அல்லல் உறீஇச்
5
சென்ற நெஞ்சம் செய்வினைக்கு அசாவா,
ஒருங்கு வரல் நசையொடு, வருந்தும்கொல்லோ
அருளான் ஆதலின், அழிந்து இவண் வந்து,
தொல் நலன் இழந்த என் பொன் நிறம் நோக்கி,
''ஏதிலாட்டி இவள்'' எனப்
10
போயின்று கொல்லோ, நோய் தலைமணந்தே

வரைவிடை மெலிவு ஆற்றுவிக்கும் தோழிக்குத் தலைவி சொல்லியது.-பெருவழுதி

57. குறிஞ்சி
தடங்கோட்டு ஆமான், மடங்கல் மா நிரைக்
குன்ற வேங்கைக் கன்றொடு வதிந்தென,
துஞ்சு பதம் பெற்ற துய்த் தலை மந்தி
கல்லென் சுற்றம் கை கவியாக் குறுகி,
5
வீங்கு சுரை ஞெமுங்க வாங்கி, தீம் பால்
கல்லா வன் பறழ்க் கைந் நிறை பிழியும்
மா மலை நாட! மருட்கை உடைத்தே-
செங் கோல், கொடுங் குரல், சிறு தினை வியன் புனம்
கொய் பதம் குறுகும்காலை, எம்
10
மை ஈர் ஓதி மாண் நலம் தொலைவே!

செறிப்பு அறிவுறீஇ வரைவு கடாயது.-பொதும்பில் கிழார்

58. நெய்தல்
பெரு முது செல்வர் பொன்னுடைப்புதல்வர்
சிறு தோட் கோத்த செவ் அரிப்பறையின்
கண்ணகத்து எழுதிய குரீஇப் போல,
கோல் கொண்டு அலைப்பப் படீஇயர்மாதோ-
5
வீரை வேண்மான் வெளியன் தித்தன்
முரசு முதல் கொளீஇய மாலை விளக்கின்
வெண் கோடு இயம்ப, நுண் பனி அரும்ப,
கையற வந்த பொழுதொடு மெய் சோர்ந்து,
அவல நெஞ்சினம் பெயர, உயர் திரை
10
நீடு நீர்ப் பனித் துறைச் சேர்ப்பன்
ஓடு தேர் நுண் நுகம் நுழைந்த மாவே!

பகற்குறி வந்து நீங்கும் தலைமகன் போக்கு நோக்கி, தோழி மாவின்மேல்வைத்துச் சொல்லியது.- முதுகூற்றனார்

59. முல்லை
உடும்பு கொலீஇ, வரி நுணல் அகழ்ந்து,
நெடுங் கோட்டுப் புற்றத்து ஈயல் கெண்டி,
எல்லு முயல் எறிந்த வேட்டுவன் சுவல
பல் வேறு பண்டத் தொடை மறந்து, இல்லத்து,
5
இரு மடைக் கள்ளின் இன் களி செருக்கும்
வன் புலக் காட்டு நாட்டதுவே-அன்பு கலந்து
நம்வயின் புரிந்த கொள்கையொடு, நெஞ்சத்து
உள்ளினள் உறைவோள் ஊரே; முல்லை
நுண் முகை அவிழ்ந்த புறவின்
10
பொறை தலை மணந்தன்று; உயவுமார் இனியே.

வினைமுற்றி மீள்வான்தேர்ப்பாகற்குச் சொல்லியது.- கபிலர்

60. மருதம்
மலை கண்டன்ன நிலை புணர்நிவப்பின்
பெரு நெற் பல் கூட்டு எருமை உழவ!
கண்படை பெறாஅது, தண் புலர் விடியல்,
கருங் கண் வராஅல் பெருந் தடி மிளிர்வையொடு
5
புகர்வை அரிசிப் பொம்மற் பெருஞ் சோறு
கவர் படு கையை கழும மாந்தி,
நீர் உறு செறுவின் நாறு முடி அழுத்த, நின்
நடுநரொடு சேறிஆயின், அவண்
சாயும் நெய்தலும் ஓம்புமதி; எம்மில்
10
மா இருங் கூந்தல் மடந்தை
ஆய் வளை கூட்டும் அணியுமார் அவையே.

சிறைப்புறமாக உழவர்க்குச் சொல்லுவாளாய்த் தோழி செறிப்பு அறிவுறீஇயது.-தூங்கலோரியார்