121-130

121. முல்லை
விதையர் கொன்ற முதையல் பூழி,
இடு முறை நிரப்பிய ஈர் இலை வரகின்
கவைக் கதிர் கறித்த காமர் மடப் பிணை,
அரலை அம் காட்டு இரலையொடு, வதியும்
5
புறவிற்று அம்ம, நீ நயந்தோள் ஊரே:
''எல்லி விட்டன்று, வேந்து'' எனச் சொல்லுபு
பரியல்; வாழ்க, நின் கண்ணி!-காண் வர
விரி உளைப் பொலிந்த வீங்கு செலல் கலி மா
வண் பரி தயங்க எழீஇ, தண் பெயற்
10
கான் யாற்று இகுமணற் கரை பிறக்கு ஒழிய,
எல் விருந்து அயரும் மனைவி
மெல் இறைப் பணைத் தோள் துயில் அமர்வோயே!

வினை முற்றி மறுத்தரும்தலைமகற்குத் தேர்ப்பாகன் சொல்லியது.-ஒரு சிறைப்பெரியனார்

122. குறிஞ்சி
இருங் கல் அடுக்கத்து என்னையர் உழுத
கருங் கால் செந்தினை கடியுமுண்டென;
கல்லக வரைப்பில் கான் கெழு சிறுகுடி
மெல் அவல் மருங்கின் மௌவலும் அரும்பின;
5
''நரை உரும் உரறும் நாம நள் இருள்
வரையக நாடன் வரூஉம் என்பது
உண்டுகொல்? அன்றுகொல்? யாதுகொல் மற்று?'' என
நின்று, மதி வல் உள்ளமொடு மறைந்தவை ஆடி,
அன்னையும் அமரா முகத்தினள்; நின்னொடு
10
நீயே சூழ்தல் வேண்டும்-
பூ வேய் கண்ணி!-அது பொருந்துமாறே.

சிறைப்புறமாகத்தோழி தலைவிக்கு உரைப்பாளாய்த் தலைவன் கேட்பச்சொல்லியது.-செங்கண்ணனார்

123. நெய்தல்
உரையாய்-வாழி, தோழி!-இருங் கழி
இரை ஆர் குருகின் நிரை பறைத் தொழுதி
வாங்கு மடற் குடம்பை, தூங்கு இருள் துவன்றும்
பெண்ணை ஓங்கிய வெண் மணற் படப்பை,
5
கானல் ஆயமொடு காலைக் குற்ற
கள் கமழ் அலர தண் நறுங் காவி
அம் பகை நெறித் தழை அணிபெறத் தைஇ,
வரி புனை சிற்றில் பரி சிறந்து ஓடி,
புலவுத் திரை உதைத்த கொடுந் தாட் கண்டல்
10
சேர்ப்பு ஏர் ஈர் அளை அலவன் பார்க்கும்
சிறு விளையாடலும் அழுங்கி,
நினைக்குறு பெருந் துயரம் ஆகிய நோயே.

தலைவன்சிறைப்புறத்தானாக, தோழி தலைவிக்கு உரைப்பாளாய்ச்சொல்லியது.- காஞ்சிப் புலவனார்

124. நெய்தல்
ஒன்று இல் காலை அன்றில் போலப்
புலம்பு கொண்டு உறையும் புன்கண் வாழ்க்கை
யானும் ஆற்றேன்; அதுதானும் வந்தன்று-
நீங்கல்; வாழியர்; ஐய!-ஈங்கை
5
முகை வீ அதிரல் மோட்டு மணல் எக்கர்,
நவ்வி நோன் குளம்பு அழுந்தென, வெள்ளி
உருக்குறு கொள்கலம் கடுப்ப, விருப்புறத்
தெண் நீர்க் குமிழி இழிதரும்
தண்ணீர் ததைஇ நின்ற பொழுதே.

பிரிவு உணர்த்தப்பட்ட தோழி தலைவற்கு உரைத்தது.-மோசி கண்ணத்தனார்

125.குறிஞ்சி
''இரை தேர் எண்கின் பகு வாய் ஏற்றை
கொடு வரிப் புற்றம் வாய்ப்ப வாங்கி,
நல் அரா நடுங்க உரறி, கொல்லன்
ஊது உலைக் குருகின் உள் உயிர்த்து, அகழும்
5
நடு நாள் வருதல் அஞ்சுதும் யாம்'' என,
வரைந்து வரல் இரக்குவம் ஆயின், நம் மலை
நல் நாள் வதுவை கூடி, நீடு இன்று
நம்மொடு செல்வர்மன்-தோழி!-மெல்ல
வேங்கைக் கண்ணியர் எருது எறி களமர்
10
நிலம் கண்டன்ன அகன் கண் பாசறை,
மென் தினை நெடும் போர் புரிமார்
துஞ்சு களிறு எடுப்பும் தம் பெருங் கல் நாட்டே.

வரைவு நீட்டிப்ப, ஆற்றாளாய தலைவியைத் தோழி வற்புறுத்தியது.

126. பாலை
பைங் காய் நல் இடம் ஒரீஇய செங்காய்க்
கருங் களி ஈந்தின் வெண் புறக் களரி
இடு நீறு ஆடிய கடு நடை ஒருத்தல்
ஆள் பெறல் நசைஇ, நாள் சுரம் விலங்கி,
5
துனைதரும் வம்பலர்க் காணாது, அச் சினம்
பனைக் கான்று ஆறும் பாழ் நாட்டு அத்தம்,
இறந்து செய் பொருளும் இன்பம் தரும் எனின்,
இளமையின் சிறந்த வளமையும் இல்லை;
இளமை கழிந்த பின்றை, வளமை
10
காமம் தருதலும் இன்றே; அதனால்,
நில்லாப் பொருட் பிணிச் சேறி;
வல்லே-நெஞ்சம்!-வாய்க்க நின் வினையே!

பொருள் வலித்த நெஞ்சினைத் தலைவன் நெருங்கிச் செலவு அழுங்கியது.

127. நெய்தல்
இருங் கழி துழைஇய ஈர்ம் புற நாரை
இற எறி திவலையின் பனிக்கும் பாக்கத்து,
உவன் வரின், எவனோ?-பாண!-பேதை
கொழு மீன் ஆர்கைச் செழு நகர் நிறைந்த
5
கல்லாக் கதவர் தன் ஐயர் ஆகவும்,
வண்டல் ஆயமொடு பண்டு தான் ஆடிய
ஈனாப் பாவை தலையிட்டு ஓரும்,
''மெல்லம் புலம்பன் அன்றியும்,
செல்வாம்'' என்னும், ''கானலானே''.

பாணற்குத் தோழி வாயில் மறுத்தது.-சீத்தலைச் சாத்தனார்

128. குறிஞ்சி
''பகல் எரி சுடரின் மேனி சாயவும்,
பாம்பு ஊர் மதியின் நுதல் ஒளி கரப்பவும்
எனக்கு நீ உரையாயாயினை; நினக்கு யான்
உயிர் பகுத்தன்ன மாண்பினேன் ஆகலின்,
5
அது கண்டிசினால் யானே'' என்று, நனி
அழுதல் ஆன்றிசின்-ஆயிழை!-ஒலி குரல்
ஏனல் காவலினிடை உற்று ஒருவன்,
கண்ணியன், கழலன், தாரன், தண்ணெனச்
சிறு புறம் கவையினனாக, அதற்கொண்டு
10
அஃதே நினைந்த நெஞ்சமொடு
இஃது ஆகின்று, யான் உற்ற நோயே.

குறை நேர்ந்த தோழி தலைவி குறை நயப்பக் கூறியது. தோழிக்குத் தலைவி அறத்தொடு நின்றதூஉம் ஆம்.- நற்சேந்தனாா

129. குறிஞ்சி
பெரு நகை கேளாய், தோழி! காதலர்
ஒரு நாள் கழியினும் உயிர் வேறுபடூஉம்
பொம்மல் ஓதி! நம் இவண் ஒழியச்
செல்ப என்ப, தாமே; சென்று,
5
தம் வினை முற்றி வரூஉம் வரை, நம் மனை
வாழ்தும் என்ப, நாமே, அதன்தலை-
கேழ் கிளர் உத்தி அரவுத் தலை பனிப்ப,
படு மழை உருமின் உரற்று குரல்
நடு நாள் யாமத்தும் தமியம் கேட்டே.

பிரிவு உணர்த்தப்பட்ட தோழி, தலைமகளை முகம் புக்கது.-ஒளவையார்

130. நெய்தல்
வடு இன்று நிறைந்த மான் தேர்த்தெண் கண்
மடிவாய்த் தண்ணுமை நடுவண் ஆர்ப்ப,
கோலின் எறிந்து காலைத் தோன்றிய
செந் நீர்ப் பொது வினைச் செம்மல் மூதூர்த்
5
தமது செய் வாழ்க்கையின் இனியது உண்டோ?
எனை விருப்புடையர் ஆயினும், நினைவிலர்;
நேர்ந்த நெஞ்சும் நெகிழ்ந்த தோளும்
வாடிய வரியும் நோக்கி, நீடாது,
''எவன் செய்தனள், இப் பேர் அஞர் உறுவி?'' என்று
10
ஒரு நாள் கூறின்றுமிலரே; விரிநீர்
வையக வரையளவு இறந்த,
எவ்வ நோய்; பிறிது உயவுத் துணை இன்றே.

பிரிவிடை மெலிந்த தலைவி வன்புறை எதிரழிந்து சொல்லியது.- நெய்தல்தத்தனார்