141-150

141. பாலை
இருஞ் சேறு ஆடிய கொடுங் கவுள், கய வாய்,
மாரி யானையின் மருங்குல் தீண்டி,
பொரி அரை ஞெமிர்ந்த புழற் காய்க் கொன்றை,
நீடிய சடையோடு ஆடா மேனிக்
5
குன்று உறை தவசியர் போல, பல உடன்
என்றூழ் நீள் இடைப் பொற்பத் தோன்றும்
அருஞ் சுரம் எளியமன், நினக்கே; பருந்து பட,
பாண்டிலொடு பொருத பல் பிணர்த் தடக் கை
ஏந்து கோட்டு யானை இசை வெங் கிள்ளி
10
வம்பு அணி உயர் கொடி அம்பர் சூழ்ந்த
அரிசில் அம் தண் அறல் அன்ன, இவள்
விரி ஒலி கூந்தல் விட்டு அமைகலனே.

பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குத் தலைவன் சொல்லிச் செலவு அழுங்கியது.-சல்லியங்குமரனார்

142. முல்லை
வான் இகுபு சொரிந்த வயங்கு பெயற்கடை நாள்,
பாணி கொண்ட பல் கால் மெல் உறி
ஞெலி கோல் கலப் பை அதளொடு சுருக்கி,
பறிப் புறத்து இட்ட பால் நொடை இடையன்
5
நுண் பல் துவலை ஒரு திறம் நனைப்ப,
தண்டு கால் வைத்த ஒடுங்கு நிலை மடி விளி
சிறு தலைத் தொழுதி ஏமார்த்து அல்கும்
புறவினதுவே-பொய்யா யாணர்,
அல்லில் ஆயினும் விருந்து வரின் உவக்கும்,
10
முல்லை சான்ற கற்பின்,
மெல் இயற் குறுமகள் உறைவின், ஊரே.

வினை முற்றி மீளும்தலைமகன், தேர்ப்பாகற்குச் சொல்லியது.-இடைக்காடனார்

143. பாலை
ஐதே கம்ம யானே; ஒய்யென,
தரு மணல் ஞெமிரிய திரு நகர் முற்றத்து,
ஓரை ஆயமும் நொச்சியும் காண்தொறும்,
நீர் வார் கண்ணேன் கலுழும் என்னினும்,
5
கிள்ளையும், ''கிளை'' எனக் கூஉம்; இளையோள்
வழு இலள் அம்ம, தானே; குழீஇ,
அம்பல் மூதூர் அலர் வாய்ப் பெண்டிர்
இன்னா இன் உரை கேட்ட சில் நாள்
அறியேன் போல உயிரேன்;
10
''நறிய நாறும் நின் கதுப்பு'' என்றேனே.

மனை மருட்சி.-கண்ணகாரன் கொற்றனார்

144. குறிஞ்சி
பெருங் களிறு உழுவை தாக்கலின், இரும் பிடி
கருவி மா மழையின் அரவம் அஞ்சுபு,
போது ஏர் உண் கண் கலுழவும், ஏதில்
பேதை நெஞ்சம் கவலை கவற்ற
5
ஈங்கு ஆகின்றால்-தோழி!-பகுவாய்ப்
பிணவுப் புலி வழங்கும் அணங்கு அருங் கவலை,
அவிர் அறல் ஒழுகும் விரை செலல் கான் யாற்றுக்
கரை அருங் குட்டம் தமியர் நீந்தி,
விரவு மலர் பொறித்த தோளர்
10
இரவின் வருதல் அறியாதேற்கே.

ஆற்றது ஏதத்திற்குக்கவன்று சிறைப்புறமாகத் தலைவி சொல்லியது.-கச்சிப்பேட்டுப் பெருந்தச்சனார்

145. நெய்தல்
இருங் கழி பொருத ஈர வெண் மணல்
மாக் கொடி அடும்பின் மா இதழ் அலரி
கூந்தல் மகளிர் கோதைக் கூட்டும்
காமர் கொண்கன், நாம் வெங் கேண்மை
5
ஐது ஏய்ந்தில்லா ஊங்கும், நம்மொடு
புணர்ந்தனன் போல உணரக் கூறி,
''தான் யாங்கு?'' என்னும் அறன் இல் அன்னை;
யான் எழில் அறிதலும் உரியள் நீயும்; நம்
பராரைப் புன்னைச் சேரி, மெல்ல,
10
நள்ளென் கங்குலும், வருமரோ-
அம்ம வாழி!-தோழி அவர் தேர் மணிக் குரலே!

இரவுக்குறி வந்து தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழி வரைவுகடாயது.-நம்பி குட்டுவன்

146. குறிஞ்சி
வில்லாப் பூவின் கண்ணி சூடி,
''நல் ஏமுறுவல்'' என, பல் ஊர் திரிதரு
நெடு மாப் பெண்ணை மடல் மானோயே!-
கடன் அறி மன்னர் குடை நிழற் போலப்
5
பெருந் தண்ணென்ற மர நிழல் சிறிது இழிந்து,
இருந்தனை சென்மோ-''வழங்குக சுடர்!'' என,
அருளிக் கூடும் ஆர்வ மாக்கள்
நல்லேம் என்னும் கிளவி வல்லோன்
எழுதி அன்ன காண் தகு வனப்பின்
10
ஐயள், மாயோள், அணங்கிய
மையல் நெஞ்சம் என் மொழிக் கொளினே!

பின்னின்ற தலைவன்முன்னிலைப் புறமொழியாக, தோழி கேட்பச்சொல்லியது.-கந்தரத்தனார்

147. குறிஞ்சி
யாங்கு ஆகுவமோ-''அணி நுதற் குறுமகள்!
தேம் படு சாரற் சிறு தினைப் பெருங் குரல்
செவ் வாய்ப் பைங் கிளி கவர, நீ மற்று
எவ் வாய்ச் சென்றனை, அவண்?'' எனக் கூறி,
5
அன்னை ஆனாள் கழற, முன் நின்று,
''அருவி ஆர்க்கும் பெரு வரை நாடனை
அறியலும் அறியேன்; காண்டலும் இலனே;
வெதிர் புனை தட்டையேன் மலர் பூக் கொய்து,
சுனை பாய்ந்து ஆடிற்றும் இலன்'' என நினைவிலை
10
பொய்யல், அந்தோ! வாய்த்தனை? அது கேட்டு,
தலை இறைஞ்சினளே அன்னை;
செலவு ஒழிந்தனையால், அளியை நீ, புனத்தே?

சிறைப்புறமாகத்தோழி சொல்லியது.-கொள்ளம்பக்கனார்

148. பாலை
வண்ணம் நோக்கியும், மென் மொழி கூறியும்,
''நீ அவண் வருதல் ஆற்றாய்'' எனத் தாம்
தொடங்கி ஆள்வினைப் பிரிந்தோர், இன்றே,
நெடுங் கயம் புரிந்த நீர் இல் நீள் இடை,
5
செங் கால் மராஅத்து அம் புடைப் பொருந்தி,
வாங்கு சிலை மறவர் வீங்கு நிலை அஞ்சாது,
கல் அளைச் செறிந்த வள் உகிர்ப் பிணவின்
இன் புனிற்று இடும்பை தீர, சினம் சிறந்து,
செங் கண் இரும் புலிக் கோள் வல் ஏற்றை
10
உயர் மருப்பு ஒருத்தல் புகர் முகம் பாயும்
அருஞ் சுரம் இறப்ப என்ப;
வருந்தேன்-தோழி!-வாய்க்க, அவர் செலவே!

பிரிவுணர்ந்து வேறுபட்ட தலைவியைத் தோழி வற்புறீஇயது.-கள்ளம்பாளனார்

149. நெய்தல்
சிலரும் பலரும் கடைக்கண் நோக்கி,
மூக்கின் உச்சிச் சுட்டு விரல் சேர்த்தி,
மறுகில் பெண்டிர் அம்பல் தூற்ற,
சிறு கோல் வலந்தனள் அன்னை அலைப்ப,
5
அலந்தனென் வாழி-தோழி!-கானல்
புது மலர் தீண்டிய பூ நாறு குரூஉச் சுவல்
கடு மான் பரிய கதழ் பரி கடைஇ,
நடு நாள் வரூஉம் இயல் தேர்க் கொண்கனொடு
செலவு அயர்ந்திசினால், யானே;
10
அலர் சுமந்து ஒழிக, இவ் அழுங்கல் ஊரே!

தோழி தலைவியை உடன்போக்கு வலித்தது; சிறைப்புறமாகச் சொல்லியதூஉம் ஆம்.- உலோச்சனார்

150. மருதம்
நகை நன்கு உடையன்-பாண!-நும் பெருமகன்:
''மிளை வலி சிதையக் களிறு பல பரப்பி,
அரண் பல கடந்த முரண் கொள் தானை
வழுதி, வாழிய பல! எனத் தொழுது, ஈண்டு
5
மன் எயில் உடையோர் போல, அஃது யாம்
என்னதும் பரியலோ இலம்'' எனத் தண் நடைக்
கலி மா கடைஇ வந்து, எம் சேரித்
தாரும் கண்ணியும் காட்டி, ஒருமைய
நெஞ்சம் கொண்டமை விடுமோ? அஞ்ச,
10
கண்ணுடைச் சிறு கோல் பற்றிக்
கதம் பெரிது உடையள், யாய்; அழுங்கலோ இலளே.

தலைநின்று ஒழுகப்படா நின்ற பரத்தை தலைவனை நெருங்கிப் பாணற்கு உரைத்தது.-கடுவன் இளமள்ளனார்