211-220

211. நெய்தல்
யார்க்கு நொந்து உரைக்கோ யானே-ஊர் கடல்
ஓதம் சென்ற உப்புடைச் செறுவில்,
கொடுங் கழி மருங்கின், இரை வேட்டு எழுந்த
கருங் கால் குருகின் கோள் உய்ந்து போகிய
5
முடங்கு புற இறவின் மோவாய் ஏற்றை,
எறி திரை தொகுத்த எக்கர் நெடுங் கோட்டுத்
துறு கடற் தலைய தோடு பொதி தாழை
வண்டு படு வான் போது வெரூஉம்
துறை கெழு கொண்கன் துறந்தனன் எனவே?

வரைவு நீட ஒருதலை ஆற்றாளாம் என்ற தோழி சிறைப்புறமாகத் தன்னுள்ளே சொல்லியது.-கோட்டியூர் நல்லந்தையார்

212. பாலை
பார்வை வேட்டுவன் படு வலை வெரீஇ,
நெடுங் கால் கணந்துள்அம் புலம்பு கொள் தெள் விளி
சுரம் செல் கோடியர் கதுமென இசைக்கும்
நரம்பொடு கொள்ளும் அத்தத்து ஆங்கண்
5
கடுங் குரற் பம்பைக் கத நாய் வடுகர்
நெடும் பெருங் குன்றம் நீந்தி, நம் வயின்
வந்தனர்; வாழி-தோழி!-கையதை
செம் பொன் கழல்தொடி நோக்கி, மா மகன்
கவவுக் கொள் இன் குரல் கேட்டொறும்,
10
அவவுக் கொள் மனத்தேம் ஆகிய நமக்கே.

பொருள் முடித்துத் தலைமகனோடு வந்த வாயில்கள்வாய் வரவு கேட்ட தோழி தலை மகட்குச் சொல்லியது.-குடவாயிற் கீரத்தனார்

213. குறிஞ்சி
அருவி ஆர்க்கும் பெரு வரை நண்ணி,
''கன்று கால்யாத்த மன்றப் பலவின்
வேர்க் கொண்டு தூங்கும் கொழுஞ் சுளைப் பெரும் பழம்
குழவிச் சேதா மாந்தி, அயலது
5
வேய் பயில் இறும்பின் ஆம் அறல் பருகும்
பெருங் கல் வேலிச் சிறுகுடி யாது?'' என,
சொல்லவும் சொல்லீர்; ஆயின், கல்லென
கருவி மா மழை வீழ்ந்தென, எழுந்த
செங் கேழ் ஆடிய செழுங் குரற் சிறு தினைக்
10
கொய் புனம் காவலும் நுமதோ?-
கோடு ஏந்து அல்குல், நீள் தோளீரே!

மதி உடன்படுக்கும் தலைமகன் சொல்லியது.-கச்சிப்பேட்டுப் பெருந்தச்சனார்

214. பாலை
''இசையும் இன்பமும் ஈதலும் மூன்றும்
அசையுநர் இருந்தோர்க்கு அரும் புணர்வு ஈன்ம்'' என,
வினைவயின் பிரிந்த வேறுபடு கொள்கை,
''அரும்பு அவிழ் அலரிச் சுரும்பு உண் பல் போது
5
அணிய வருதும், நின் மணி இருங் கதுப்பு'' என,
எஞ்சா வஞ்சினம் நெஞ்சு உணக் கூறி,
மை சூழ் வெற்பின் மலை பல இறந்து,
செய் பொருட்கு அகன்ற செயிர் தீர் காதலர்
கேளார்கொல்லோ-தோழி!-தோள
10
இலங்கு வளை நெகிழ்த்த கலங்கு அஞர் எள்ளி
நகுவது போல, மின்னி
ஆர்ப்பது போலும் இக் கார்ப் பெயற் குரலே?

உலகியலால் பிரிவு உணர்த்தப்பட்ட தலைமகன் குறித்த பருவம் கண்டு தலைமகள் சொல்லியது.-கருவூர்க் கோசனார்

215. நெய்தல்
குண கடல் இவர்ந்து, குரூஉக் கதிர் பரப்பி,
பகல் கெழு செல்வன் குடமலை மறைய,
புலம்பு வந்து இறுத்த புன்கண் மாலை,
இலங்கு வளை மகளிர் வியல் நகர் அயர,
5
மீன் நிணம் தொகுத்த ஊன் நெய் ஒண் சுடர்
நீல் நிறப் பரப்பில் தயங்கு திரை உதைப்ப;
கரை சேர்பு இருந்த கல்லென் பாக்கத்து,
இன்று நீ இவணை ஆகி, எம்மொடு
தங்கின் எவனோதெய்ய? செங்கால்
10
கொடு முடி அவ் வலை பரியப் போகிய
கோட் சுறாக் குறித்த முன்பொடு
வேட்டம் வாயாது எமர் வாரலரே.

பகற் குறி வந்து மீள்வானை ''அவள் ஆற்றும் தன்மையள் அல்லள்;நீயிர் இங்குத் தங்கற் பாலீர்; எமரும் இன்னது ஒரு தவற்றினர்'' எனத் தோழி தலைமகற்குச் சொல்லியது. இரவுக் குறி மறுத்து வரைவு கடாயதூஉம் ஆம்.-மதுரைச் சுள்ளம் போதனார்

216. மருதம்
துனி தீர் கூட்டமொடு துன்னார் ஆயினும்,
இனிதே, காணுநர்க் காண்புழி வாழ்தல்;
கண்ணுறு விழுமம் கை போல் உதவி,
நம் உறு துயரம் களையார்ஆயினும்,
5
இன்னாதுஅன்றே, அவர் இல் ஊரே;
எரி மருள் வேங்கைக் கடவுள் காக்கும்
குருகு ஆர் கழனியின் இதணத்து ஆங்கண்,
ஏதிலாளன் கவலை கவற்ற,
ஒரு முலை அறுத்த திருமாவுண்ணிக்
10
கேட்டோர் அனையராயினும்,
வேட்டோர் அல்லது, பிறர் இன்னாரே.

தலைமகட்குப் பாங்காயினார் கேட்பத் தலைமகன் தலைநின்று ஒழுகப் படாநின்ற பரத்தை, பாணற்குஆயினும் விறலிக்குஆயினும் சொல்லுவாளாய், நெருங்கிச் சொல்லியது.-மதுரை மருதன் இளநாகனார்

217. குறிஞ்சி
இசை பட வாழ்பவர் செல்வம் போலக்
காண் தொறும் பொலியும், கதழ் வாய் வேழம்,
இருங் கேழ் வயப் புலி வெரீஇ, அயலது
கருங் கால் வேங்கை ஊறுபட மறலி,
5
பெருஞ் சினம் தணியும் குன்றநாடன்
நனி பெரிது இனியனாயினும், துனி படர்ந்து
ஊடல் உறுவேன்-தோழி!-நீடு
புலம்பு சேண் அகல நீக்கி,
புலவி உணர்த்தல் வன்மையானே.

தலைமகள் வாயில் மறுத்தது.-கபிலர்.

218. நெய்தல்
ஞாயிறு ஞான்று கதிர் மழுங்கின்றே;
எல்லியும், பூ வீ கொடியின் புலம்பு அடைந்தன்றே;
வாவலும் வயின்தொறும் பறக்கும்; சேவலும்
நகை வாய்க் கொளீஇ நகுதொறும் விளிக்கும்;
5
ஆயாக் காதலொடு அதர்ப் படத் தெளித்தோர்
கூறிய பருவம் கழிந்தன்று; பாரிய
பராரை வேம்பின் படு சினை இருந்த
குராஅற் கூகையும் இராஅ இசைக்கும்;
ஆனா நோய் அட வருந்தி, இன்னும்
10
தமியேன் கேட்குவென் கொல்லோ,
பரியரைப் பெண்ணை அன்றிற் குரலே?

வரைவிடை மெலிந்த தலைமகள் வன்புறை எதிர்மொழிந்தது.கிடங்கில் - காவிதிக் கீரங்கண்ணனார்

219. நெய்தல்
கண்ணும் தோளும் தண் நறுங் கதுப்பும்
பழ நலம் இழந்து பசலை பாய,
இன் உயிர் பெரும்பிறிது ஆயினும், என்னதூஉம்
புலவேன் வாழி-தோழி!-சிறு கால்
5
அலவனொடு பெயரும் புலவுத் திரை நளி கடல்
பெரு மீன் கொள்ளும் சிறுகுடிப் பரதவர்
கங்குல் மாட்டிய கனை கதிர் ஒண் சுடர்
முதிரா ஞாயிற்று எதிர் ஒளி கடுக்கும்
கானல்அம் பெருந் துறைச் சேர்ப்பன்-
10
தானே யானே புணர்ந்தமாறே.

வரைவிடை வைத்துப் பிரிய ஆற்றாளாய தலைமகள் தோழிக்குச் சொல்லியது.-தாயங்கண்ணனார்

220. குறிஞ்சி
சிறு மணி தொடர்ந்து, பெருங் கச்சு நிறீஇ,
குறு முகிழ் எருக்கங் கண்ணி சூடி,
உண்ணா நல் மாப் பண்ணி, எம்முடன்
மறுகுடன் திரிதரும் சிறு குறுமாக்கள்,
5
பெரிதும் சான்றோர்மன்ற-விசிபிணி
முழவுக் கண் புலரா விழவுடை ஆங்கண்,
''ஊரேம்'' என்னும் இப் பேர் ஏமுறுநர்
தாமே ஒப்புரவு அறியின், ''தேமொழிக்
கயல் ஏர் உண்கண் குறுமகட்கு
10
அயலோர் ஆகல்'' என்று எம்மொடு படலே!

குறை நேர்ந்த தோழி தலைமகளை முகம் புக்கது. பின்னின்ற தலைமகன் தோழி கேட்பத் தலைமகளை ஓம்படுத்ததூஉம் ஆம்.தான் ஆற்றானாய்ச் சொல்லியதூஉம் ஆம்.-குண்டுகட்பாலியாதனார்